தமிழகத்தின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் சில்லறைக் கடன்! | TN in second place for Retail loans

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (25/09/2018)

கடைசி தொடர்பு:16:55 (25/09/2018)

தமிழகத்தின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் சில்லறைக் கடன்!

சில்லறைக் கடன்களை அதிகம் வாங்கும் மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்ட்ராவுக்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் கர்நாடகாவும் இடம்பெற்றுள்ளன. 

சில்லறைக்கடன்

2018-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி மேற்கூறிய 3 மாநிலங்களும், அனைத்து மாநில மக்களும் வாங்கிய மொத்த சில்லறைக் கடனில் 40 சதவிகிதத்தைக் கொண்டுள்ளன. இந்தியாவில் சில்லறைக் கடன் வாங்கும் மக்கள் தொகையில் 32 சதவிகிதத்தையும், மொத்த மக்கள் தொகையில் 20 சதவிகிதத்தையும் இந்த 3 மாநிலங்களும் கொண்டுள்ளபோதிலும், இம்மாநிலங்களில் காணப்படும் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதிகரிக்கும் நகரமயமாக்கல் போன்றவற்றின் அறிகுறியாகவே இந்தச் சில்லறைக் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காட்டுவதாக, கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான டிரான்ஸ்யூனியன் சிபில் ( TransUnion CIBIL) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் 2 வது இடம்

இந்தியாவில் பெரும்பான்மையான நகரங்கள்தான் சில்லறைக் கடன் பயன்பாட்டாளர்களை அதிக அளவில் கொண்டுள்ளன. இந்த நிலையில், நகர மயமாக்கல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பில் மகாராஷ்ட்ரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும், அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா மூன்றாவது இடத்திலும் உள்ளன. 

இந்த நிலையில்,  இந்த மாநிலங்களின் நகர்ப்புற பகுதிகளில் வசிப்பவர்கள், தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் சில்லறைக் கடன்களை வாங்குகின்றனர். இந்தச் சில்லறைக் கடன்கள் பெரும்பாலும் வாகனக் கடன், வீட்டுக் கடன், சொத்தின் பேரில் கடன், தனிநபர் கடன், நுகர்வோர் கடன், கல்விக் கடன், கிரெடிட் கார்டு கடன்களாகப் பெறப்படுகிறது. குறிப்பிட்ட சதவிகிதத்தினர் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்குக்கூட சில்லறைக் கடன்களை வாங்குகின்றனர். 

இதில் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை மகாராஷ்ட்ரா 5,50,200 கோடி ரூபாய் சில்லறைக் கடனுடன், அதாவது மொத்த இந்தியாவின் சில்லறைக் கடனில் 20 சதவிகிதத்துடன் முதலிடத்திலும், அதற்கு அடுத்தபடியாக தமிழகம் 2,77,400 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும் 2,74,900 கோடி ரூபாய் சில்லறைக் கடனுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 

இந்தியாவின் 10 மிகப்பெரிய மாநிலங்கள் மொத்தம் 21,27,400 கோடி ரூபாய் சில்லறைக் கடன்களைக் கொண்டிருக்கின்றன. இது, மொத்த சில்லறைக் கடனில் 76 சதவிகிதமாகும். இந்த 10 மாநில கடன் சந்தைகள், நுகர்வோர் கடன் வாங்குபவர்களில் 68 சதவிகிதத்தை உருவாக்கி உள்ளன. 

கடன் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2017-18 மற்றும் 2018-19-ம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டுக்கு இடையே சில்லறைக் கடன் பாக்கிகள் 27 சதவிகிதம் அதிகரித்துள்ளன. அதேபோன்று தனிநபர் கடன் பாக்கிகள் 43 சதவிகிதமும், கிரெடிட் கார்டு பாக்கிகள் 42 சதவிகிதமும் அதிகரித்துள்ளன. 

நுகர்வோர்கள் தரப்பில் கடன் கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும், கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் வழங்க தயாராக இருப்பதும் சில்லறைக் கடன் துறை தொடர்ந்து வலுவாக விரிவடைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், இத்துறையில் கடனைத் திரும்பக் கட்டத் தவறுபவர்களின் எண்ணிக்கை, குறிப்பாகச் சொத்தின் பேரில் வாங்கப்படும் கடன், வீட்டுக் கடன் மற்றும் வாகனக் கடன் பிரிவுகளில் குறைந்து வருவதாகவும் டிரான்ஸ்யூனியன் சிபில் தெரிவித்துள்ளது. 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க