சினிமா
Published:Updated:

நான் அகதி! - 18 - நாம் அகதிகள்

நான் அகதி! - 18 - நாம் அகதிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
நான் அகதி! - 18 - நாம் அகதிகள்

மருதன்

து என் நாடு என்பதை எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கின்றன. யார் என் மக்கள் என்பதைக் கோடுகளே

நான் அகதி! - 18 - நாம் அகதிகள்

வரையறை செய்கின்றன. நானும் என் மக்களும் கோடுகளுக்கு உள்ளே அடங்கிக்கிடக்கிறோம். எல்லைக்கோடு என் இருப்பை உறுதி செய்கிறது. என் அடையாளத்தை வழங்குகிறது. என் நாட்டுக்கு ஒரு பெயரை அளிப்பது அதுதான். என் மக்கள் இந்தக் கோட்டின் பெயரால் அழைக்கப்படுகிறார்கள். இந்த உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டையும் கோடுகளே ஆட்சிசெய்கின்றன என்பதை நானறிவேன். கோடுகள் இல்லையென்றால் உலகம் இல்லை. நாடு இல்லை. ராணுவம் இல்லை. அரசு இல்லை. ஆட்சியில்லை. நான் ஒரு சிவிலியன். என் தேசம், என் மக்கள், என் அரசு, என் வாழ்க்கை, என் இருப்பு அனைத்தையும் கோடுகள் நிர்ணயிக்கின்றன. எனது அண்டை நாடு எது என்பதையும், என் நட்பு நாடு எது என்பதையும், என் எதிரி நாடு எது என்பதையும் என் நாட்டின் கோடுகள் முடிவுசெய்கின்றன. எனது புவியியலே என்னுடைய அரசியலாகவும் வரலாறாகவும் இருக்கிறது.

கோடுகள் வரையப்படுவதற்கு முன்பும் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் கட்டுப்பாடற்றவர்களாக இருந்தனர். அவர்களுடைய  கால்கள் கட்டப்படாமல் இருந்தன. கோடு குறித்த அச்சமின்றி வனம், மலை, கடல், பாலைவனம் என்று அவர்கள் சுற்றித் திரிந்தனர். உணவும் உறைவிடமும் தேடி அவர்கள் தொடர்ச்சியாக ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்கு இடப்பெயர்ச்சி செய்துகொண்டிருந்தனர். உணவுப் பற்றாக்குறை, பஞ்சம், புயல், வெள்ளம், வறட்சி, குழு மோதல் உள்ளிட்டவை இடப்பெயர்ச்சிக்கான காரணங்களாக இருந்தன. பழங்குடி மக்களும் நாடோடி மக்களும் ஏதேனும் ஓரிடத்தில் நிலைகொண்டு நிரந்தரமாகத் தங்கும் வழக்கம் இல்லாதவர்களாக இருந்தனர். மற்றொரு பக்கம், புதிய இடங்களைக் காணவேண்டும், புதிய அனுபவங்களைப் பெறவேண்டும், புதிது புதிதாகக் கற்கவேண்டும் என்னும் ஆர்வம் கொண்டவர்கள் கடல் கடந்து பல பயணங்களை மேற்கொண்டனர். வர்த்தக ஆர்வம் கொண்டவர்களும் நீண்ட, நெடிய பயணங்களை முன்னெடுத்தனர். அறிவியல் ஆய்வாளர்கள் இந்தப் பயணங்களால் பெரும் பலன் அடைந்தனர்.  இபின் பதூதா, மார்க்கோ போலோ, வாஸ்கோ ட காமா, சார்லஸ் டார்வின் போன்றவர்கள் தங்களுடைய எல்லையற்ற பயணங்கள் வாயிலாக நம் அறிவின் எல்லைகளை விசாலப்படுத்தினர்.

