வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (28/09/2018)

கடைசி தொடர்பு:15:50 (28/09/2018)

ஒவ்வொரு 9 நிமிடத்துக்கும் ரேபிஸால் ஒருவர் பலி! #WorldRabiesDay

னிதர்கள் அனைவரும் சமூகமாக வாழத் தொடங்கியபோதே, பல்வேறு விலங்குகளையும் பறவைகளையும், செல்லப்பிராணிகளாக வளர்க்கத் தொடங்கிவிட்டனர். அதில் முக்கியமான ஒன்று நாய். வளர்க்கப்படும் இந்த விலங்குகளால் மனிதர்களுக்கு பல்வேறு விதமான வைரஸ் தொற்றுகள் பரவுகின்றன. நாய்கள் கடிப்பதால் ரேபிஸ் எனப்படும் ஒருவகை வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ரேபிஸ் நாய், பூனை, குதிரை, வௌவால் போன்ற விலங்குகளை அதிகம் பாதிக்கும். இதனால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மனிதர்களைக் கடிப்பதால் மனிதர்களுக்கும் இந்த வைரஸ் பாதிப்பு பரவுகிறது. இந்தியாவில் அதிகமாக நாய் கடிப்பதால்தான் ரேபிஸ் வைரஸ் பாதிப்பு பரவுகிறது. 

ரேபிஸ்

இது போன்ற பல்வேறு விலங்குகளால் பரவும் ரேபிஸ் வைரஸ் பாதிப்பு பற்றிய விழிப்பு உணர்வையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஒவ்வோரு வருடமும் ரேபிஸ் நோய்க்கான தடுப்பு மருந்தை 1885-ம் ஆண்டு கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டர் இறந்த தினமான செப்டம்பர் 28-ம் தேதியை உலக ரேபிஸ் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமன்றி, உலகம் முழுவதும் 2030-ம் ஆண்டுக்குள் ரேபிஸ் நோயை முழுவதும் ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், `#Zero by 30’ என்ற தலைப்பில் 2015-ம் ஆண்டு முதல் கொண்டாடிவருகின்றனர். 

ரேபிஸ்

உலகம் முழுவதும் ஒவ்வொரு 9 நிமிடங்களுக்கு ஒரு மனிதன் ரேபிஸ் வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இதில் அதிகமாக அதாவது, இறப்பவர்களில் 80% பேர் கிராமப்பகுதியைச் சேர்ந்தவர்கள். அதிலும் 40% பேர் சிறுவர்கள் மற்றும் குழந்தைகள். உலகளவில் ஆண்டுக்கு 59,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 15,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கிறார்கள். இந்த உயிரிழப்பில், 45% இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில்தான் ஏற்படுகின்றன.

நாம் வீட்டில் வளர்க்கக்கூடிய பறவைகளின் இறகு, எச்சம், கழிவு மூலமாக நிமோனியா நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக  உள்ளன. இவற்றால், இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனையப் பெற வேண்டும்.  செல்லப் பிராணிகள் கடிப்பதால் மட்டும் நோய் வருவது இல்லை. அவற்றின் உடலில் உள்ள வெட்டுக் காயம் மூலமாகவும் உண்ணிகள் மூலமாகவும் நமக்கு நோய்கள் வரலாம். விலங்குகளுக்கு சொறி, சிரங்கு, லைம் (Lyme) போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும். இதைத் தடுக்க, வருடத்துக்கு ஒருமுறை வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்.

ரேபிஸ்

 

எந்தப் பிராணியாக இருந்தாலும், அதைத் தூக்கிக் கொஞ்சினாலும் விளையாடினாலும் கண்டிப்பாகக் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். இல்லையெனில், அலர்ஜி பிரச்னை இருப்பவர்களுக்கு நாய், பூனை போன்ற விலங்களின் ரோமம் உதிர்வால், உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே, மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் நல்லது. எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசிகள், புழு அழிப்பு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாடாப்புழு அதிகளவில் வரும். அதனால், செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்க்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படும்.

 

``உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்" என்று நம் முன்னோர்கள் கூறுவர். ஆனால், அந்த அன்பு அக்கறையும் எச்சரிக்கையும் மிகுந்ததாக இருக்க வேண்டியது அதைவிட மிகவும் அவசியம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க