சந்திரனில் `சாய்பாபா' தெரிய இந்தப் பயதான் பாஸ் காரணம்! #Pareidolia | what is pareidolia and why it stimulates our mind

வெளியிடப்பட்ட நேரம்: 10:06 (28/09/2018)

கடைசி தொடர்பு:17:52 (28/09/2018)

சந்திரனில் `சாய்பாபா' தெரிய இந்தப் பயதான் பாஸ் காரணம்! #Pareidolia

இந்த சாய்பாபா மேட்டருக்குப் பின்னால், ஆதிமனிதனின் உளவியலும் ஒரு காரணமாக இருக்கிறது.

சந்திரனில் `சாய்பாபா' தெரிய இந்தப் பயதான் பாஸ் காரணம்! #Pareidolia

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் நீங்கள் ஒருமுறை கூட நிலவைப் பார்க்காமல் இருந்தீர்கள் என்றால் அதற்கு இரண்டே இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று நீங்கள் அன்றைக்குத் தமிழ்நாட்டிலேயே இருந்திருக்க மாட்டீர்கள், இரண்டாவது ஆறு மணிக்கெல்லாம் நீங்கள் தூங்கியிருக்க வேண்டும். அன்றைக்கு இரவில் யாரோ நிலாவில் சாய்பாபாவின் முகம் தெரிவதாக கிளப்பி விடச் சமூக வலைதளங்களில் அந்தத் தகவல் வேகமாகப் பரவியது. விளைவு குடும்பமாகக் கூடி சந்திரனை சைட் அடித்துக்கொண்டிருந்தார்கள். கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் சாய்பாபா தெரிவாரா என்று பார்க்க கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் "ஒன்றும் தெரியவில்லையே" என்று கூறுவதற்காகவாவது நிலவைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சாய்பாபா சம்பவம் நடந்த அன்று சந்திரன்

அன்றைக்கு ஆறேகால் மணியளவில் போனில் எதேச்சையாக எடுத்த போட்டோதான் மேலே இருப்பது. போட்டோ எடுத்தபோது நிலவில் எந்த உருவமும் தெரியவில்லை. சில மணி நேரம் கழித்து வெளியில் தகவல் பரவிக்கொண்டிருக்கும்போது நான், என் நண்பர்கள் இருவர் என மூவருமே மெரினா கடற்கரையில்தான் அமர்ந்திருந்தோம். ஆனால், பேச்சின் சுவாரஸ்யத்தில் மூவருமே கையில் மொபைலைத் தொடவில்லை. ஆகவே இந்த சாய்பாபா மேட்டர் எங்கள் கவனத்துக்கு வரவில்லை. ஆனால் கொஞ்ச நேரம் கழித்து அறைக்கு வந்து மொபைலை எடுத்துப்பார்த்தால் ஃபேஸ்புக், ட்விட்டர் என அனைத்திலுமே சாய்பாபாவே நிறைந்திந்தார். `அவ்ளோ நேரம் பீச்லதான இருந்தோம் ஒருத்தன் கூட நம்ம கிட்டச் சொல்லையே' என்ற யோசனை வேறு எனக்கு. வெளியே எட்டிப்பார்த்தால் நிலா எப்பொழுதும் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. பாவம்... அதற்கு என்ன தெரியும்!

