Published:Updated:

மும்பை ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நாகர்கோவிலை உலுக்கிய மர்மகால்!

மும்பை ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நாகர்கோவிலை உலுக்கிய மர்மகால்!
மும்பை ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நாகர்கோவிலை உலுக்கிய மர்மகால்!

நாகர்கோவில்: நகர்கோவிலிருந்து மும்பை செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பால் நகர்கோவிலில் அனைத்து ரயில்களும் சுமார் 2 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டு சென்றது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் பல பகுதிகளுக்கும் தினசரி ரயில் இயக்கப்படுகிறது. இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் கேரள மாநில கோவில்களுக்கு செல்வதற்காக ஏராளமான கூட்டம் நிரம்பி வழிந்தது.

இந்தநிலையில். இன்று அதிகாலை மதுரை ரயில்வே காவல் நிலையத்துக்கு ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அதில் பேசிய நபர், நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம், திருப்பதி வழியாக மும்பை செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியிருக்கிறார்.

##~~##
உடனே மதுரை ரயில்வே போலீசார், நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி.க்கள் சங்கர நாராயணன், பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் மோப்ப நாயுடன் வந்த காவல்துறையினர் காலை 4.40க்கு செல்ல வேண்டிய மும்பை எக்ஸ்பிரஸ், குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்களை சோதனையிட்டனர். அதில் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இறுதியில், 'கிடைத்த தகவல் வெறும் வதந்தி' என்று முடிவுக்கு வந்த நாகர்கோவில் ரயில்வே போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வெடிகுண்டு பீதியால் நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து ரயில்களும் சுமார் 2 மணி நேரம் வரை தாமதமாகவே சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்..
என்.சுவாமிநாதன்