முதல் டிஸ்க் பிரேக் பைக், 98 கிலோ எடை, 85 Kmpl மைலேஜ்...அது ராயல் என்ஃபீல்டு காலம்! | Lesser known bikes from royal enfield

வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (28/09/2018)

கடைசி தொடர்பு:15:38 (28/09/2018)

முதல் டிஸ்க் பிரேக் பைக், 98 கிலோ எடை, 85 Kmpl மைலேஜ்...அது ராயல் என்ஃபீல்டு காலம்!

அது ஒரு ராயல் என்ஃபீல்டு காலம். அப்போது, ராயல் என்ஃபீல்டின் பைக்குகள் டாப் கிளாஸ். புல்லட், கிளாசிக், தண்டர்பேர்டு தவிர ராயல் என்ஃபீல்டு ஆர்மியில் இருந்த மற்ற பைக்குகளை பார்ப்போம்.

முதல் டிஸ்க் பிரேக் பைக், 98 கிலோ எடை, 85 Kmpl மைலேஜ்...அது ராயல் என்ஃபீல்டு காலம்!

19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1901) இருந்து இன்றுவரை பைக்குகளை விற்பனை செய்துகொண்டிருக்கும் ஒரே நிறுவனம் ராயல் என்ஃபீல்டுதான். உலகில் நீண்ட நாள் விற்பனையில் இருக்கும் பைக் ராயல் என்ஃபீல்டின் புல்லட். இந்தியாவில் பைக் வாங்கிய முதல் தலைமுறையிடம் கேட்டால் தெரியும் ராயல் என்ஃபீல்டின் மீது அப்படி என்ன காதல் என்று. 2002 வரை ராயல் என்ஃபீல்டு எதிர்காலத்தை மனதில் வைத்து பைக் வெளியிட்ட நிறுவனம்.

இந்தியாவில் முதல்முதலில் டிஸ்க் பிரேக் வைத்து பைக் தயாரித்தது ராயல் என்ஃபீல்டுதான். என்ஃபீல்டின் டீசல் புல்லட் அப்போது 85 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுத்தது. பழைய என்ஃபீல்டு பைக்குகள் ஜெர்மன் தரத்தில் உள்ளவை என்பார்கள். அது ஒரு ராயல் என்ஃபீல்டு காலம். அப்போது, ராயல் என்ஃபீல்டின் பைக்குகள் டாப் கிளாஸ். இப்போது ட்ரெண்டு மாறிவிட்டது. சரி, நமக்குத் தெரிந்த புல்லட், கிளாசிக், தண்டர்பேர்டு, ஹிமாலயன் தவிர ராயல் என்ஃபீல்டு ஆர்மியில் இருந்த மற்ற பைக்குகளைப் பார்ப்போம்.

ராயல் என்ஃபீல்டு Fury

படம் - teambhp.com

ராயல் என்ஃபீல்டு ஃப்யூரி (Fury)

ராயல் என்ஃபீல்டு ஃப்யூரி இந்தியச் சந்தைக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட 175 சிசி பைக். ஜெர்மனியைச் சேர்ந்த Zundapp நிறுவனத்துடன் கூட்டணி அமைத்திருந்தது ராயல் என்ஃபீல்டு. அந்தக் கூட்டணியில் வந்த முதல் பைக் இது. KS175 பைக்கின் இந்தியப் பிரதிதான் ஃப்யூரி. இந்தியாவில் முன்பக்க டிஸ்க் பிரேக் வைத்து வந்த முதல் பைக் ஃப்யூரிதான். காஸ்ட் அலாய் வீல், 35மி.மீ ஃபோர்க்குகள், 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டிருந்தது இந்த பைக். இதன் எடையும் 121 கிலோதான். இதில் 17 bhp பவர் தரும் ராயல் என்ஃபீல்டின் 163 சிசி 2 ஸ்ட்ரோக் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருந்தது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் அதிகபட்சம் 126 கி.மீ வேகம் போகக்கூடியது இந்த ஃப்யூரி.

