`` `இரும்புத்திரை' டிக்கெட்ல விவசாயிகளுக்குப் பங்கு தந்துருக்கோம்!" - விஷால் | Vishal talks about contributing for farmers with the profit of Irumbuthirai movie

வெளியிடப்பட்ட நேரம்: 18:11 (25/09/2018)

கடைசி தொடர்பு:18:50 (25/09/2018)

`` `இரும்புத்திரை' டிக்கெட்ல விவசாயிகளுக்குப் பங்கு தந்துருக்கோம்!" - விஷால்

இரும்புத்திரை படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒவ்வொரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுப்பேன் என விஷால் அறிவித்திருந்தார். அதைச் சண்டக்கோழி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் செய்து காட்டியிருக்கிறார்.

`` `இரும்புத்திரை' டிக்கெட்ல  விவசாயிகளுக்குப் பங்கு தந்துருக்கோம்!

லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம், `சண்டக்கோழி'. விஷாலின் திரைப்பட வாழ்க்கையில் திருப்பு முனை ஏற்படுத்திய முக்கியமான படமாக இது அமைந்தது. இந்த நிலையில், 'சண்டக்கோழி' திரைப்படத்தின் இரண்டாம் பாகம், மீண்டும் அதே (லிங்குசாமி - விஷால் -யுவன்) கூட்டணியில் உருவாகியிருக்கிறது. கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்கும் இத்திரைப்படம், அக்டோபர் 18-ம் தேதியன்று திரைக்கு வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தலைமையில் சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. 

சண்டக்கோழி-2 விஷாலின் 25-வது படம். இந்தப் படத்தை விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் ஃபாக்டரி மூலம் தயாரித்திருக்கிறார். தனது 25-வது திரைப்படம் என்பதால் அதற்கான இசை வெளியீட்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடினார். அதில் தனது 'சோஷியல் ஆர்கிடெக்ட்' அமைப்பின் மூலம் குழந்தைகளுக்கு படிப்புக்கான நிதியுதவியையும், நலிந்த விவசாயிகளுக்கு நிதி உதவியும் வழங்கினார். கடந்த சில நாள்களாக விவசாயிகளுக்குக் குரல் கொடுத்துவரும் விஷால் அடுத்தகட்டமாக நேரடியாக விவசாயிகளுக்கு உதவி செய்தார். சுமார் 20 விவசாயிகள் மேடையேற்றப்பட்டுக் கவுரவிக்கப்பட்டனர். 

இசை வெளியீட்டு விழாவின் ஒரு பகுதியாக விவசாயிகள் மேடைக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுடன் விஷாலும் மேடையேறினார். 

``இரும்புத்திரை வெற்றியடைந்தது எல்லோருக்கும் தெரியும். மக்கள் பார்க்கும் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயிகளுக்குக் கொடுப்பதாக அப்போது சொல்லியிருந்தேன். கிட்டத்தட்ட ஒரு பத்து லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள் என்று தகவல் வந்தது. அதனால் பத்து லட்ச ரூபாயைப் பிரித்து விவசாயிகளுக்கு வழங்குகிறேன். விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால்தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். ஏதோ என்னால் முடிந்த சிறிய உதவியைச் செய்கிறேன். இந்த உதவித் தொகையை எனது கையால் கொடுப்பதைவிட, 'கடைக்குட்டி சிங்கம்' இயக்குநரும், விவசாயியுமான பாண்டிராஜ் கையால் கொடுப்பதுதான் சிறந்தது என நினைக்கிறேன்" என்ற விஷால், இயக்குநர் பாண்டிராஜை மேடைக்கு அழைத்தார். 

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் விஷால்

இயக்குநர் பாண்டிராஜ் மேடையேறி விவசாயிகளுக்கு உதவித்தொகைகளை வழங்கினார். விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும்போது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. 

அதன் பின்னர் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் தெய்வசிகாமணி, ``எண்ணத்தை எழுத்தாக்கிப் படைப்பாக்கி காட்சியாக்கும் மேடையில், உழைப்பாளிகளைப் பாராட்டுகிறீர்கள். அதற்கு நான் விவசாயியாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும் இந்த 'சண்டக்கோழி' வெற்றிபெற வேண்டும். சண்டக்கோழியின் குணமானது ரத்தம் சிந்தினாலும், உயிரைக் கொடுத்தாவது போராடுவதுதான். விவசாயிகளுக்கு உதவுவதற்காக, சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்காக அரசியல் களத்தில் சண்டக்கோழி சண்டையிட வேண்டும். அதற்கு உழவர்கள் அனைவரும் உறுதுணையாக இருப்போம்" என்றார். 

நிதி உதவி பெற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த முருகன் என்ற விவசாயியிடம் பேசினோம். ``விஷால் கொடுத்த நிதி உதவி எனக்கு ரொம்ப உதவியா இருக்கு. இப்போ தோட்டத்துல ஆயிரம் வாழைங்க இருக்கு. இந்தக் காசுல இன்னும் ஆயிரம் வாழை நடுவேன். என்னைப்போல நலிஞ்ச விவசாயிகளுக்கு உதவி செய்ய முன் வர்றதே பெரிய விஷயம். இவர் அடிக்கடி எங்களுக்காகக் குரல் கொடுக்குறார். இப்போது நிதி உதவி செய்றாரு. விவசாயிகளுக்கு உதவி செய்யுறவங்க என்னைக்கும் அழிஞ்சு போக மாட்டாங்க" என்றார். அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து விஷாலுக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close