அறம் செய விரும்பு

“இடமே இருக்காதுங்கண்ணா. ஒரே கிளாஸ் ரூம்ல, ரெண்டு கிளாஸ் நடக்கும். ரொம்ப நெருக்கியடிச்சு உக்காந்திருப்போம். பொண்ணுங்க மேல, தெரியாம கைபட்டுடும். அதுக்காக செம திட்டு வாங்குவோம். வெயில் அதிகமாயிட்டா வேர்த்துக் கொட்டும்ணா. இனிமே அந்தப் பிரச்னையெல்லாம் இருக்காது... எங்களுக்குத் தனி கிளாஸ் கிடைச்சிருச்சு. பெருசா இருக்குண்ணா. அந்த போர்டும் செமயா இருக்கு.”
பொத்தான் இல்லாமல், ஊக்கால் குத்தப்பட்டிருந்த தன் சிவப்புக் கால்சட்டையைச் சரிசெய்தபடியே உற்சாகமாகப் பேசுகிறான்  4-ம் வகுப்பு, ‘பி’  பிரிவில் படிக்கும் தினேஷ்குமார்.

தினேஷ்குமார் மட்டுமா... ஒரு பள்ளியே மகிழ்ச்சியில் இருக்கிறது. `ஒரு வகுப்புக்கு ஒரு வகுப்பறை’ என்பதுதான் காஞ்சிபுரம் மாவட்டம், செம்மஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பெருங்கனவு. அந்தக் கனவை நனவாக்கியிருக்கிறது ஆனந்த விகடன்-ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் இணைந்து செயல்படுத்தி வரும் `அறம் செய விரும்பு.’

அறம் செய விரும்பு

சோழிங்கநல்லூரைத் தாண்டிச் சில நிமிடங்களில் செம்மஞ்சேரியை எட்டிவிடலாம். 2004-ம் ஆண்டில், சென்னையின் நதியோர, கடலோர, சாலையோர ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி.  ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசிக்கின்றன.  சமூகரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள்.  இயற்கைப் பேரிடரால் தங்கள் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்தவர்கள்,  வேர்பிடித்த இடத்தைத் தொலைத்து நிற்பவர்கள் என இந்த விளிம்புநிலை மக்களுக்கு எதிர்கால நம்பிக்கையாக இருப்பது இந்தப் பள்ளிக்கூடம்தான்.
 
இங்கே 1100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். ஒவ்வோராண்டும் 400 புதிய மாணவர்கள் இந்தப் பள்ளியில் சேர்கிறார்கள். ஆரம்பகாலங்களில், பள்ளியில் ‘இடை நிற்கும்’ மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்துவந்தது. அது இன்று  கணிசமாகக் குறைந்திருக்கிறது.

`அறம் செய விரும்பு’ திட்டம், இந்தப் பள்ளியைக் கையில் எடுத்தது. 65 லட்ச ரூபாய் செலவில் , 6 வகுப்பறைகளையும், சத்துணவுக் கூடத்தையும் கட்டும் பணிகளும், சுற்றுச்சுவரை மேம்படுத்தும் பணியும் கடந்த ஜூன் மாதம் தொடங்கின.  கற்றல், கற்பித்தல் சூழலுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் விறுவிறுவென நடந்த பணிகள் கடந்த வாரம் நிறைவுற்று, ஒப்படைப்பு விழாவும் நடந்தேறியது.

முதல் செங்கல் வைக்கப்பட்டதிலிருந்து தங்களுக்கான கனவு வகுப்பறை தயாராவதை ஒவ்வொரு கட்டத்திலும் அருகிலிருந்து பார்த்த மாணவர்கள்,  அது முழுமையடைந்து தங்கள் வசம் வரும் நாளைக் கொண்டாட்டமான நாளாக மாற்றினார்கள். அதிகாலையிலேயே பள்ளிக்கு வந்து வண்ணக்கோலங்களாலும் காகிதங்களாலும் மலர்களாலும் வகுப்பறைகளை அலங்கரித்து  ஒப்படைப்பு விழாவை உணர்வு பூர்வமான விழாவாக மாற்றினார்கள்.

அறம் செய விரும்பு

“ரேஷ்மா... மஞ்சள் கலர் சாக்பீஸ் கொடு. போர்டோட இந்த ஓரத்துல சூரியகாந்திப் பூ வரையலாம்” என்று கண்ணாடியைச் சரிசெய்தபடியே வரையத் தொடங்கினார், 6-ம் வகுப்பு கெஸியால்.

“அண்ணா... நான் படிச்சு முடிச்சு,  டீச்சர் ஆகணும். இந்த ஸ்கூல்லயே டீச்சர் வேலை பார்க்கணும்.  இன்னும் நிறைய கட்டடமெல்லாம் கட்டி, நிறைய பேரை இங்கே படிக்க வைக்கணும்ண்ணா...” என்று சூரியகாந்திப் பூவை வரைந்து முடிக்கும் நேரத்தில் தன் கனவினையும் மலரச் செய்த கெஸியாலின் அப்பாவும் அம்மாவும் கட்டடத் தொழிலாளர்கள்.