எக்ஸ்ப்ளோரர் (Explorer)

ராயல் என்ஃபீல்டு எக்ஸ்ப்ளோரர் 50 (Explorer)

ராயல் என்ஃபீல்டின் எக்ஸ்ப்ளோரர் 50 பைக்கும் இந்தியாவுக்கான பிரத்யேக பைக். Zundapp KS50 பைக்கை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது இது. 1980 முதல் 1990 வரை வெறும் 10 ஆண்டுகள் மட்டுமே இது விற்பனையில் இருந்தது. இதில் 6 bhp பவர் தரக்கூடிய சிங்கிள் சிலிண்டர் 2 ஸ்ட்ரோக் இன்ஜினும் 3 ஸ்பீடு கியர்பாக்ஸும் பொருத்தியிருந்தார்கள். 50சிசி பைக்காக இருந்தாலும் எக்ஸ்பிளோரர் அதிகபட்சம் 90 கி.மீ வேகத்தில் போகக்கூடியது. 9.7 லிட்டர் பெட்ரோல் டேங்க்குடன் வந்த இந்த பைக்கின் எடை வெறும் 97 கிலோதான். டிவிஎஸ் ஜெஸ்ட்டை விட எடை குறைவு.

Fantabulous

ஃபேன்டபுலஸ் (Fantabulous)

ஸ்கூட்டர் சந்தையிலும் கொஞ்சம் டயர் பதிப்போம் என்று ராயல் என்ஃபீல்டு. ஃபேன்டபுலஸ் என்ற தனது முதல் ஸ்கூட்டரை களமிறக்கியது. இந்த ஸ்கூட்டர் பெரிய வரவேற்பைப் பெற்றுத்தரவில்லை என்றாலும், செக்மன்ட் ஃபர்ஸ்ட் என்ற பல வசதிகள் இந்த ஸ்கூட்டரில் இருந்தன. 1962 முதல் 1970 வரை விற்பனையில் இருந்த ஃபேன்டபுலஸ் ராயல் என்ஃபீல்டின் முதலும் கடைசியுமான ஸ்கூட்டர். இதில் 7.5 bhp பவர் தரும் 173சிசி வில்லியர்ஸ் (villers) இன்ஜின் வந்தது. இந்த ஸ்கூட்டர் காலில் கியர் போடும் அமைப்பைப் பெற்றிருந்தது. செல்ஃப் ஸ்டார்ட் உடன் வந்த முதல் இந்திய ஸ்கூட்டர் இது.

silver plus

ராயல் என்ஃபீல்டு சில்வர் ப்ளஸ் (Silver Plus)

ராயல் என்ஃபீல்டு சில்வர் ப்ளஸ் Zundapp நிறுவனத்திடமிருந்து வாங்கிய இன்னொரு பைக். ZX50 பைக்கை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட சில்வர் ப்ளஸ் ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் விற்பனை செய்த முதல் மொப்பட். கிக் ஸ்டார்ட், பஜாஜ் ஸ்கூட்டர்களை போல ஹேண்டில்பாரில் கியர் ஷிஃப்டர் என அப்போது ஒரு வித்தியாசமான ரகமாக வெளிவந்தது இந்த பைக். எக்ஸ்ப்ளோரர் பைக்கில் இருக்கும் அதே 6 bhp 50சிசி இன்ஜின்தான் இதிலும். 7 ஸ்போக் அலாய் வீல் வைத்து வந்த என்ஃபீல்டு பைக் இது. அப்போது இந்த பைக்கின் விலை 6,200 ரூபாய். அப்போது பெட்ரோல் விலையே லிட்டருக்கு 7 ரூபாய்தான்.

ராயல் என்ஃபீல்டு மினி புல்லட்

ராயல் என்ஃபீல்டு மினி புல்லட் (Mini Bullet)

யெஸ்டி ரோடு கிங் பைக்குக்குப் போட்டியாகக் களமிறங்கியதுதான் இந்த ராயல் என்ஃபீல்டு மினி புல்லட். ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் பல பாகங்கள் இதில் இருந்ததால் இந்த பைக்கை மினி புல்லட் என்றார்கள். இதில் 175சிசி வில்லியர்ஸ் இன்ஜினை ரீபோர் செய்து 197சிசி-யாக மாற்றியிருப்பார்கள். இந்த பைக் அதிகபட்சம் 12.7bhp பவர் மற்றும் 14Nm டார்க்கைத் தரக்கூடியது. மினி புல்லட்டைப் பார்ப்பது புலியைப் பார்ப்பது போல அவ்வளவு அபூர்வம். 1971-ல் இங்கிலாந்தில் இந்த பைக்கின் விற்பனையை நிறுத்தினார்கள். 1973-ம் ஆண்டு இந்த பைக்கை இந்தியாவில் தயாரிக்க ஆரம்பித்தார்கள். ரேஸ் பிரியர்களுக்கு மிகவும் பிடித்த என்ஃபீல்டு இது.