நான் அகதி! - 18 - நாம் அகதிகள்

நவீன உலகம் முதலில் தடை செய்தது இந்தக் கட்டற்ற சுதந்திரத்தைத்தான். கூண்டுக்குள் விலங்குகளை அடைப்பதுபோல் கோடுகளுக்குள் மனிதர்களைப் பிரித்துத் தொகுத்து  அடைத்துவைக்கும் வழக்கம் ஆரம்பமானது. நீ பிறப்பால் சிரியன். எனவே சிரியாவின் எல்லையைக் கடந்து நீ அனுமதியின்றி வெளியில் செல்லக்கூடாது. அதேபோல் இன்னொருவன் உன் எல்லைக்குள் வருவதை நீ அனுமதிக்காதே. இந்தக் கோடுகளைப் பாதுகாப்பதற்கென்றே அரசாங்கம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. கோடுகளைப் பராமரிப்பதே அரசாங்கத்தின் முதன்மைப் பணியாக மாறியது.

அதுவே அரசாங்கத்தின் முதன்மைப் பிரச்னையாகவும் மாறிப்போனது. குடிமக்களின் கல்விக்கோ மருத்துவத்துக்கோ அல்ல, உலகின் பல நாடுகள் எல்லையைப் பாதுகாப்பதற்கே அதிக பணம் செலவிடுகின்றன. காரணம் விதிவிலக்கில்லாமல் எல்லா எல்லைக் கோடுகளும் விரோதத்தையே முதலில் சம்பாதித்துக்கொள்வதுதான். எல்லையின் பெயரால் நாடுகள் தங்களுக்குள் போரிட்டுக்கொள்கின்றன. எல்லையின் பெயரால் கணக்கற்ற மக்கள் தினம் தினம் மடிகிறார்கள். இந்தப் படுகொலைகள் அரசால் அரங்கேற்றப்படுபவை அல்லது அரசைப் பாதுகாக்க அரங்கேற்றப்படுபவை என்பதால் அவை பெருமிதத்துக்குரிய செயல்களாக உருமாற்றப்படுகின்றன. எல்லைக்கோடுகள், அவை உருவான காலம் முதலே வன்முறையோடு தொடர்புகொண்டவையாக இருக்கின்றன. இந்த வன்முறையை மற்றவர்களைவிட அதிகம் சந்திப்பவர்கள் நாடற்றவர்களான அகதிகள்தாம்.

நான் அகதி! - 18 - நாம் அகதிகள்

உலகமே ஒரு கிராமம், உலகம் நம் உள்ளங்கையில், உலகம் முழுக்க ஒரே சந்தை போன்ற அட்டகாசமான முழக்கங்கள் உலகமயமாக்கலுக்கு ஆதரவாக எழுப்பப்பட்டாலும் நிஜத்தில் உலக நாடுகள் நத்தை போல் மேலும் மேலும் சுருங்கிக்கொண்டே போவதைத்தான் நாம் பார்க்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம் பலமிழந்துவிட்டது. குடியேறிகளின் நாடு என்று புகழப்பட்ட அமெரிக்கா தன் கதவுகளை இழுத்து மூடிக்கொண்டுவிட்டது. வளமுள்ள நாடுகள் அனைத்தும் போ, போ என்று அகதிகளை விரட்டியடிக்கின்றன.  அதே சமயம் பண்டப் பரிமாற்றம் தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  வர்த்தகத்துக்குக் கோடுகள் ஒரு தடையாக இல்லை. உலகின் எந்த மூலையிலிருந்தும் எந்த மூலைக்கும் ஒரு பொருளை இன்று வெகு சுலபமாகக் கொண்டு செல்லமுடியும். உலக வர்த்தக மையம் போன்ற அமைப்புகளும் நாடுகளுக்கு இடையிலான பல்வேறு வர்த்தக உடன்படிக்கைகளும் தங்குதடையற்ற வர்த்தக உறவைச் சாத்தியமாக்கியுள்ளன.