அறம் செய விரும்பு
அறம் செய விரும்பு

கலெக்டராக விரும்பும் திவ்யஸ்ரீ, டாக்டராக விரும்பும் தஸ்லிமா, ராணுவ வீரனாக விரும்பும் தீபக், லட்சுமி, ஜெயஸ்ரீ, அமுலு என இந்தப் பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு மாணவருக்கும் பின்னால் ஒரு பெரும் போராட்டகரமான வாழ்க்கையும், அழகான கனவுகளும் இருக்கின்றன.

“இந்தப் பள்ளியிலிருக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் விளிம்புநிலை மனிதர்களின் பிள்ளைகள்தாம். ஒவ்வொரு மாணவரும் அவ்வளவு திறமையானவர்கள். கல்வி முறையில், பாடம் கற்பிப்பதில் எங்களால் முடிந்தளவுக்குச் சிறப்பாகச் செயல்படுகிறோம்.  அவர்களை மேம்படுத்த சில உள்கட்டமைப்பு வசதிகள் அவசியப்பட்டன. அது ஆனந்த விகடன் - ஜி.ஆர்.டி. ஜுவல்லர்ஸ் இணைந்து நடத்தும் `அறம் செய விரும்பு’ திட்டத்தின் மூலம் நிறைவேறியதில், எங்களுக்குப் பெருமிதமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

இங்கே படிக்கும் மாணவர்களின் பெரும்பாலான பெற்றோர்கள் கூலிவேலை செய்பவர்கள். அதிகாலையில் கிளம்பிப் போய்விடுவார்கள். இவர்களாகவே கிளம்பிப் பள்ளிக்கு வர வேண்டும். பலர் காலை உணவு சாப்பிடாமல் வருவார்கள். அவர்களுக்குச் சத்துணவு மட்டும்தான் ஒரு நாளைக்கான மொத்த உணவு. மாலை வீடு திரும்பினாலும், தனியாகத்தான் இருப்பார்கள்.  அப்பா-அம்மா பிரிவு, குடும்பச் சண்டைகள் என இந்தக் குழந்தைகள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் அதிகம். இவர்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கான  ஒரே தீர்வு, கல்விதான். வகுப்பறைதான் இவர்களின் அழுத்தத்தைப் போக்கும் ஆசுவாசம்.  இந்த வகுப்பறைகளும், சத்துணவுக்கூடமும் வெறும் கட்டடங்கள் அல்ல, இந்தப் பிள்ளைகளின் வாழ்வைத் தீர்மானிக்கிற இடங்கள்.

அறம் செய விரும்பு
அறம் செய விரும்பு

`அறம் செய விரும்பு’  எங்களைத் தேர்வு செய்ததற்கு நன்றி...” என்று நெகிழ்ந்து பேசினார் பள்ளியின் தலைமையாசிரியை விஜயலட்சுமி.

தங்களுக்கான விழாவை, தாங்களாகவே வடிவமைத்து, தங்களைத் தாங்களே உற்சாகப்படுத்தி மகிழ்வித்து, மகிழ்ந்தார்கள் செம்மஞ்சேரி பள்ளி மாணவர்கள். சூழலியல் பிரச்னைகளைக் குறிக்கும் பதாகைகளைக் கைகளில் ஏந்தி, நடனத்தின் மூலமாகவே நாடகத்தை நிகழ்த்தினார்கள் மாணவிகள்.  அத்தனை ஆசிரியைகளும் ஒருங்கிணைந்து நிற்க, தலைமையாசிரியை விஜயலட்சுமியிடம் வகுப்பறையின் சாவிகளை வழங்கினார் விகடன் குழுமச் செயல் இயக்குநர் எம்.வி.குமார். நிகழ்வில் ஒப்பந்தக்காரர்கள் எஸ்.சுரேஷ்குமார், டி.ஸ்ரீசந்திரன் இருவரும் கௌரவிக்கப்பட்டார்கள்.

நாடகக்கலைஞர் ‘ஆழி’ வெங்கடேசன் குழுவினர், மீனவர்களின் வாழ்க்கையை மையமாகவைத்து நிகழ்த்திய நாடகம் மாணவர்களைக் குதூகலப்படுத்தியது. 

செம்மஞ்சேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் உள்கட்டுமானத் தேவைகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் நம் பயணம் தொடர்கிறது. திவ்யஸ்ரீ, தஸ்லிமா,  தீபக், லட்சுமி, ஜெயஸ்ரீ, அமுலு போல பெரும் லட்சியங்களை மனதில் சுமந்துகொண்டு வெளிச்சம் தேடும் குழந்தைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலான திட்டங்களோடு அடுத்தகட்டக் களத்தில் இறங்குகிறது `அறம் செய விரும்பு.’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு