வெளியிடப்பட்ட நேரம்: 20:01 (29/09/2018)

கடைசி தொடர்பு:20:01 (29/09/2018)

"புலி, சிங்கம், யானையைத் தடை செஞ்சதால கஷ்டமா இருக்கு!" - `ஜம்போ சர்க்கஸ்' ரவுண்டப்!

"இந்த சர்க்கஸ்ல 120 பேர் வேலை செய்யுறாங்க. ஒரு சர்க்கஸ் நடத்த குறைந்தபட்சம் 15 லட்சமாவது செலவு செய்யணும். குழந்தைகள்தான் சர்க்கஸ்க்கு மூலதனம்ங்கிறதால குதிரை, நாய், ஒட்டகம், கிளின்னு குழந்தைகளுக்குப் பிடிச்ச பிராணிகளை வச்சு இந்த சர்க்கஸ் நடத்துறோம்."

திருச்சி மலைக்கோட்டை மக்களுக்கு இது கொண்டாட்ட சீஸன்.... காரணம், `ஜம்போ சர்க்கஸ்!’. ஆம், திருச்சி ஜி கார்னரில் போடப்பட்டிருக்கும் `ஜம்போ சர்க்கஸ்'தான் இப்போது மலைக்கோட்டை மக்களுக்குப் புதிய பொழுதுபோக்கு! 

சர்க்கஸ் கூடாரத்துக்குள் குழந்தைகளோடு குழந்தையாய் நாம் நுழைந்ததுமே கண் இமைகள் விரிய ஒருவித பயம் கலந்த பதற்றத்துடன் வரவேற்கிறது அந்தரத்தில் பறந்து விளையாடும் பார் விளையாட்டு. சர்க்கஸ் மீதான சலிப்பில்லாத க்ளிஷேக்களை அப்படியே காணமுடிகிறது. சாகசப் பெண்கள் 6 பேர் சைக்கிளில் பேலன்ஸ் நழுவாமல் சுற்றியது, மரணக் கூண்டுக்குள் தடதடவென பைக் ஓட்டி அதிரவைத்தது என அத்தனையும் திகில் வகையறா. கயிற்றின் மேல் நடனம், குதிரை, ஒட்டகத்தின் அணிவகுப்பு மற்றும் நாயின் மங்கி டான்ஸ் எனப் பிற்பகுதியோ படு சுவாரஸ்யமாக இருந்தது. ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் இடையில் கிச்சுக் கிச்சு மூட்டிய பஃபூனின் தர்பார் என மொத்தமும் சேர்த்து `ஜம்போ சர்க்கஸ்' திருவிழாவாகக் களைக்கட்டியது. `பறக்கும் பாவை', `அபூர்வ சகோதரர்கள்', `ஏழாம் அறிவு' எனப் படங்களில் பார்த்த சர்க்கஸ் காட்சிகளை நேரில் காண்பது அத்தனை பிரமிப்பு.

ஜம்போ சர்க்கஸ்

``தரை மேல் பிறக்க வைத்தான். எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்"- மீனவர்களின் வாழ்வியலைச் சொல்வதற்காக இந்த வரிகள் எழுதப்பட்டிருந்தாலும், அந்தரத்தில் பிழைப்பு நடத்தும் சர்க்கஸ் தொழிலாளர்களின் சாகசத்தைப் பார்த்தபோதும், இந்த வரிகளே ஞாபகத்துக்கு வந்தன. 

சஞ்சய்

காட்சி முடிந்ததும் சில சர்க்கஸ் கலைஞர்களை நேரில் சந்தித்தோம்... `பஃபூன்' சஞ்சய்தான் இந்த சர்க்கஸின் `அபூர்வ சகோதரர்கள் கமல்’. ``நான் 10 ம் கிளாஸ் முடிக்கும்போது என்னோட அம்மா இறந்துட்டாங்க. என் உருவத்துக்கு ஊருல எந்த வேலையும் எனக்குக் கிடைக்கலை. அப்படி வேலை இல்லாம அலைஞ்சுட்டு இருக்கும்போதுதான் இந்த சர்க்கஸ்ல எனக்கு வேலை கிடைச்சுது. 1997ல இங்கே சேர்ந்தேன். 20 வருஷத்துக்கும் மேல இந்த சர்க்கஸ்லதான் இருக்கேன். நான் எல்லாக் காட்சியிலேயும் வருவேன். ஜம்போ சர்க்கஸோட `ஆல் ரவுண்டர்' பாஸ் நான். தொடக்கத்துல எல்லாரும் கிண்டலடிச்ச என் உயரம்தான், மனசுக்கு நிறைவான இந்த சர்க்கஸ் வேலையை எனக்குக் கொடுத்துருக்கு!'' என்றார் நெகிழ்வாக.