ஜெட் விமானம் ஒன்றில் ஏறி, குறட்டைவிட்டு உறங்கியபடியே ஒரு கண்டத்தை விட்டு இன்னொன்றுக்கு நீங்கள் சுலபமாகச் சென்றுவிட முடியும். எல்லைக்கோடுகள் அனைத்தும் உதிர்ந்து உடைந்து உங்கள் விமானத்துக்காக வழிவிடுகின்றன. மென் புன்னகையுடன் விமானப் பணிப்பெண்கள் உங்களை ஒரு புதிய நாட்டுக்கு வரவேற்று அழைத்துச் செல்வார்கள். இதே நீங்கள் உயிர் தப்பியோடிவரும் அகதி என்றால் எல்லைக்கோடுகள் உங்களை உந்திக் கீழே தள்ளும். உன் உடல் என் தேசத்துக்குத் தேவைப்படாது என்று அவை உங்களை விரட்டியடிக்கும். உங்களை ஏற்க மறுத்தால் உங்களுக்கு என்ன நேரும் என்பது உங்கள் பிரச்னை மட்டுமே. இப்படித்தான் மூன்று வயதுக் குழந்தை ஆலன் குர்தியின் உடல், 2 செப்டம்பர் 2015  அன்று மத்தியதரைக்கடலில் மூழ்கித் தலைகுப்புறக் கரை ஒதுங்கியது. இப்படி எண்ணற்ற உயிர்கள் கோடுகளால் அச்சுறுத்தப்பட்டு, கோடுகளால் விரட்டப்பட்டு, கோடுகளாலேயே தினம் தினம் கொல்லப்படுகின்றன.

டொனால்ட் டிரம்ப் அகதிகளுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார். அந்நியர்களிடமிருந்தும் அவர்களுடைய ஆக்கிரமிப்புகளிடமிருந்தும் உங்களை மீட்டெடுப்பேன் என்பதுதான்  அவருடைய பிரதான தேர்தல் வாக்குறுதியாகவும் பிரசாரமாகவும் இருந்தது. அகதிகள் உள்ளே நுழையாதவாறு அமெரிக்காவைப் பலப்படுத்துவேன். அமெரிக்கா என்பது வெள்ளையர்களின் நாடாக மட்டுமே இருக்கும். அதில் அயல்நாட்டு அகதிகளுக்கு இடமில்லை. அகதிகளை மட்டுமன்று, ஆசிய, தென்னமெரிக்கக் குடியேற்றங்களையும் இனி அனுமதிப்பதற்கில்லை என்று முழங்கினார் டிரம்ப். அமெரிக்கா மட்டுமன்று, பல நாடுகளின் நிலைப்பாடு இன்று இதுவே. நவம்பர் 2013 முதல் பிப்ரவரி 2014 வரை சவுதி அரேபியா 1,60,000 எத்தியோப்பியர்களை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. மலேசியா, இந்தோனேஷியா, தாய்லாந்து மூன்றும் தொடக்கத்தில் ரோஹிங்கியாக்களின் படகுகளைத் தங்கள் எல்லைக்குள் அனுமதிக்காமல் விரட்டியடிப்பதிலேயே கவனமாக இருந்தன.

2015-ம் ஆண்டுக் கணக்கின்படி உலகம் முழுக்க 65 மில்லியன் பேர் அகதிகளாக மாறியிருக்கிறார்கள். இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்து நாடிழந்த அகதிகளின் எண்ணிக்கை 11.5 மில்லியன் என்பதை அருகில் வைத்துப் பார்க்கும்போது அகதிகளின் இன்றைய நிலை கவலையளிக்கக்கூடியதாக இருக்கிறது. வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவிலான மக்கள் திரள் நாடற்றவர்களாக ஒரே சமயத்தில் இருந்ததில்லை. அந்த வகையில் இந்த நூற்றாண்டின் முதன்மையான பிரச்னை இதுதான். அகதிகளை உருவாக்கியதில் அமெரிக்கா வகித்த பாத்திரத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். பொய்யான காரணங்களாலும் அரசியல் கணக்கீடுகள் காரணமாகவும் ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தி அந்நாட்டு மக்களை நாலாபுறமும் சிதறடித்த பெருமை அமெரிக்காவுக்கு உரியது. செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பே இத்தகைய அநீதியான ஆக்கிரமிப்புகளை அமெரிக்கா செய்திருக்கிறது, பிறகும் அதைத் தொடர்ந்திருக்கிறது. அமெரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது பெருமளவில் அகதிகளுக்கு எதிரான போராகவே இருப்பதையும் நாம் பார்க்கிறோம். டிரம்பின் நிர்வாகம் நிலைமையை மேலும் மோசமாக்கிக்கொண்டிருக்கிறது.

