வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (27/09/2018)

கடைசி தொடர்பு:13:00 (27/09/2018)

``80 கோடி ரூபாய் சொத்தை ஏன் அபகரித்தார்கள்?” கண்ணீருடன் விவரிக்கும் நடிகை காஞ்சனா

'காதலிக்க நேரமில்லை'  நடிகை காஞ்சனாவை இந்தத் தலைமுறை சினிமா ரசிகர்களுக்கும் நன்றாகத் தெரியும். அந்த அளவுக்கு ஹிட்டடித்த படம் அது.  

காஞ்சனா

PC: 1.bp.blogspot.com

நேற்றைய தினம், ''நான் நடித்துச் சம்பாதித்த 80 கோடி ரூபாய் சொத்துகளை என் சொந்தக்காரங்களே அபகரிச்சுக்கிட்டாங்க. அதையெல்லாம் கோர்ட், கேஸ்னு அலைஞ்சு போராடி மீட்டு, திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைச்சுட்டேன்'' என்று பேசியிருந்தார். உடனே போன் போட்டேன் அவருக்கு. சொத்தை திரும்ப வாங்கியது, போராட்டம் என அவர் மனது பல சங்கடங்களைச் சந்தித்திருப்பதை கூர்மையான அவர் பதிலில் உணர்ந்தேன்.

உறவினர்களே சொத்தை அபகரித்துக்கொண்டது உங்களைக் காயப்படுத்தியதா?

''பஞ்ச பாண்டவர்கள், மத்தவங்களாலயா கஷ்டப்பட்டாங்க... சகோதர முறையுள்ள கெளரவர்களாலதான... எனக்கும் அப்படித்தான் நடந்துச்சு. என் சொந்தக்காரங்க என்னை ஏமாத்தினது என்னைக் காயப்படுத்தவும் இல்ல. வருத்தப்படுத்தவும் இல்ல. உறவைவிட பணத்து மேல உள்ள ஆசையினால என்னை ஏமாத்த நினைச்சு அப்படிச் செஞ்சுட்டாங்க. சூழ்நிலைகள்தான நம்ம ஆட்டிப்படைக்குது. என் சொந்தக்காரங்க சூழ்நிலை என்னை ஏமாத்த வைச்சிருக்கு. அவ்வளவுதான்.''  

எனக்குத் திருமணம் செய்துவைக்கக்கூட என் பெற்றோர்கள் மறந்துவிட்டார்கள் என்று வருத்தப்பட்டிருந்தீர்களே...

''நான் சொன்னது ரைட்டுதான். ஆனா நான் ரொம்ப வருத்தப்பட்டுச் சொன்ன மாதிரி அது சித்திரிக்கப்பட்ருச்சு. மத்தபடி, ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆனாலும் பிரச்னைதான், ஆகலைனாலும் பிரச்னைதான். என் கர்மாபடி எனக்குக் கல்யாணம் நடக்கல... தட்ஸ் ஆல்''

அர்ஜூன் ரெட்டியில்

திரையுலகை விட்டுப் பல வருடங்கள் ஒதுங்கியிருந்த நீங்கள் திடீரென்று 'அர்ஜூன் ரெட்டி'யில் நடிப்பதற்கு எப்படி சம்மதித்தீர்கள்?

 ''நான் திரையுலகை விட்டு மட்டுமல்ல, வெளியுலகத்தில் இருந்தும் என்னை தனிச்சு வைச்சுக்க ஆரம்பிச்சு 42 வருஷங்களாச்சு.  அந்தப் பசங்க சந்தீப்ரெட்டியும், விஜய் தேவரகொண்டாவும் கிட்டத்தட்ட ஒரு வருஷம் என் பிராணனை வாங்கித்தான்  (சிரிக்கிறார்) என்னை அந்தப் படத்தில் பாட்டி ரோலில் நடிக்க வைச்சாங்க. அந்தப் படத்தில் நடிக்க, 'கமாண்டிங் குணமுள்ள ஒரு பாட்டி' வேணும்னு  என்னைத் தேடி என்னோட ரசிகர்கள் மாதிரி என் வீட்டுக்கு வந்தாங்க. நானும் நம்பிட்டேன். முதல் தடவை வந்தப்ப, அந்தப் பசங்க காதுல போட்டிருந்த கம்மலும், கிருதாவும் பாக்கப் பாக்க எனக்கு பயங்கர கடுப்பா வந்துச்சு. திடீர் திடீர்னு வீட்டுக்கு வருவானுங்க. மதியம் ரெண்டரை மணிக்கு வந்தா, வீட்டுல சாப்பிட கொடுக்க என்ன இருக்கும் சொல்லுங்க... இருக்கிற பிரெட்டை வைச்சு என் தங்கை மருமகள்கிட்ட சொல்லி டோஸ்ட் பண்ணி தரச் சொல்லுவேன். அப்புறம் பார்த்தா திடீர்னு 'அர்ஜூன் ரெட்டி' படத்துல பாட்டி ரோல்ல நடிக்கச் சொல்லி கேட்கிறானுங்க. நான் மாட்டவே மாட்டேனுட்டேன். ஆனா, ஒரு வருஷம் என்னை விடவே இல்லை அந்தப் பசங்க.  நானும், கமாண்டிங்காக பேசுகிற பாட்டி வேணும்னா, செளகார் ஜானகி, ஜமுனா இவங்களை அப்ரோச் பண்ணுங்க. என்னைவிட்டுத் தொலைங்கடான்னு திட்டிக்கூட இருக்கேன். ஆனா, பாட்டியைச் சுத்தி குழந்தைகள் உட்கார்ந்து கதை கேட்பாங்க பாருங்க. அந்த மாதிரி என்னைச் சுத்தி உட்கார்ந்துட்டு என்னை கன்வின்ஸ் பண்ணுவானுங்க. சந்தீப் ரெட்டிக்காகவும், விஜய் தேவரகொண்டாவுக்காகவும்தான் அந்தப் படத்துல நடிச்சேன்.''