'இதுல பெண் விடுதலை எங்க வந்தது?' - சபரிமலை தீர்ப்புகுறித்து நடிகை ரஞ்சனி | Actress Ranjani shares her opinion about Sabarimala Judgement

வெளியிடப்பட்ட நேரம்: 14:47 (29/09/2018)

கடைசி தொடர்பு:14:51 (29/09/2018)

'இதுல பெண் விடுதலை எங்க வந்தது?' - சபரிமலை தீர்ப்புகுறித்து நடிகை ரஞ்சனி

'இனிமேல், சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்த நொடியில் இருந்து, 'இது பெண் விடுதலையின் அடுத்தகட்டம்' என்றும், 'ஆன்மிக விஷயங்களில் சட்டம் தலையிடுகிறது' என்றும் வாதப் பிரதிவாதங்கள் அனல் பறக்க எழுந்துகொண்டிருக்கின்றன. இதுபற்றி சமூக ஆர்வலரும், கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவருமான நடிகை ரஞ்சனியிடம் பேசினோம். 

நடிகை ரஞ்சனி

``இந்தத் தீர்ப்பை நான் ஆச்சர்யமாவே பார்க்கலை. ஏன்னா, வட இந்தியர்களுக்கு ஐயப்பனையும் தெரியாது, நம்முடைய வழிபாடு முறைகளும் தெரியாது. இந்த வழக்கில் நம் வழிபாடுகள் பற்றியும் நம் ஆன்மிக முறைகள் பற்றியும் நல்லா தெரிஞ்ச ஒருத்தர் நீதிபதியாக இருந்திருந்தால், இப்படியொரு முடிவெடுத்திருக்க மாட்டாங்க. 

சபரிமலை

சபரிமலையைப் பொறுத்தவரைக்கும், போர்டுல உள்ளவங்க, பெண்களை வரவே வேண்டாம்னு சொல்லலை. 10 வயதுக்குள்ள வாங்க. இல்லன்னா 50 வயதுக்கு மேலே வாங்கன்னுதான் சொல்றாங்க. ஏன்னா, இங்கே ஐயப்பன் பிரம்மச்சாரி கடவுளா யோக நிலையில் உட்கார்ந்திருக்கார். அவரை தரிசனம் பண்ண, ஆண்கள் விரதம் இருந்தும், விரதம் இருக்கிற நேரத்துல மனைவியுடன் பழகாம இருந்தும் வர்றாங்க. அதனாலதான், சபரிமலையில இளம் வயது பெண்களோட டிஸ்டபன்ஸ் இருக்கக் கூடாதுன்னு பெரியவங்க இப்படியொரு கட்டுப்பாடு வைச்சிருக்காங்க. இது கட்டுப்பாடு மட்டும்தான், தடை கிடையாது. இதுல பெண் விடுதலை எங்கே இல்லாமபோச்சுன்னு எனக்குப் புரியலை. 

பெண்ணியவாதிகள், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரா நடக்கிற பாலியல் வன்கொடுமைக்கு எதிராக ஒண்ணுகூடுவோம், போராடுவோம், ஜெயிப்போம்'' என்று காரசாரமாக முடித்தார் ரஞ்சனி.