சந்திரனில் தெரியாத வடிவேலு

சமூக வலைதளங்களில் நிலாவில் சாய்பாபாவின் முகம் தெரியும் போட்டோவைப் போட்டு சிலர் அது உண்மைதான் என்று சத்தியம் செய்ய, அது போட்டோஷாப் வேலைதான் என ஒரு தரப்பினர் அடித்துக் கூறினார்கள். ஆனால் எப்பொழுதும் போல அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் நிலாவில் வடிவேலு தெரிய ஆரம்பித்திருந்தார். இவ்வளவு குழப்பத்திலும் காதலர்கள்தான் தெளிவாக இருந்தார்கள். ``ஆகாயத்தைப் பார்த்திருந்தால் உனக்கு நானும் எனக்கு நீயும்தான் தெரிந்திருப்போம்" என நண்பன் ஒருவன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தான். இப்படி யாரோ ஒருவருக்கு ஏதோ ஓர் உருவம் தெரியும் போது, சிலருக்கு ஏன் ஒன்றுமே தெரியவில்லை. இவையனைத்துக்கும் பின்னால் ஆச்சர்யமான விஷயம் ஒன்று இருப்பதாகக் கூறுகிறது அறிவியல்.

இருக்கு... ஆனா இல்ல - அதுதான் `பேரடோலியா'

பரேடோலியா

பேரடோலியா (Pareidolia) நமக்கு அவ்வளவாகப் பரிச்சயம் இல்லாத பெயர். ஆனால் அந்த அனுபவத்தை உணராதவர்கள் நம்மில் யாருமே இருக்க முடியாது. ஆகாயத்தில் மிதந்து செல்லும் மேகங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது நிமிடத்துக்கு ஓர் உருவமாக மாற்றம் அடைவதைப் பார்க்க முடியும். அது ஒருமனித உருவமோ, விலங்கோ அல்லது கட்டுமானமோ ஏதோ ஒன்றாகத் தோன்றுமே அந்த அனுபவத்துக்குப் பெயர்தான் பேரடோலியா.

பரேடோலியா

அன்றாட வாழ்கையில் கணக்கில்லாமல் எவ்வளவோ சீரற்ற உருவங்களைப் பார்க்கிறோம். அதில் ஏதாவது ஒன்று அர்த்தமுள்ளதாக, அடையாளம் காணக்கூடியதாகத் தோன்றும். அது ஒருவருடைய மன நிலையைப் பொறுத்தது. பேரடோலியா அனுபவத்தைப் பல்வேறு வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். அதில் ஒன்று மத நம்பிக்கை சார்ந்தது. இதில் சீரற்ற உருவங்களைப் பார்ப்பவர்கள் அதைக் கடவுளின் தோற்றமாக உணர்வார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவில் பலருக்கு சாய்பாபா தெரிந்தது அப்படித்தான். நிலாவில் ஒரு பாட்டி காலம் காலமாக வடை சுட்டுக்கொண்டிருக்கிறாரே அந்த நம்பிக்கையை மக்களிடையே முதலில் விதைத்தவன் பேரடோலியா அனுபவத்தைப் பெற்றவனாக இருந்திருக்கலாம். உலகம் முழுவதிலும் பல்வேறு மதங்களில் உள்ள நம்பிக்கைகள் பல இதை வைத்தே வளர்ந்திருக்கின்றன. எதுவுமே இல்லாத மலையைப் பார்த்து வடிவேலு கடவுள் உருவம் தெரிவதாகச் சொன்னால், பத்தில் 8 பேருக்கு உண்மையாகவே ஏதோவோர் உருவம் தெரியும். அவர்கள் பாவம் செய்தவர்களோ, செய்யாதவர்களோ. இன்றைக்கும் வெளிநாடுகளில் கடவுளின் உருவம் தெரிந்ததாக செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இங்கே சாய்பாபா என்றால் அங்கே ஜீசஸ். அவ்வளவுதான் வித்தியாசம். மற்றபடி பேரடோலியா அனைவருக்குமே பொதுவான சகஜமான ஓர் உணர்வுதான்.

மனநோய் அல்ல மூளையின் விளையாட்டு

பரேடோலியா

பேரடோலியா என்பது மனநோயின் விளைவால்தான் நிகழ்கிறது என்றுதான் தொடக்கத்தில் நம்பப்பட்டு வந்தது. பிறகு அது மனிதர்களுக்குத் தோன்றக்கூடிய இயல்பான உளவியல் உணர்வு என்பதை அனைவரும் புரிந்துகொண்டார்கள். நாம் பார்க்கும் உலகம் என்பது ஐம்புலன்களிலிருந்து பெறப்படும் தகவல்களை வைத்து மூளை கட்டமைப்பதுதான். மூளை அடிப்படையில் அப்படித்தான் இயங்குகிறது. பல்வேறு தகவல்களை ஒன்றிணைத்து ஒரு முழுமையான காட்சியை உருவாக்குகிறது. அது போலத்தான் கண்கள் மூலமாகக் கிடைப்பது குறைவான தகவலாக இருந்தாலும் அதை ஒன்றுடன் ஒன்று தொடர்புப்படுத்திக் கொள்ள மூளை முயற்சி செய்கிறது.

பரேடோலியா

ஓர் இடத்தில் இரண்டு புள்ளிகள் தெரிந்தாலும் அதை இரு கண்களாகவும் அதற்குக் கீழே இருக்கும் சிறு கோட்டை வாயாகவும் மூளை நமக்கு உணர்த்துகிறது. இந்த உணர்வைக் குழந்தைகள் ஒரு வயதிலிருந்தே பெற்றுவிடுகிறார்களாம். மூளையில் காணப்படும் பியூஸிஃபார்ம் ஜைரஸ் (Fusiform gyrus) என்ற பகுதியே பேரடோலியா போன்ற காட்சிகளை உணர்வதற்குக் காரணமாக இருக்கிறது என்கிறார்கள். மேலும் இந்தப் பகுதியே நிறத்தைப் பிரித்தறிவது, முகம் மற்றும் உடலமைப்பை உணர்வது, மற்றும் வார்த்தைகளைப் பிரித்தறிவது போன்ற மிக முக்கியமான பணிகளுக்குக் காரணமாக இருப்பதாக அறியப்படுகிறது.

ஆதி காலத்து மனிதன்

Pic Courtesy Heinrich Harder

அப்படியே இருந்தாலும் பேரடோலியா உணர்வு அனைவருக்கும் தோன்றுவதற்குக் காரணம் என்ன. அதற்கான விடை நமது முன்னோர்களிடம் இருக்கிறது. நெடுங்காலத்துக்கு முன்னர் வாழ்ந்த ஆதிகாலத்து மனிதனைச் சுற்றிலும் கொடிய வேட்டை மிருகங்கள் இருந்தன. பலம் குறைந்த மனித இனம் அவற்றுக்கு மத்தியில்தான் வாழ வேண்டிய சூழ்நிலை. மறைந்திருக்கும் அவற்றை அடையாளம் காண்பது அன்றைக்கு அவசியமாக இருந்தது. அதற்கான காரணம் அடையாளம் கண்டுகொண்டால் ஒன்று ஆபத்தான விலங்குகளிடமிருந்து உயிர் தப்பிக்கலாம் அல்லது இரைக்காக அவற்றை வேட்டையாடலாம். இது போன்ற தேவைகளுக்காக அன்றைய மனிதனின் உணர்வு அவனை எச்சரிக்கையோடு இருக்கச் செய்தது. மறைந்திருக்கும் விலங்குகளைப் பார்க்கும்போது அதனுடைய சில பாகங்கள் கண்களுக்குத் தென்பட்டாலும் அது என்னவாக இருக்கும் என்பதை மூளை உணர்த்தும் வகையில் மாற்றம் பெற்றுவிட்டது. மனிதன் பரிணாமம் அடைந்து விட்டாலும் கூட அந்த முன்னெச்சரிக்கை உணர்வு இன்னும் நம்மிடையே மிஞ்சியிருக்கிறது. எனவே அடுத்த தடவை யாராவது எதையாவது பார்த்து ஏதோ உருவம் தெரியுதுன்னு சொன்னா கிண்டல் பண்ணாதீங்க பாஸ்..நீங்களும் பாருங்க உங்களுக்கும் தெரியும்.


டிரெண்டிங் @ விகடன்