ஆனந்த விகடன் விருதுகள்
தொடர்கள்
Published:Updated:

மின்னல்... மிரட்டல்!

மின்னல்... மிரட்டல்!
பிரீமியம் ஸ்டோரி
News
மின்னல்... மிரட்டல்!

வீயெஸ்வி, படங்கள்: ஶ்ரீனிவாசுலு

மார்கழி உறங்கி, தை எழுந்ததும் காமராஜர் அரங்கில் நடந்தது இசைமேளா. அப்பாஸ் கல்சுரலும், ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய கலைவிழாவில், மார்கழியில் பாடிய நிறைய பிரபலங்கள் புது வருடத்துக்கு இங்கே பிள்ளையார் சுழிபோட, பாடாத ஒரு பிரபலமும் ஓர் இரவில் மேடையேறிப் பாடினார்!

பல்வேறு நகரங்களுக்குப் பறந்து சென்று கலை தொடர்பான, தொடர்பில்லாத பல விவாதங்களில் கலந்துகொள்கிறார்.

ஆன்லைன் போர்ட்டல்களில் கட்டுரை எழுதுகிறார். ஒரு வட்டத்துக்குள் அடங்கிவிடாமல், பல தரப்பினர்களையும் இசை சென்றடைய வேண்டும் என்கிற தொடர்முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவ்வளவுக்கும் மத்தியில், கச்சேரி மேடையேறிவிட்டால் முதல்தரப் பாடகராக அதகளப்படுத்துகிறார். சாதகம் செய்ய  டி.எம்.கிருஷ்ணாவுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?

ஆறு வயதில் ஓட்டக்கற்றுக்கொண்டு, பின்னர் ‘டச்’ விட்டுப்போனாலும் அறுபது வயதிலும் பாலன்ஸ் தவறாமல் சைக்கிள் ஓட்டுவது மாதிரியானதன்று சங்கீதம். தினமும் அசுர சாதகமும், அயராத உழைப்பும் இதற்குத் தேவை. ஒருவேளை, நடு ராத்திரிகளில் பிராக்டீஸ் செய்வாரோ  கிருஷ்ணா? அல்லது, கச்சேரிகள்தான் அவருக்குப் பயிற்சி மேடையோ? யாம் அறியோம்!

மின்னல்... மிரட்டல்!

ஸாவேரியில் சின்னதான ஆலாபனையுடன் காமராஜர் அரங்கில் கச்சேரி ஆரம்பம். தியாகராஜரின் ‘ராமபாண த்ராண சௌர்ய...’ கீர்த்தனை. ‘தம்முடு படலிந வேள  ஸுரரிபு’ வரிகளில் நிரவல். திறந்துவிடப்பட்ட காவேரியென சங்கதிகளில் ஸாவேரியின் பாய்ச்சல். இந்தப் பாடலில் மட்டுமன்றி, முழுக் கச்சேரியிலும் டி.எம்.கிருஷ்ணாவின் காந்தக் குரல் மின்னி, மிரட்டியது.

பைரவி என்றாலே உருகுவார் கிருஷ்ணா. அவர் கண்களில் நீர் தளும்பும். வளரும்போது பைரவி வளம் பெறும். ஆலாபனை முடிந்து, வயலினில் ஹேமலதா பைரவியைச் சீராட்டும் வேளையில், பக்கத்திலிருந்த புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார் கிருஷ்ணா. எந்தக் கீர்த்தனையைப் பாடலாம் என்ற தேடலோ! ஹேமலதாவுடன் சங்கீத உரையாடல் நடத்திக்கொண்டே பைரவியில் விறுவிறு தானம். அது முடியும் தறுவாயில் விரிபோணி வர்ணம் ஆரம்பித்தது கிருஷ்ணா ஸ்டைல்! ஸ்வரங்களில் பைரவியின் விஸ்வரூப தரிசனம். அதுவும், மந்திர ஸ்தாயியில் ஐந்து நிமிடங்களுக்கு அவர் பாடிய ஸ்வரங்கள் சில பல மாதங்களுக்கு மறக்காது. ஒரு கட்டத்தில் மேடையில் அவர் ஸ்வரங்களை ஜபித்துக்கொண்டிருப்பது மாதிரியான ஓர் உணர்வுகூட ஏற்பட்டது!

‘முடியாத துயரில் நான் மூழ்கிக் கிடக்கின்றேன்...’ என்று தொடங்கும் ‘மாதொருபாகன்’ பெருமாள் முருகனின் கவிதை வரிகளை செஞ்சுருட்டி ராகத்தில் விருத்தமாகப் பாடி, முருகப்பெருமான் மீதான திருப்புகழை கிருஷ்ணா பாடியது ஜோர்!

பொதுவாக, கச்சேரிகளில் தில்லானா பாடுவதென்பது இறங்க வேண்டிய ஜங்ஷன் நெருங்கிவிட்டதற்கான அறிகுறி. மேடையில் மூட்டை முடிச்சுகளைக் கட்டுவதற்கான நேரம். நம்மவர்தான் பொதுவழியில் பயணிக்கக் கூடியவர் கிடையாதே! பெஹாக் ராகத்தை விரிவான ஆலாபனையில் பிழிந்தெடுத்துவிட்டுத்தான் லால்குடி ஜெயராமனின் தில்லானாவைப் பாடினார் கிருஷ்ணா!

கச்சேரி முடியும் நேரம் எடுத்தார் ஆரபியை, பாடினார் அதன் தானப்பகுதியை. பஞ்ச ரத்தினக் கீர்த்தனைகளில் ஒன்றான ‘ஸாதிஞ்செநெ ஓ மனஸா’ கீர்த்தனையைப் பாடி, செலுத்தினார் தியாகராஜருக்கு அஞ்சலி!

