வெளியிடப்பட்ட நேரம்: 12:49 (25/09/2018)

கடைசி தொடர்பு:12:49 (25/09/2018)

``கணவர் போன பிறகு எனக்குப் பேசுவதற்கு தெம்பில்லை!'' -பாடகி வாணி ஜெயராம் உருக்கம்

பின்னணி பாடகி வாணி ஜெயராம் ஹலோ சொல்வதே குயில் கூவுவது போலத்தான் இருக்கும். ஆனால், சமீப காலமாக அவர் போனை எடுக்கும் போதெல்லாம் அவர் குரலில் எப்போதும் குடிகொண்டிருக்கும் பழைய உற்சாகத்தை உணர முடியவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு மிகுந்த யோசனைக்குப் பிறகு, ``ஜெயராம்ஜிக்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடல்ல அட்மிட் செய்திருக்கோம். நான் அவர்கூட இருக்கிறதால சட்டுனு போனை எடுக்க முடியுறதில்லை'' என்றார். தொடர்ந்து ``இதைப் பற்றியெல்லாம் செய்தி போட்டுடாதீங்க. என் குரலை நேசித்தவர்களுக்கு என் கஷ்டங்கள் தெரியவே கூடாது. ஜெயராம்ஜி நல்லபடியாக மீண்டு வந்ததற்கு அப்புறம், நடந்ததை எல்லோருக்கும் சொல்லலாம். இப்ப அவர் ஹாஸ்பிட்டலில் இருப்பதை யாருக்கும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்'' என்றவரின் வேண்டுகோளை, ஜெயராமின் கடைசி நிமிடம் வரைக்கும் காப்பாற்றினேன். 

வாணி ஜெயராம்

இன்று காலை 8 மணியளவில் வாணி ஜெயராமின் மொபைலுக்கு முயல, போனை எடுத்தவர், `என்னால் பேச முடியலை. ஜெயராம்ஜி என்னைவிட்டுப் போன பிறகு பேசுவதற்கும் எனக்குத் தெம்பில்லாமல் போய்விட்டது'' என்றவரின் குரல் உடைந்துவிட்டது. 

வாணி ஜெயராமை இசையுலகம் `குயில்' என்றுதான் கொண்டாடி வருகிறது. அவர்  தன் துணையைப் பிரிந்து வாழ முடியாத `அன்றில் பறவை'. கணவர் துணையில்லாமல் அவர் எங்கேயும் சென்றதில்லை. இசை நிகழ்ச்சிகளாகட்டும், சாதாரண கண் பரிசோதனை ஆகட்டும் கணவர் துணை இல்லாமல் அவர் தனியாகச் சென்றதே இல்லை. தற்போது தன் கணவரை பிரிந்த துயரத்திலிருந்து மீண்டு வரத் தெம்பில்லாமல் முடங்கிக்கிடக்கிறார் வாணி ஜெயராம்.