ரூபாய் மதிப்பு சரிவு இந்தியப் பொருளாதாரத்துக்கு உதவவும் செய்கிறது... எப்படி? | How Sliding Rupee Is Helping India's Economy In One Big Way

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (25/09/2018)

கடைசி தொடர்பு:21:00 (25/09/2018)

ரூபாய் மதிப்பு சரிவு இந்தியப் பொருளாதாரத்துக்கு உதவவும் செய்கிறது... எப்படி?

ரூபாய் மதிப்பு சரிவால் ஒருபுறம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது என்றாலும், மறுபுறம் இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அளவில் உதவவும் செய்வதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

ரூபாய் மதிப்பு சரிவு

இந்தியா, கச்சா எண்ணெய்யைப் பெருமளவில் இறக்குமதி செய்துதான் தனது எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறது. அதே சமயம், பல்வேறு சர்வதேசக் காரணங்களால் கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு நாளுக்கு நாள் சரிவடைந்து வருகிறது. இதனால், டாலரில் கொடுத்து வாங்கப்படும் கச்சா எண்ணெய்க்கு இந்தியா அதிக அளவில் செலவழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல்வேறு துறைகளிலும் எதிரொலிப்பதால், சம்பந்தப்பட்ட துறைகளின் பங்குகள், பங்குச் சந்தையில் சரிவடைந்து வருகின்றன. போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரித்து வருகின்றன. 

இப்படி ரூபாய் மதிப்பு சரிவால் பாதகங்கள் ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம்  இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகவும் உதவும் வகையில் சாதகமான சில விஷயங்களும் நடப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

குறிப்பிட்டுச் சொல்வதென்றால், சேவைகள் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனங்கள், தங்கள் சேவைக்கான கட்டணத்தை டாலராகப் பெறுவதால், அதை ரூபாயாக மாற்றும்போது, அதிக பயனடைந்து வருகின்றன. இதனால், மென்பொருள் சேவைகள் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள இந்திய மென்பொருள் நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரித்துள்ளன.

பங்குச் சந்தையில் எம்.எஸ்.சி.ஐ இண்டெக்ஸ் (MSCI Index) 4 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், ஐடி இண்டெக்ஸ் (IT Index), ஏறக்குறைய 33 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாது ஜூன் காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி விகிதம் 8.2% அளவுக்கு வேகமான வளர்ச்சியை அடைந்ததில், இந்திய மென்பொருள் சேவைகள் துறையின் 55 சதவிகித பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. 

இப்படி ,சேவைகள் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு ரூபாய் மதிப்பு சரிவு லாபத்தை கொடுக்கிறது என்றால்,  இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. உலக வர்த்தக போர் காரணமாக ஏற்றுமதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள சூழலில், இந்த ஆண்டில் இதுவரைக்கும், ஆசியாவின் மிக முக்கியமான கரன்சியான ரூபாய், மிக மோசமான சரிவைச் சந்தித்துள்ளது. தொடர்ந்து அது சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், அது பணவீக்கத்துக்கு வழிவகுத்து, இந்தியாவின் இறக்குமதி செலவையும் அதிகரிக்க வைத்துவிடும். 

அதே சமயம், சேவைகள் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களைப் பொறுத்தவரை, 2018-ம் ஆண்டை, அவர்களுக்கான ஆண்டாக குறிப்பிடலாம். சர்வதேச வளர்ச்சி ஏற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், அந்நியச் செலாவணி விகிதம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடும் போட்டியில் காணப்படுவதாகவே பொருளாதார நிபுணர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க