royal enfield crusader

ராயல் என்ஃபீல்டு க்ருஸேடர் (Crusader)

ராயல் என்ஃபீல்டு க்ருஸேடர் பைக் 1963 முதல் 1980 வரை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பைக். ராயல் என்ஃபீல்டின் ஷெர்ப்பா என்ற பைக் 1979-ல் ரீடிசைன் செய்யப்பட்டு க்ருஸேடராக விற்பனைக்கு வந்தது. அதிகபட்சம் 95 கிமீ வேகம் போகும் பைக் இது. 173சிசி சிங்கிள்  சிலிண்டர் வில்லியர்ஸ் 2 ஸ்ட்ரோக் இன்ஜின் மற்றும் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் பயன்படுத்தப்பட்டது. ராயல் என்ஃபீல்டு இங்கிலாந்தில் விற்பனை செய்த மோட்டோ X, ஸ்கிராம்பிளர், கான்டினென்டல் GT போன்ற பைக்குகளுக்கு க்ருஸேடர்தான் அடிப்படையாக இருந்தது. ராயல் என்ஃபீல்டு கலெக்டர்களுக்கு மிகவும் பிடித்த பைக் இந்த க்ருஸேடர்.

Enfield MOFA

MOFA

இதை உண்மையிலேயே ராயல் என்ஃபீல்டுதான் தயாரித்தது. மோஃபா என்பது ஒரு மொப்பட் வகை. ஆனால், இதை சைக்கிள்  கேட்டகிரியில்தான் சேர்ப்பார்கள். மார்பிடெல்லி என்ற இத்தாலிய நிறுவனம் இதை டிசைன் செய்தது. இந்தியாவில் MOFA-வை ராயல் என்ஃபீல்டுதான் தயாரித்தது. 0.8bhp பவர் தரக்கூடிய 22சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இதில் இருக்கும். 30 கி.மீ வேகத்தில் போகக்கூடியது இந்த MOFA. இந்த இன்ஜினுக்கு Centrifugal clutch மூலமாக வேலைசெய்யும். பெட்ரோலை ஃபிரேமின் டவுன்டியூபில் நிரப்பவேண்டும். சஸ்பென்ஷன் கிடையாது. MOFA ஓட்ட லைசன்ஸ் தேவையில்லை.

royal enfield lightning

ராயல் என்ஃபீல்டு லைட்னிங் (Lightning)

தண்டர்பேர்டின் முன்னோடிதான் இந்த லைட்னிங். டிசைன் அப்படியே ராயல் என்ஃபீல்டின் தண்டர்பேர்டை போலவை இருக்கும் இந்த பைக்கின் தயாரிப்பை 2003-ம் ஆண்டிலேயே நிறுத்திவிட்டார்கள். 26bhp பவர் மற்றும் 38Nm டார்க் உருவாக்கக்கூடிய 535சிசி இன்ஜின் கொண்டது இந்த பைக். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். அதிகபட்சம் 125 கி.மீ வேகம் போகக்கூடியது இந்த பைக்.

டீசல் புல்லட்/ taurus

படம் - teambhp.com

ராயல் என்ஃபீல்டு டாரஸ் (Taurus)

உலகின் முதல் மாஸ் ப்ரொடக்‌ஷன் டீசல் மோட்டார்சைக்கிள் ராயல் என்ஃபீல்டு டாரஸ்தான். இந்தியாவில் செல்லமாக இதை டீசல் புல்லட் என்று அழைப்பார்கள். இந்தியாவில் விற்பனையான ஒரே டீசல் பைக்கும் இதுதான். உலகளவில் அதிகம் விற்பனையான டீசல் பைக்கும் இதுதான். இதில் க்ரீவிஸ் லோர்பார்டினியின் பம்ப் செட் இன்ஜின் மற்றும் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வந்தது. இந்த இன்ஜின் 6.5bhp பவர் மற்றும் 15Nm டார்க் தரக்கூடியது. பைக்கின் எடை 196 கிலோ (அதிக எடை) என்பதால் அதிகபட்சம் வெறும் 80கி.மீ வேகம் மட்டுமே போகக்கூடியது இந்த இன்ஜின். 1980 முதல் 2000 வரை விற்பனையில் இருந்த இந்த பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 85 கி.மீ. அப்போது டீசல் விலையே வெறும் 8 ரூபாய்தான். இப்போது பைக் விலையும் அதிகம், பெட்ரோல்/டீசல் விலையும் அதிகம்.


டிரெண்டிங் @ விகடன்