1 ஏக்கரில் 1,65,000 ரூபாய் வருமானம்... மீன், கோழி வளர்ப்பில் அசத்தும் விழுப்புரம் இளைஞர்! | viluppuram youngster earn 165000 revenue from integrated chicken-fish farming

வெளியிடப்பட்ட நேரம்: 12:13 (29/09/2018)

கடைசி தொடர்பு:12:13 (29/09/2018)

1 ஏக்கரில் 1,65,000 ரூபாய் வருமானம்... மீன், கோழி வளர்ப்பில் அசத்தும் விழுப்புரம் இளைஞர்!

மீன் மற்றும் கோழிகளை ஒருங்கிணைந்த முறையில் வளர்த்து லாபம் பார்த்து வருகிறார் விழுப்புரம் இளைஞர்.

1 ஏக்கரில் 1,65,000 ரூபாய் வருமானம்... மீன், கோழி வளர்ப்பில் அசத்தும் விழுப்புரம் இளைஞர்!

`படித்துவிட்டு அதேதுறையில் ஏதாவது ஒரு வேலையில் போய்விட வேண்டும்' என்பதுதான் பெரும்பாலானோர் கனவு. ஆனால், தான் படித்த ஆங்கில இலக்கியம் படிப்பை நிறுத்திவிட்டு விவசாயம் செய்துகொண்டிருக்கிறார் விழுப்புரத்தைச் சேர்ந்த வில்லியம் பாஸ்கர் என்ற இளைஞர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த மயிலத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெளியனூர் எனும் கிராமம். மாடுகளுக்குப் புல்லை எடுத்துப்போட்டுக் கொண்டிருந்த அவரைச் சந்தித்துப் பேசத் தொடங்கினோம்.

கோழி - மீன் வளர்ப்பு

``சின்ன வயசுல இருந்து விவசாயத்தைப் பார்த்துதான் வளர்ந்தேன். அதனால் விவசாயம் செய்யணும்னு ஆசை மனசுக்குள்ள இருந்துச்சு. வீட்டுல எல்லோரும் படிச்சிட்டு வேலைக்குப் போகச் சொன்னாங்க. அதனால பி.ஏ ஆங்கில இளங்கலைப் பட்டம் படிச்சுக்கிட்டு இருக்கும்போது, மனசுக்கு அது சரியாப் படலை. அதனால படிப்பை நிறுத்திட்டு விவசாயத்தின் பக்கமா வந்துட்டேன். படிச்சு முடிச்சிட்டு அடுத்தவங்ககிட்ட வேலை செய்ய எனக்குப் பிடிக்கலை. அதனால நானே சுயமா தொழில் ஆரம்பிக்க நினைச்சேன். அதனால முதல் முதலா மீன் வளர்ப்புல இறங்கினேன். இப்போ முழுசா அஞ்சு வருஷம் முடிஞ்சிருக்கு. பொதுவா மீன் வளர்ப்புல நாம தேர்ந்தெடுக்குற மீன் குஞ்சுகளையும், தேர்வு செய்யுற நிலத்தையும் வச்சுத்தான் நாம முன்னேற முடியும். 100 கிராம் அளவுல இருக்குற மீன் குஞ்சுகளை தேர்வு செஞ்சு வாங்குனா ஆறு வருஷத்துல லாபம் பார்த்திடலாம். ஒரு ரூபாய்க்கு மீன்குஞ்சுகளை வாங்கினா லாபம் பார்க்க ஒரு வருஷம் ஆகும். நான் வளர்க்குற மீன் ரகம் கெண்டை இனம்தான்" என்றவர் தொடர்ந்தார்.

``முதல்ல மீன் வளர்க்குறதுக்குச் சந்தை வாய்ப்பு ரொம்ப முக்கியம். ஒரு கிலோ உயிருள்ள மீனை 110 ரூபாய்க்குக் கொடுக்குறேன். அதனால கும்பகோணம் பக்கத்துல இருக்குற வியாபாரிங்க வந்து வாங்கிட்டுப் போறாங்க. அவங்கக்கிட்ட மொத்த விலைக்குக் கொடுத்துருவேன். ஒரு ஏக்கருக்கு ஒரு டன்னுல இருந்து ஒன்றரை டன் வரைக்கும் மீன்கள் கிடைக்கும். அதுல இருந்து 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயில இருந்து 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும். மீன்களுக்கான தீவனச் செலவு குறைவாகத்தான் ஆகும். அரிசி தவிடு, பிண்ணாக்குனு தினமும் 5 கிலோவுல இருந்து 10 கிலோவுக்குள்ள கொடுக்கலாம்.

கால்நடை வளர்ப்பு - கோழி

வில்லியம் பாஸ்கர்பண்ணைக்கு இடம் தேர்வு செய்யுறது ரொம்ப முக்கியம். எல்லா மண்ணுலயும் பண்ணையை அமைக்க முடியாது. சவுடு மண், களிமண் இருக்குற இடத்துலதான் தேர்வு செய்யணும். அந்த இடத்துல இருந்து 3 அடி ஆழத்துக்கு, ஒரு அடி நீளம், ஒரு அடி அகலத்துல பள்ளம் எடுக்கணும். அந்தத் தண்ணீர் ரெண்டு நாளுக்கு மேல குறையாம இருக்கணும். அப்படி இருந்தா அது சரியான இடம். பண்ணைக்குட்டை ஓரமா தென்னை மரங்களை வளர்க்கணும். அதிக மழைக்காலங்கள்ல மண் அரிப்பைத் தடுக்க உதவியா இருக்கும். பண்ணைக்குட்டையில இருக்குற நீர் ஒரு அடிக்கும் கீழ போகா விட்டா, மீன்கள் இறந்துடும். அதனால தண்ணீர் குறைவா இருக்கணும். மீன் சாகுற நிலை வந்தா மஞ்சள் 100 கிராம், பொட்டாசியம் பெர்மாங்கனேட் 100 கிராம் தூவுனாலே போதும். அதிகமான செலவு செய்யத் தேவையில்லை. 

மீன்களோட சேர்த்து நாட்டுக் கோழிகளையும், நாட்டு மாடுகளையும் வளர்த்துக்கிட்டு வர்றேன். நாட்டுக் கோழிகள் வளர்க்குறது ரொம்ப மகிழ்ச்சியானதா இருக்கு. ஒரு கிலோ எடை கோழி 250 ரூபாய்க்கும், ஒரு முட்டை 10 ரூபாய்க்கும் விற்பனை செய்றேன். கோழிகளுக்கு உணவா அரிசி, சிறுதானியங்கள்னு கொடுக்குறேன். மிச்சம் இருக்குற நேரங்கள்ல திறந்த வெளியிலதான் மேய்ச்சலுக்குப் போகுது. நாட்டுக் கோழிகள் தங்குறதுக்கு மீன் குட்டைக்கு மேல கூடாரம் அமைச்சிருக்கேன். அதனால, அதோட கழிவுகள் மீன்களுக்கு தீவனமாகிடுது. நாட்டுக் கோழிகளை பொருத்தமட்டில், வெப்பநிலை அதிகமானா வெள்ளை கழிச்சலும், வெப்பநிலை குறைஞ்சா ரத்த கழிச்சலும் வரும். அதனால சீதோஷ்ண நிலையைச் சரியாகப் பராமரிக்க வேண்டும்" என்கிறார், வில்லியம் பாஸ்கர்.            


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close