அகதிகளை ஏற்பதில்லை என்பது முதல் பிரச்னை என்றால், ஏற்றுக்கொண்டுள்ள நாடுகளில் அவர்கள் எப்படி வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது அடுத்த பிரச்னையாக இருக்கிறது. கொடுமையாக, சிறைக்கூடங்களை விடவும் கொடுமையாக அமைந்துள்ளன பெரும்பாலான அகதி முகாம்கள். அகதிகளை விலங்குகளைப் போல் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்றே அரசாங்கங்கள் நினைக்கின்றன. இந்தக் குறுகிய சிந்தனையோட்டத்திலிருந்து அவர்களால் வெளிவரவே முடியாமலிருக்கிறது. அகதிகளைப் பொருளாதாரச் சுமைகளாகவும் கருதவேண்டியதில்லை. அகதிகள் தாங்கள் புகலிடம் புகுந்த நாட்டின் பொருளாதாரத்தைத்  தங்களால் இயன்ற அளவுக்கு வளப்படுத்திவருகிறார்கள் என்பதை ஆய்வுகளைக் கொண்டு பலமுறை பலரும் நிரூபித்த பிறகும் அரசாங்கங்களின் காதுகளில் அவை நுழைவதில்லை.

நான் அகதி! - 18 - நாம் அகதிகள்

அகதிகளைச் சுமைகளாக மட்டுமன்றி பயங்கரவாதிகளாகவும் பார்க்கும் போக்கு இருக்கிறது. பெருங்கூட்டம் ஒன்றை உள்ளே அனுமதிக்குமாறு அவர்களில் சிலர் தவறிழைத்தவர்களாகவோ தவறிழைக்கும் எண்ணம் கொண்டவர்களாகவோ இருப்பதற்கு வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இது எல்லாக் குழுக்களுக்கும் பொருந்தக்கூடியதுதான் இல்லையா? அமெரிக்கா இதுவரை சந்தித்துள்ள தாக்குதல்கள் அனைத்துமே அந்நிய பயங்கரவாதிகளால் ஏற்பட்டவைதானா? அகதிகளும் பயங்கரவாதிகளும் அயல்நாட்டினரும்தான் அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனரா? இஸ்லாமியர்களும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் லத்தீன் அமெரிக்கர்களும்தான் பள்ளிகளில் துப்பாக்கிச்சூடுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்களா? அவர்களையெல்லாம் என்ன செய்யப்போகிறது அமெரிக்கா? டிரம்ப் விரும்பியதுபோல் வெள்ளையர்கள் மட்டுமே வாழும் தேசமாக அமெரிக்கா மாற்றப்பட்டால் அகிம்சையின் மறு உருவாக அந்நாடு இரவோடு இரவாக மாறிவிடுமா? ஆக, அகதிகள் பொருளாதாரச் சுமைகள் என்பதைப்போல் அகதிகள் பயங்கரவாதிகள் என்பதும் அவர்களை நிராகரிக்கச் சொல்லப்படும் ஒரு சாக்குப்போக்குதான், இல்லையா?

அரசாங்கங்கள் மட்டுமல்ல, நாமும்கூட அகதிகள் குறித்துப் பல தவறான அபிப்பிராயங்களை வளர்த்து வைத்திருக்கிறோம். இந்தத் தொடரின் நோக்கம் அகதிகளின் தரப்பை முன்வைப்பதன்மூலம் அந்த அபிப்பிராயங்களின் வேரைச் சற்று அசைத்துப் பார்ப்பதுதான். அகதிகள் உலகம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள் என்றபோதும் அவர்கள் தனியோர் உலகில்தான் வாழ்கிறார்கள். அந்த உலகத்தைச் சேர்ந்த சிலருடைய வாழ்க்கையிலிருந்து ஒரு சில அத்தியாயங்கள் மட்டுமே இதில் இடம்பெற்றிருக்கின்றன. கடல்போல் விரிந்திருக்கிறது அவர்களுடைய பெருஞ்சோகம். அதை முழுக்கப் பதிவு செய்வதென்பது இயலாதது.