னவரியில் கலைவிழாவை, கடந்த இருபத்தாறு வருடங்களாக நடத்திவருகிறது அப்பாஸ் கல்சுரல். ஆரம்பத்திலிருந்து ஒரு வருடம்கூடத் தவறவிடாமல் இங்கே பாடிவருகிறார் ஜேசுதாஸ். அப்பா(ஸ்) செல்லம்!

பளபள வெள்ளை ஜிப்பா, நீளமான தலைமுடி, வெண்தாடி; தத்துவஞானி மாதிரியாக மேடையில் ஜேசுதாஸ். `தப்பு தண்டா எதுவும்  இல்லாமல் இவர் நன்றாகத்தான் பாடுவார்’ என்று நினைக்கும்படியான தோற்றம்!

கச்சேரிக்கு இடையிடையே பேசுவது ஜேசுதாஸ் மரபு. அன்றும் உண்டு. “இறைவன் அருளால் இந்தப் புது வருடத்தில் எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்...” என்று வேண்டிக்கொண்ட பிறகே கல்யாணி வர்ணம் ஆரம்பித்தார். இந்த 78 வயதிலும் தனது மதுரமான குரல் இனிமையைச் சீர்கெடாமல் அவர் பாதுகாத்து வருவது சபரிமலையானின் கருணையால்தான் இருக்க முடியும். சொந்த மைக் செட் எடுத்து வந்துவிடுகிறார். ஆளுயர ஸ்பீக்கர்களை நிறுத்தி வைத்துவிடுகிறார் சவுண்டு இன்ஜினீயர் ரோஹித். ஜேசுதாஸ் காமராஜர் அரங்கில் பாடியது கந்தன்சாவடி வரையில் எதிரொலித்திருக்கும்!

தீட்சிதரின் ‘கஜானனயுதம்’ பாடல்மூலம் திருச்சியிலுள்ள கணேசரைத் துதித்தார் ஜேசுதாஸ்.

கீர்த்தனையைப் பாடிவிட்டு நீண்ட நேரத்துக்கு ஸ்வரம் பாடினார். அதாவது, கீர்த்தனைக்கு எடுத்துக்கொண்ட நேரத்தைவிடக் கூடுதலாக!

வாகதீஸ்வரி ராகம் முடித்து, இசை படிக்கும் மாணவ மாணவிகளுக்கென்று மினி உரை நடத்தினார் தாஸண்ணா.

“மந்திர ஸ்தாயியில் பாடும்போது தலையை லேசாக வலது பக்கம் திருப்பி, குனிந்து பாட வேண்டும்... அதுவே மேல் ஸ்தாபி என்றால் இடதுபக்கம் திரும்பி மேலே பார்த்துப் பாடுவதுதான் சரி...” என்றவர் அதை டெமான்ஸ்டிரேட் செய்தும் காட்டினார்.

“இப்பவெல்லாம் பேசவே பயமாயிருக்கு... பேசினா, எதையாவது எழுதிப் பெருசு படுத்திடறாங்க... இருந்தாலும் நான் பேசறதை நிறுத்தப்போறதில்லை...” என்றார்.

மின்னல்... மிரட்டல்!

சோகம் ததும்பும் வாகதீஸ்வரி, சுபபந்துவராளி ராகங்களையும், தியாகராஜரின் ‘எந்நாளுரகே’, ‘பரமாத்முடு’வையும் பாடிவிட்டு, இடையே, ‘`நல்லா கைதட்டுங்க... உங்க கைத்தட்டல்கள் எங்களுக்கு ஆரோக்கியம்...” என்று ஆடியன்ஸை உசுப்பேற்றிவிட்டு, ஆரபி ராகம். இதே சாயஸ் கொண்ட தேவகாந்தாரியை ஜேசுதாஸ் சற்று முன்னர் பாடியது நமக்கு மறக்கவில்லை!

கொஞ்சமாகத் தோடி ஆலாபனை செய்தாலும் அதை நிறைவாகச் செய்தார். மறுபடியும் தியாகராஜர். ‘கத்தநுவாரிகி’ பாடல். ‘நித்துர நிராகரிஞ்சி முத்துகா தம்புரபட்டி...’ வரிகளில் நிரவல் செய்துகொண்டிருந்த தருணம், வந்தார் பேச்சாளர் ஜேசுதாஸ்!

“ஏதோ தெலுங்குல கொஞ்சம் சினிமாப் பாட்டு பாடியிருக்கறதால சொல்றேன்... இந்த வரியை ‘நித்துர’ன்னுதான் பாடணும். ‘நித்தூர...’ன்னு பாடக் கூடாது” என்றார்.

தனி ஆவர்த்தனத்தின்போது திருவாரூர் பக்தவத்சலத்தின் மிருதங்கம் ரசிக்கும்படியாகப் பேசியது. மிருதுவாகவும் மிரட்டலாகவும் நடைமாற்றி வாசித்துக் கைத்தட்டல்களை அள்ளினார். கடத்தில் வைக்கம் கோபாலகிருஷ்ணன் நன்கு ஈடுகொடுத்தார்.

காமராஜர் அரங்கில் படியேறி, பிரதட்சணமாகச் சென்று நுழைவுக் கதவை அடையும்வரை வைக்கப்பட்டிருந்த ஸ்டால்களின் எண்ணிக்கை மிக அதிகம். வழிநெடுக ஒவ்வொரு ஸ்டால் வாசலிலும் நம் கைகளில் துண்டுப் பிரசுரங்களைத் திணிக்கிறார்கள். இது பேப்பர்லெஸ் யுகமன்றோ!