``6 மணி நேரத்தில் 10,000 ஆடுகள் கைமாறும்!" நரிக்கல்பட்டி ஆட்டுச்சந்தையின் பாரம்பர்யம் | Story of famous narikkalpatti Goat market in Dindigul

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (29/09/2018)

கடைசி தொடர்பு:13:11 (29/09/2018)

``6 மணி நேரத்தில் 10,000 ஆடுகள் கைமாறும்!" நரிக்கல்பட்டி ஆட்டுச்சந்தையின் பாரம்பர்யம்

சந்தை என்பது பொருள்களை வாங்கவோ, விற்கவோ மட்டும் மக்கள் கூடும் இடமல்ல; அம்மண்ணின் பாரம்பர்யத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஒன்று. அப்படிப்பட்ட சந்தைகளில் ஒன்று நரிக்கல்பட்டி ஆட்டுச்சந்தை!

``6 மணி நேரத்தில் 10,000 ஆடுகள் கைமாறும்!

வீனக் காலகட்டத்தில் பழைய பழக்க வழக்கங்களில் இன்றும் மாறாமல் இருப்பது மக்கள் கூடும் சந்தை ஒன்றுதான். மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூடிய சந்தைகளில் ஆட்டுச் சந்தை, மாட்டுச் சந்தை, காய்கறி சந்தை எனப் பல வகைகள் உண்டு. ஆடுகளுக்கும், மாடுகளுக்கும் தனியாக ஒவ்வொரு வாரமும் ஒரு நாளில் தவறாமல் சந்தை கூடுவது உண்டு. அதனால் மக்களும், வியாபாரிகளும் தங்களுக்குத் தேவையான ஆடுகளையும், மாடுகளையும் சந்தையில் வாங்குவதற்காகக் கூடுவர். ஆனால், நாளடைவில் மக்கள் கூடாமல் சந்தைகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கின. தற்போது மாவட்டங்களுக்கு 5 அல்லது 6 என்ற எண்ணிக்கையில்தான் இவை செயல்பட்டு வருகின்றன. சில மாவட்டங்களில் சந்தையே இல்லை. அதனால், ஏதாவது ஒரு சந்தைக்கு விசிட் அடிக்கலாம் என்று தோன்றவே திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு அருகே சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ள நரிக்கல்பட்டிக்குப் பயணமானோம். 

ஆடுகள்

திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் விருப்பாட்சி, அய்யலூர், நரிக்கல்பட்டி, அதிகாரிபட்டி போன்ற இடங்களில் இன்றும் பழைமை மாறாமல் சந்தை நடந்து வருகிறது. அதில் நரிக்கல்பட்டி ஆட்டுச்சந்தைகென்றெ பெயர் எடுத்தது. நரிக்கல்பட்டி சந்தையை நேரில் சென்று பார்த்த பொழுது ஆட்டுச் சந்தை இருந்த இடமே ரம்மியமாகவும் எங்குப் பார்த்தாலும் பரபரப்பாக மக்கள் இருப்பதைக் காண முடிந்தது. ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்தச் சந்தை கூடும். நரிக்கல்பட்டிக்கு அருகே உள்ள ஊரான தாளையம் என்ற ஊரிலிருந்து வந்திருந்த விவசாயி மனோஜ் பிரபாகரனிடம் பேசினோம்.

