வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (25/09/2018)

கடைசி தொடர்பு:15:52 (25/09/2018)

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்... நம் வேலைகளுக்கு சவாலா?! சமாளிக்க முடியுமா?! #AI

`செயற்கை நுண்ணறிவுச் சார்ந்த பிரிவுகளில் வேலை தேடுவது கடந்த இரண்டு ஆண்டுகளில் 179 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. வேலை வழங்கும் நிறுவனங்களின் எதிர்பார்ப்பும் இரண்டு மடங்காகக் கூடி இருக்கிறது'

ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜன்ஸ்... நம் வேலைகளுக்கு சவாலா?! சமாளிக்க முடியுமா?! #AI

`செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence) தகவல் தொழில்நுட்பத் துறையிலும், இதர தொழில் நிறுவனங்களிலும் 2022-ம் ஆண்டுக்குள் 50 சதவிகித வேலை வாய்ப்புகள் மாற்றியமைக்கப்படும்' என்கிறது நாஸ்காம். 

எர்னஸ் யங் மற்றும் நாஸ்காம் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், `2022-ம் ஆண்டில்,  செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் தற்போது உள்ள வேலைகளில் 46 சதவிகித வேலை வாய்ப்புகள் மாற்றியமைக்கப்படும். பல பிரிவுகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இதற்குத் தேவையான திறன்களை வளர்த்துக்கொண்டால் வேலை வாய்ப்பு சந்தையில் மிகப்பெரிய மதிப்பைப் பெற முடியும். 

புதியதாக வேலை தேடும் இளைஞர்களும், ஏற்கெனவே பணியில் இருப்பவர்களும் புரோகிராமிங் திறன், சேவை அல்லது உற்பத்திப் பிரிவு சார்ந்த தேவையான தகவல்களைப் பெறும் திறன், தனிப்பட்ட திறன்களை மேம்படுத்திக்கொள்வதில் ஆர்வத்தை ஏற்படுத்திக்கொண்டால் செயற்கை நுண்ணறிவு துறையில் நிபுணத்துவம் பெறலாம்.

வேலை artificial intelligence

கல்வித்துறை, நெட்வோர்க்கிங், நிதி மற்றும் உற்பத்தி பிரிவுகளிலும் செயற்கை நுண்ணறிவின் தாக்கத்தால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்' என்று வேலையில் இருப்பவர்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் ஆலோசனை வழங்கி உள்ளது.   

மேலும், `இந்தியாவில் 2017-ம் ஆண்டில் 73 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் அதிகளவில் முதலீடு செய்வதற்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இளைஞர்கள் இந்தத் துறைகளில் வேலை வாய்ப்பைப் பெற தயாராக இருக்க வேண்டும்' என்கிறது நாஸ்காம். இது குறித்து நாஸ்காம் அமைப்பின் தமிழ்நாடு மண்டலத் தலைவர் செந்தில்குமாரிடம் பேசினோம்.

செந்தில்குமார் நாஸ்காம் வேலை வாய்ப்பு இவர், ``சில துறைகளில் மனித வளத்தின் தேவைகள் குறைந்து, இயந்திரங்களே அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கும்வகையில் ஆட்டோமேஷனும், ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜன்ஸும் முக்கியப் பங்காற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனை வாய்ப்பாக மாற்ற நினைப்பவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழைய ஆர்வமாக இருப்பவர்களுக்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆர்ட்டிஃபீஷியல் இன்டெலிஜன்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங், பிக் டேட்டா போன்ற பிரிவுகளில்  இளைஞர்கள் கூடுதல் அறிவை வளர்த்துக்கொண்டால் சிறப்பான வேலை வாய்ப்பைப் பெறலாம். தற்போது இந்தத் துறையில் தகுந்த நிபுணத்துவம் பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. நாஸ்காம் உட்படப் பல அமைப்புகள் புதிய பிரிவுகளில் திறனை வளர்த்துக்கொள்ள பயிற்சி வழங்குகின்றன. இதில் ஆர்வத்துடன் இணைந்து பயன்பெறலாம்" என்றார்.

`செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிரிவுகளில் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை, 2016-ம் ஆண்டு ஜூன் முதல் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை 179 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. வேலை வழங்கும் நிறுவனங்களின் எதிர்பார்ப்பும் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது' என்று சுட்டிக்காட்டியிருக்கிறது வேலை தேடு தளங்களில் முன்னணி நிறுவனமான இண்டீட் (Indeed).

பாஸ்டன் கன்சல்டிங் குரூப் தனது ஆய்வறிக்கையில், `சீனா, இந்தியா, சிங்கப்பூர் தொழில் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றன. இங்குக் குறுகிய காலத்திலேயே பிராசசஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஜினீயரிங் பிரிவுகள், ஹெல்த்கேர் மற்றும் எனர்ஜி துறைகளில் செயற்கை நுண்ணறிவை ஆர்வத்துடன் அறிமுகப்படுத்தி வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு முன்கூட்டியே செயல்படுத்துவதில் அமெரிக்கா (25%), சீனா (23%), இந்தியா (19%), ஜப்பான் (11%), சிங்கப்பூர் (10%), பிரான்ஸ் (10%) போன்ற நாடுகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றன' என்கிறது. 

 

வேலை Artificial Intelligence

மத்திய அரசின் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான நிதி ஆயோக், `அனைவருக்கும் செயற்கை நுண்ணறிவு' என்ற திட்டத்தை முன் வைத்திருக்கிறது. இந்தத் திட்டத்தில், முதல்கட்டமாக, `ஹெல்த்கேர், வேளாண்மை, கல்வி, ஸ்மார்ட் சிட்டிகளின் உள்கட்டமைப்பு, போக்குவரத்து துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளது.  

லிங்க்டுஇன் (LinkedIn) நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், `மனிதனுடைய நுண்ணறிவுக்கு இணையாக இயந்திரங்களே நுண்ணறிவுடன் செயல்படும் அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்திட பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. தற்போது, மெஷின் லேர்னிங் மற்றும் டீப் லேர்னிங் அல்காரிதம், பிக் டேட்டாக்கள் தொழில்துறையில் ஆட்டோமேஷனுக்கும், செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கும் அதிகளவில் வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு திறன் மேம்பாட்டில் 2015-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுக்குள் அதிவேகமாக 190 சதவிகிதம் வளர்ச்சியடைந்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு பிரிவின் பயன்பாட்டிலும், திறனை மேம்படுத்துவதிலும் சர்வதேச அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது' என்கிறது. 

வளர்ந்து வரும்போதே தகுந்த திறன்களை உருவாக்கிக்கொண்டால் வாய்ப்புகள் ஏராளம்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்