வங்கிகள் இணைப்புக்குத் தேனா வங்கி ஒப்புதல்... பாதிப்புகள் எப்படி இருக்கும்?! | The board of Dena Bank approved for the merger

வெளியிடப்பட்ட நேரம்: 20:32 (25/09/2018)

கடைசி தொடர்பு:20:32 (25/09/2018)

வங்கிகள் இணைப்புக்குத் தேனா வங்கி ஒப்புதல்... பாதிப்புகள் எப்படி இருக்கும்?!

இந்த மூன்று வங்கிகளை இணைக்கும்போது, நஷ்டத்தைச் சமாளிக்கவும், லாபத்தை உறுதிசெய்யவும், வாராக்கடன்களைக் குறைக்கவும், வங்கிக்கடன்களுக்கான வட்டி விகிதத்தைத் தீர்மானிக்கவும் கொள்கைரீதியாக என்னென்ன முடிவுகள் எடுக்கப்போகிறார்கள் என்பது முக்கிய அம்சமாக இருக்கும்.

வங்கிகள் இணைப்புக்குத் தேனா வங்கி ஒப்புதல்... பாதிப்புகள் எப்படி இருக்கும்?!

ங்கித்துறையைச் சீரமைக்கும்பொருட்டு பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி மூன்றையும் விரைவில் இணைக்க உள்ளதாக நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கடந்த வாரத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, தற்போது தேனா வங்கியின் நிர்வாகக்குழு இந்த இணைப்பிற்குத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. இந்த இணைப்பின்மூலம் வலுவான நிதியாதாரத்துடன் இன்னும் சிறப்பாக செயல்பட முடியுமென அதன் நிர்வாகக்குழு கருதுகிறது. மேலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக உருவெடுப்பதால் உலகளாவிய அளவில் இதன் கிளைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது.

தேனா வங்கியைப்போலவே மற்ற இரு வங்கிகளும் இதற்கான ஒப்புதலை வழங்கியபின் இந்த இணைப்புக்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும். அதற்கு முன்னதாக, இந்த இணைப்பு, இதில் தொடர்புடைய வங்கிகளின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. இதைத் தெரிந்துகொள்ள, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் மகிளா வங்கி உள்ளிட்ட 5 துணை வங்கிகள் இணைக்கப்பட்ட நடவடிக்கையைப் பார்த்தாலே புரியும். அந்த இணைப்பு நடவடிக்கைக்குப்பின் ஒருங்கிணைந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் செயல்பாட்டில் சரிவு ஏற்பட்டது.

தேனா வங்கி

கடந்த 2018-19 ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.4,875.75 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது. இது, தொடர்ச்சியாக மூன்று காலாண்டுகளாக எஸ்.பி.ஐ. சந்திக்கும் நஷ்டமாகும். லாபத்தில் இயங்கும் வங்கியோடு நஷ்டத்தில் இயங்கும் சில வங்கிகளை இணைக்கும்போது ஏற்படும் கொள்கைக் குளறுபடிகள், லாபத்தில் இயங்கும் வங்கியையும் நஷ்டத்திற்கு இழுத்துச் சென்றுவிடக்கூடும் என்ற பாடத்தை இதன்மூலம் அறிய முடிகிறது. தற்போது மூன்று மாறுபட்ட நிர்வாகத்தின்கீழ் இயங்கும் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும்போது இந்தச் சிக்கல் மேலும் பெரிதாகவே வாய்ப்புள்ளது. 

கடந்த 2018-19 முதலாம் காலாண்டில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி லாபத்தைக் காட்டியது. விஜயா வங்கி லாபத்தைக் காட்டினாலும் கடந்த ஆண்டில் பெற்ற லாபத்தோடு ஒப்பிடுகையில் லாப சதவிகிதம் 43% குறைந்தது. தேனா வங்கி நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது. ஆக, இந்த மூன்று வங்கிகளை இணைக்கும்போது, நஷ்டத்தைச் சமாளிக்கவும், லாபத்தை உறுதிசெய்யவும், வாராக்கடன்களைக் குறைக்கவும், வங்கிக்கடன்களுக்கான வட்டி விகிதத்தைத் தீர்மானிக்கவும் கொள்கைரீதியாக என்னென்ன முடிவுகள் எடுக்கப்போகிறார்கள் என்பது முக்கிய அம்சமாக இருக்கும்.

