`` `மொழி' ஜோதிகா மாதிரி தர்ஷினி... கபடில கில்லாடி!" நெகிழும் அம்மா | Hearing disabled darshini rocks in Kabaddi

வெளியிடப்பட்ட நேரம்: 12:16 (27/09/2018)

கடைசி தொடர்பு:12:16 (27/09/2018)

`` `மொழி' ஜோதிகா மாதிரி தர்ஷினி... கபடில கில்லாடி!" நெகிழும் அம்மா

கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் தர்ஷினி. இவர் ஒரு கபடி வீராங்கனை. தர்ஷினிக்குக் காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. மொத்தத்தில் `மொழி' ஜோதிகா. ஸ்டேட் லெவல் பிளேயர். நேஷனல் லெவலில் அடியெடுத்து வைத்திருக்கிறார். தர்ஷினியின் அம்மா ஜெயந்தி நம்மிடம் பேசினார்.

``நான் தனியார் கம்பெனியில வேலை பார்க்குறேங்க. என் வீட்டுக்காரருக்குக் கூலி வேலை. எங்களுக்கு 3 பசங்க. 2 பையன். 1 பொண்ணு. என்னுடைய 2 வது மகனுக்குக் கொஞ்சம் காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. அவனைப் பள்ளியில சேர்த்ததும் மெது மெதுவாப் பேச ஆரம்பிச்சிட்டான். இப்போ இன்ஜினீயரிங் படிக்கிறான். முன்னாடி இருந்ததை விட இப்போ ஓரளவுக்குப் பேச ஆரம்பிச்சிட்டான். காது மட்டும் கொஞ்சம் கேட்காது. கடைசி பொண்ணுதான் தர்ஷினி. எங்க வீட்டோட தேவதை.

தர்ஷினி

அவ பிறந்தப்போ இப்படி ஒரு குறை இருக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்ல. வளர, வளரதான் அவளுக்குப் பேசவும் முடியாது, காதும் கேட்காதுங்கிற பேரிடியை உணர்ந்தேன். சரி பொண்ணு அவ அண்ணன் மாதிரி பள்ளிக்கூடம் போனா சரி ஆகிடுவான்னு வீட்டுக்குப் பக்கத்துல இருந்த பால்வாடிக்கு அனுப்பினேன். கூட இருக்கிற பசங்க பேசுறதை ரசிச்சுப் பார்த்துட்டே இருப்பான்னு டீச்சருங்க சொல்லுவாங்க. கொஞ்ச வருஷத்துல நார்மல் பசங்க படிக்கிற ஸ்கூல்ல தர்ஷினியைச் சேர்த்தேன். அப்பவாவது அவளோட பேச்சு எல்லாரையும் மாதிரி இயல்பா வந்திடாதான்னு ஒரு ஏக்கம்தான். 

 6 வது படிக்கும்போது ஒருதடவை அவ கிளாஸ் ஃபர்ஸ்ட் வந்தா. அப்போ, என்னைக் கையைப் பிடிச்சு இழுத்து, `பாப்பா பெயர்.. பாப்பா பெயர்'ன்னு சொன்னா. எனக்கு ஒண்ணும் புரியல. அவளோட ஸ்கூலுக்குப் போனேன். அங்க கிளாஸ் ரூம் போர்டை பார்த்தப்புறம்தான் தெரிஞ்சது அங்க அவ பேரை எழுதியிருக்காங்கனு. சந்தோஷத்துல அங்கேயே அழுதுட்டேன். ஒருபக்கம் பொண்ணு நல்லாப் படிக்கிறான்னு சந்தோஷம் இருந்தாலும், மத்த பசங்க மாதிரி பேசலையேன்னு அழுவேன். அப்படி நான் அழறப்ப எல்லாம் ''ம்மா... பாப்பா பேசுவேன்.. அழாத'னு சொல்லுவா. பொண்ணே இத்தனை தைரியமா இருக்கிறப்ப நமக்கு என்னனு தோணுச்சு. அதனால அன்னையிலிருந்து அழவோ, என் பொண்ணு குறையை மத்தவங்ககிட்ட சொல்லவோ கூடாதுனு மனசுக்குள்ள உறுதி எடுத்துகிட்டேன்.

தர்ஷினி

6வது படிக்கும்போது அவளையும், அவ அண்ணனையும் யோகா கிளாஸ்ல சேர்த்தேன். 2 பேரும் மாவட்ட லெவலில் வின் பண்ணினாங்க. அந்த யோகா கிளாஸ் டீச்சர் மூலமா கபடி சொல்லிக் கொடுக்கிறவங்க பழக்கமானாங்க. அவங்கக்கிட்ட கபடி கத்துக்க என் பொண்ணும், பையனும் போனாங்க. ஆரம்பத்துல பாப்பா கூடவே இருப்பேன். அந்த விளையாட்டு என் பொண்ணுக்கு ரொம்பப் பிடிச்சுப் போக ஆரம்பிச்சது. ஒரு கட்டத்துல எங்க போட்டி நடந்தாலும் தனியா போற அளவுக்குத் தன் திறனை வளர்த்துக்கிட்டா. 

இப்போ கோவை ஹிந்துஸ்தான் காலேஜ்ல பி.காம் முதல் வருஷம் படிக்கிறா. படிச்சுகிட்டே ஸ்போர்ட்ஸ்ல கலந்துக்கிறா. இப்ப நேஷனல் லெவல்ல நடக்குற கபடி போட்டிக்குத் தயாராகிட்டு இருக்கா. ஸ்போர்ட்ஸ்ல அடிபட்டாகூட அந்த வலியை என்கிட்ட காட்ட மாட்டா. இப்பவும் முகத்துல அடிபட்டிருக்கு. மத்த பசங்களுக்காவது சொல்லத் தெரியும். அவளுக்கு நானா பார்த்தாதான் உண்டு'' என்றவர் சிறிது நேரத்துக்குப் பிறகு...

``காலேஜ்ல என் பொண்ணு நல்லாப் படிக்கிறா. அவளுக்கு உதவுறது எல்லாம் அவளோட படிக்கிற ரம்யாங்கிற பொண்ணுதான். தெனமும் என் பொண்ணை வீட்டுக்கு வந்து கூட்டிக்கிட்டுப் போகும். திரும்பக் கொண்டு வந்து விட்டுட்டுப் போவா. அவளை மாதிரி பொண்ணுங்களாலதான் என் பொண்ணால தைரியமா இயங்க முடியுது. ஆனா என் பொண்ணுக்கு மிகப் பெரிய வருத்தம்னா, அவ குறையை மத்த பசங்க கேலி பண்றதுதான். அவ பின்னாடி நின்னு கேலி பண்ணினா அவளுக்குத் தெரியாதும்மா. ஆனா முன்னாடி பண்றாங்களாம். அதுக்கு பயந்துட்டே காது கேட்கிற மெஷினை கழட்டி வைச்சுட்டு போறா. என் பொண்ணுக்கு எல்லாரையும் நேசிக்க மட்டும்தான் தெரியும் கண்ணுங்களா.... அவளைக் கேலி பண்ணணும்னா தயவு செய்ஞ்சு அவ பின்னாடி கேலி பண்ணுங்க ப்ளீஸ்'' என்று கெஞ்சிக் கேட்கிறார், ஜெயந்தி அம்மா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்