முகேஸ் - சுபம்

முகேஷ் - சுபம் இருவரும்தான் சர்க்கஸின் நட்சத்திர தம்பதி. முகேஷ் மரணக்கூண்டில் பைக் ஓட்டும் `மோட்டார் சைக்கிள் ஸ்டன்ட்டர்'. சுபம், அந்தரத்தில் பறக்கும் பார் விளையாட்டு சாகசக்காரர். இவர்களிடம் பேச்சுக்கொடுத்தபோது, ``என்னோட சொந்தக்காரர் ஒருத்தரு சர்க்கஸ்ல இருந்தாரு. அவரைப் பார்த்துதான் சர்க்கஸ்க்குள்ள வந்தேன். நானும் சுபமும் உங்க ஊரு `ஜீ தமிழிலிருந்து ஸ்டார் பிளஸ்' வரைக்கும் நிறைய ரியாலிட்டி ஷோக்களில் கலந்துட்டு அசத்தியிருக்கோம். மலேசியா, மாலத்தீவுன்னு 7 நாடுகளுக்குப் பயணம் செஞ்சிருக்கோம். ரியாலிட்டி ஷோவுல கலந்துக்கிட்டாலும் கூட சர்க்கஸ்தான் எங்களுடைய முதன்மையான தொழில். இந்த மரணக்கூண்டில் பைக் ஓட்டுவது ஆரம்பத்துல ரொம்ப கஷ்டமா இருந்தது. கடுமையான பயிற்சிகள் மூலம் இப்போ சர்வ சாதாரணமா இதைப் பண்ணிட்டு இருக்கேன்" என்று முகேஷ் சொல்ல, அதை ஆமோதித்து கணவரின் முகம் பார்க்கிறார் சுபம்.

மேனேஜர் சுரேஷ்

`ஜம்போ சர்க்கஸ்' மேனேஜர் சுரேஷ், ``இந்த சர்க்கஸ்ல 120 பேர் வேலை செய்யுறாங்க. ஒரு சர்க்கஸ் நடத்த குறைந்தபட்சம் 15 லட்சமாவது செலவு செய்யணும். குழந்தைகள்தான் சர்க்கஸ்க்கு மூலதனம்ங்கிறதால குதிரை, நாய், ஒட்டகம், கிளின்னு குழந்தைகளுக்குப் பிடிச்ச பிராணிகளை வச்சு இந்த சர்க்கஸ் நடத்துறோம். ஒட்டுமொத்த இந்தியாவில் நாங்க சுத்தாத ஊரே கிடையாது. டிக்கெட் கொடுக்குற வேலையில் ஆரம்பிச்சு இப்போ மேனேஜரா 50 வருசம் இந்த சர்க்கஸ்லேயே என் வாழ்க்கை ஓடிடுச்சு. தஞ்சாவூர்ல ஒரு 37 நாள் சர்க்கஸ் போட்ட கையோடு இங்க திருச்சிக்கு வந்தோம். நைட் 7 மணி ஷோவுக்கு நல்ல கூட்டம் வருது. சனி, ஞாயிறு கிழமைகள்ல எல்லா சீட்டும் நிரம்பி ஹவுஸ் ஃபுல் ஆகிடுது. முன்னெல்லாம் புலி, சிங்கம், யானையை பாக்குறதுக்குன்னே ஒரு கூட்டம் வருவாங்க. அதெல்லாம் தடை பண்ணிட்டதால மட்டும் கொஞ்சம் கஷ்டமா இருக்குங்க. அந்தக் கூட்டத்தையெல்லாம் ரொம்பவே மிஸ் பண்றோம்" என முடித்துக் கொண்டார் சுரேஷ்.