நான் அகதி! - 18 - நாம் அகதிகள்

அகதிகள் பிரச்னையைத் தீர்க்க என்னென்ன செய்ய வேண்டும்? இந்தத் துறையில் ஆய்வு மேற்கொண்டுவருபவர்கள் கூறும் சில முக்கிய ஆலோசனைகள் இவை; அடைக்கலம் தேடி வரும் அகதிகளுக்குப் பாதுகாப்பான வழித்தடத்தை உறுதி செய்ய வேண்டும். உடனடித் தேவைகள் உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் போன்றவை. நீண்டகாலத் தேவை, சுதந்திரமான, இடையூறு அற்ற வாழ்க்கை. அகதிகளுக்கும் குடும்பங்கள் உண்டு. எனவே ஓர் அகதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு விசா வழங்கி அவர்கள் ஒன்றிணைய அனுமதிக்க வேண்டும். புகலிடம் அளித்த நாட்டில் தங்கியிருப்பதா, மீண்டும் தன் சொந்த நாட்டுக்குத் திரும்புவதா அல்லது மூன்றாவதாக வேறொரு நாட்டுக்குச் செல்வதா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் ஓர் அகதிக்கு இருக்கிறது. எந்த முடிவையும் அவர்மீது மற்றவர்கள் திணிக்கக் கூடாது. குழந்தைகளுக்குக் கல்வி வசதி அளிக்க வேண்டும்.

அகதிகள் குற்றவாளிகளல்லர். எல்லையைக் கடக்கும் முயற்சியில் ஈடுபடும் எந்த அகதியும் இறக்கக் கூடாது, கைது செய்யப்படக் கூடாது. போர் அல்லது உள்நாட்டுக் கலவரத்திலிருந்து தப்பிவரும் அகதிகளைப் புரிந்துணர்வுடன் அரவணைத்துக்கொள்ள வேண்டும். உள்நாட்டு மக்களால் அகதிகளுக்கு எந்தச் சிக்கலும் நேராத வண்ணம் தடுக்க வேண்டும்.  இனம், நிறம், மதம், மொழி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டு அகதிகளைப் பாகுபடுத்தவோ வதைக்கவோ ஒருவரையும் அனுமதிக்கக் கூடாது. அவர்கள்மீது ஏவப்படும் வெறுப்பு அரசியலைத் தடுத்துநிறுத்த வேண்டும். புதிய நாட்டில் அகதிகள் பொருளாதார ரீதியிலும் பாலியல் ரீதியிலும் இன்ன பிற வழிகளிலும் சுரண்டப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அகதிகள் உருவாவதற்குக் காரணமான சூழலைக் கண்டறிந்து  சீர் செய்வதற்கு உதவி புரியவேண்டும். அகதிகளைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு வாழ்வளிப்பதும் நம் கடமை என்பதை, பொறுப்புமிக்க ஒவ்வொரு அரசாங்கமும் உணரவேண்டும். என் அரசு இவற்றையெல்லாம் சரியாகச் செய்கிறதா என்பதைக் கண்காணிப்பது அந்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் கடமை.

ஊர், பேர் தெரியாத மக்களுக்காக நாம் எதற்காக இவ்வளவு மெனக்கெட வேண்டும்? சக மனிதர்களைக் காப்பதும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதும் நம் கடமை. மேலும், மக்களில் ஒரு பிரிவினர் அகதிகளாக இருக்கும்போது இன்னொரு பிரிவினரால் சுதந்திரமாக இருந்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக, இன்று அகதிகளுக்கு நேரும் எதுவும் நாளை நமக்கும் நேரக்கூடும். நாம் அகதிகளாக மாறுவதற்கான அத்தனை காரணங்களும் வெளியில் உயிர்ப்புடன் இருக்கின்றன. அந்த வகையில் இது நம் எல்லோருடைய போராட்டமும்கூட.

- சொந்தங்களை அரவணைப்போம்!