இம்மூன்று வங்கிகளில் விஜயா வங்கியின் தலைமையகம் பெங்களூருவிலும், அதன் பெரும்பாலான வங்கிக்கிளைகள் தென்னிந்தியாவிலும் உள்ளன. தேனா வங்கியின் தலைமையகம் மும்பையிலும், பேங்க் ஆஃப் பரோடாவின் தலைமையகம் பரோடாவிலும் உள்ளன. இவ்விரு வங்கிகளின் கிளைகள் வடஇந்தியாவில் அதிக அளவில் உள்ளன. இம்மூன்று வங்கிகளையும் இணைத்து புதிய பெயரில் இயங்கும்போது இவற்றின் தலைமையகம் எங்கே அமையும், இவ்வங்கியின் கிளைகள் எங்கெல்லாம் குறைக்கப்படும், எங்கெல்லாம் அதிகரிக்கப்படும் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இவ்வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பணியிடம் மாற்றப்படும் சூழல் எழுமா, பணியிழப்பு ஏற்படுமா என்ற கேள்விகளும் பணியாளர்கள் மத்தியில் எழுகின்றன. நிர்வாகச்செலவுகளைக் குறைக்கும்பொருட்டு பணியாளர்களுக்கு வேலையிழப்பும், தேவையற்ற கிளைகளைக் குறைப்பதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வாய்ப்புகள் அதிகம். 

தேனா வங்கி

வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே வீட்டுக்கடன், நகைக்கடன், தொழிற்கடன் பெற்றுள்ளவர்கள், தங்களது கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்ற அச்சத்தில் உள்ளனர். அப்படி உயர்த்தப்பட்டால் அவர்கள் வேறு வங்கிகளுக்கு தங்களது வங்கிக்கடனை மாற்றக்கூடும். அப்படி மாற்றப்பட்டால் அது இந்த வங்கிகளுக்கு இழப்பாகவே கருதப்படும்.

சிவகுமார்இந்த இணைப்பினால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து வங்கித்துறையில் 35 ஆண்டுகால அனுபவமிக்க நிதித்துறை நிபுணர் எஸ்.சிவகுமாரிடம் கேட்டபோது, "முதலீட்டு மூலதனத்தை அதிகரிக்கும் எண்ணத்தில்தான் அரசாங்கம் இந்த இணைப்புத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, முதலீட்டு மூலதனம் உயர்வது வங்கியின் வளர்ச்சிக்குச் சாதகமான ஒன்றாக அமையும். தற்போது நஷ்டத்தில் இயங்கும் தேனா வங்கி உடனே இந்த முயற்சிக்கு ஒப்புதல் வழங்கியிருப்பதும் இந்த எதிர்பார்ப்பினால் தான். ஆனால், இந்த இணைப்பின் காரணமாக, ஏற்கெனவே உள்ள வாராக்கடன் அளவு அதிகரிக்கவே செய்யும். அடுத்ததாக, மூன்று வங்கிகளும் தெரிவித்துள்ள வாராக்கடன் அளவு சரியானதா என்பது கேள்விக்குரியதே. ரிசர்வ் வங்கி ஆய்வு நடத்தினால் இந்த வாராக்கடன் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அப்படி அதிகரித்தால் ஏற்கெனவே லாபத்தில் இயங்கும் வங்கிகளின் லாபம் நீர்த்துப்போகக்கூடும்.

வங்கிகளுக்கிடையே மனிதவளப் பயன்பாட்டில் வேறுபாடுகள் உண்டு. மனிதவளத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் வங்கிக்கு வங்கி வேறுபடுவதுண்டு. வங்கிகள் இணைப்பிற்குப் பிறகு மனிதவள மேம்பாட்டுக் கொள்கைகளில் முரண்பாடு ஏற்பட்டால் திறமையான பணியாளர்கள் வேறு வங்கிகளுக்குச் செல்லக்கூடிய நிலை ஏற்படும். அதன் காரணமாக வங்கியின் தரம் குறையக்கூடும். இறுதியாக, இப்படி நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளை இணைக்கும் நடைமுறையானது மற்ற வங்கிகளின் செயல்பாடுகளையும் மந்தமாக்கக்கூடிய சூழல் உருவாகக்கூடும்." என்றார்.

எனவே லாபத்தில் இயங்கும் வங்கிகளும் நஷ்டத்திற்குத் திரும்பாமல் இருக்க வேண்டுமெனில் இணைப்பையொட்டிய நிர்வாகச் சீர்திருத்தம் மிகவும் செம்மையாகத் திட்டமிட்டு செயல்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில் இந்த இணைப்பும் தவறான முன்னுதாரணத்தில் சேரக்கூடும்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close