ஆட்டுச்சந்தை

மேலும் படங்களுக்கு இங்கே க்ளிக் செய்க

``இந்த ஆட்டுச் சந்தைக்கு என்றைக்குமே மவுசு அதிகம்தான். அருகில் பழனி, பாப்பம்பட்டி, தாளையம், ஒட்டன்சத்திரம் மட்டுமன்றி கேரளா, பாலக்காடு, மதுரை, தேனி, திண்டுக்கல், கன்னிவாடி, மூலனூர், கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, தாராபுரம் எனத் தொலைவில் இருந்தும் வந்து ஆடுகளை வாங்கி வந்து விற்பனையும் செய்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலிருந்தும் ஆட்டுச்சந்தைக்கு ஆடுகளை விற்பனைக்கு ஏற்றி வரும் வண்டிக்கு சுங்கவரியாக ஒரு ஆட்டுக்கு 25 ரூபாய் வரை செலுத்துகிறேன். வாங்கிச் செல்லும் ஆடுகளைக் கொண்டு செல்லும் ஒரு வண்டிக்கே 150 ரூபாய் வரி வசூலிக்கப்படுகிறது. இது மட்டுமன்றி சந்தைக்கு வெள்ளாடு, செம்மறி ஆடு, கிடா என்று ஒட்டு மொத்தமாக சுமார் 5,000 முதல் 10,000 ஆடுகள் வரை விற்பனைக்கு வரும். அவை அனைத்துமே விற்றுவிடும். சந்தையில் வெள்ளாடு ரூ.7,000 முதல் 7,500 வரையிலும் செம்மறி ஆடு ரூ.8,000 முதல் 8,500 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண நாள்களை விட ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு விற்பனை களைக்கட்டும். இது மட்டுமன்றி கிடா மட்டும் ரூ.10,000 முதல் 15,000 வரை விற்பனையாகும்" என்கிறார்.

கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் கறுப்பு ஆடுகளை வாங்கிச் செல்வதால் கறுப்பு ஆடுகளுக்கு என்றைக்குமே இந்தச் சந்தையில் கிராக்கிதான். எனக்கு அருகில் சாதிக் என்பவர் `தான் வைத்திருக்கும் கறிக்கடைக்கு 6 ஆயிரம் ரூபாய் விலைக்கு பேரத்தை முடித்துக்கொண்டிருந்தார். ஆட்டுச் சந்தை மட்டுமன்றி ஆட்டுத்தோல்களும் விற்பனை செய்யப்படுகின்றன. அருகிலேயே நாட்டுக்கோழிச்சந்தை, காய்கறிச் சந்தை, துணிச் சந்தை, அரிவாள், சாணக்கத்தி என்று இதைச் சார்ந்து மற்ற சந்தைகளும் இயங்கிவருகின்றன. இந்தச் சந்தையில் ஆடுகள் மட்டுமன்றி மாடுகளையும் முன்னொரு காலத்தில் விற்பனை செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது மாடுகள் விற்பனை செய்யப்படுவது இல்லை. மாறி வரும் காலகட்டம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் எனக் காலப்போக்கில் வந்து கொண்டிருந்தாலும், இன்றைக்குமே கிராமங்களை அழகாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பவை என்றுமே சந்தைகள்தாம்.

சந்தைக்கு வரும் மக்கள்

மேலும் படங்களுக்கு இங்கே க்ளிக் செய்க

உண்மையில் இங்கிருக்கும் பலரும் இந்த வாரச் சந்தையை நம்பியே கடைகள், உணவகம் போன்றவற்றையும் நடத்தி வருகின்றனர். இப்படிப் பல பெருமைகளைச் சுமந்துள்ள இந்த ஆட்டுச் சந்தை முன்னொரு காலத்தில் விடியற்காலை தொடங்கி மாலை அந்தி சாயும் வரை இருந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதிகாலை 3 மணி முதல் 9 மணிக்குள்ளேயே முடிந்து விடுகிறது. இப்படி கிராமத்தில் வாழும் எளிய மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள ஊர்களின் தேவைகளை நிறைவேற்றும் சந்தைகள் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கின்றன. இன்று நகரங்களின் சாலைகளில் நின்றுகொண்டிருக்கும் சூப்பர் மார்க்கெட்களும், பிரமாண்ட மால்களும் கொண்டிராத ஒரு மகிழ்ச்சியையும், பாரம்பர்யத்தையும் தன்னகத்தே கொண்டவை இந்தச் சந்தைகள். இந்த நரிக்கல்பட்டி போலவே உங்கள் ஊரிலும் இப்படி மண்மணக்கும் சந்தைகள் இருக்கலாம். அவற்றைப் பார்க்கத் தவறிவிடாதீர்கள்.


டிரெண்டிங் @ விகடன்