“என் அம்மாவின் வலி உணர்ந்தேன்!”, சர்வதேச விழாவில் திரையிடப்படும் 'தேடல்' குறும்படம் குறித்து சுதா! | Transgender sudha talks about 'Thedal' shortfilm

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (29/09/2018)

கடைசி தொடர்பு:19:20 (29/09/2018)

“என் அம்மாவின் வலி உணர்ந்தேன்!”, சர்வதேச விழாவில் திரையிடப்படும் 'தேடல்' குறும்படம் குறித்து சுதா!

``இதுவரைக்கும் பொதுவெளியில திருநங்கைகளான நாங்க சந்திச்ச அவமானங்களைப் பத்தி மட்டும்தான் பேசியிருக்கோம். ஆனா இந்தக் குறும்படத்துல நடிக்கிறப்பதான் எங்களைப் பெத்தவங்க எவ்வளவு தூரம் அவமானப்படுறாங்கனு உணர்ந்தேன்."

“என் அம்மாவின் வலி உணர்ந்தேன்!”,  சர்வதேச விழாவில் திரையிடப்படும் 'தேடல்' குறும்படம் குறித்து சுதா!

ங்கு மூன்றாம் பாலினத்தவர் குறித்தும், அவர்களின் உரிமைகள் குறித்தும் தொடர்ந்து நாம் பல்வேறு வகையில் பேசியும் விவாதித்தும் வருகிறோம். ஆனால், அவர்களின் பெற்றோர்கள் சந்திக்கும் இன்னல்களையோ, வலிகளையோ நாம் அதிகமாக விவாதிப்பதுகூட இல்லை. அந்தக் குறையை போக்கியிருக்கிறது `தேடல்’ குறும்படம். சென்னை, பெங்களூரு, புனே, கேரளா, மும்பை, ஆகிய இடங்களில் நடந்த இன்டர்நேஷனல் க்யூயர் ஃபிலிம் ஃபெஸ்டிவல் 2018 என்ற பாலின சமத்துவத்தையும் உரிமைகள் பற்றியும் பேசும் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தக் குறும்படம், தற்போது அதே போன்று இத்தாலியன் மற்றும் அமெரிக்கா நடக்கும் திரைப்பட விழாக்களில் திரையிடப்படவுள்ளன. இந்தக் குறும்படத்தை இயக்கியவர் கேரளாவைச் சேர்ந்த மனோசான்.

சுதா

இந்தக் குறும்படம், தமிழ்நாடு திருநங்கைகள் நலவாழ்வு அமைப்பின் உறுப்பினர் சுதா மற்றும் அவரின் தாயார் பாக்கியவதி வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு எடுக்கப்பட்டது. இருவருமே அதில் நடித்திருக்கும் நிலையில், இது குறித்து சுதாவிடம் பேசினேன்.

"நான் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், என் அம்மாவைப் பத்தியும், அவங்களை நான் எந்தளவுக்கு மிஸ் சுதாபண்றேன்ங்கிறதை பத்தி பேசியிருந்தேன். அந்த நிகழ்ச்சியைப் பார்த்த மகேசன் 'உங்க  நிகழ்ச்சியைப் பார்த்தேன். நீங்க கண்கலங்கி உருக்கமாப் பேசியிருந்தீங்க. திருநங்கைகள் பற்றி நிறைய குறும்படங்கள் வெளிவந்திருக்கு. ஆனா, திருநங்கைகளைப் பெற்ற அம்மாக்களைப் பத்தி நாம ஒரு குறும்படம் பண்ணலாம்', னு சொன்னார். எனக்கும் இந்தப் பார்வை பிடிச்சிருந்தது. இது அவரோட முதல் குறும்படம். அதனால் என்னால் முடிச்ச சப்போர்ட்டை கொடுக்கணும்னு நினைச்சேன். எங்க சமூகத்தைப் பத்தி அவர் நிறைய தெரிஞ்சு வைச்சிருந்தார். அதை எல்லாம் என்கிட்ட சரியானு கிராஸ் செக் பண்ணிக்கிட்டார். என்னோட சொந்த அனுபவங்களையும் அவரோட பகிர்ந்துகிட்டேன். இதுவரைக்கும் பொதுவெளியில திருநங்கைகளான நாங்க சந்திச்ச அவமாங்களைப் பத்தி மட்டும்தான் பேசியிருக்கோம். ஆனா இந்தக் குறும்படத்துல நடிக்கிறப்பதான் எங்களைப் பெத்தவங்க எவ்வளவு தூரம் அவமானப்படுறாங்கனு உணர்ந்தேன்.

இந்தக் குறும்படத்துக்காக, நாங்க இரண்டு பேரும், எங்க அம்மாக்கிட்ட பேசினோம். அப்போ அவர் சொன்ன விஷயங்கள் எல்லாம் எனக்கே ரொம்ப புதுசா இருந்தது. ``நான் திருநங்கையாக இருக்கறது, உங்களுக்கு எப்படி இருந்தது?”, ``நீங்க என்னென்ன சமுதாயச் சிக்கலைகளை சந்திச்சீங்க”ங்கிற கேள்வியெல்லாம் கேட்டதே இல்லை. ஆனாம், இந்தக் குறும்படத்துக்காக அவங்ககிட்ட பேசும்போது, அவங்களுடைய வலிகளை ரொம்பவே உணர்ந்தேன். 

சுதா

உதாரணத்துக்கு, எங்க ஊருல வளைகாப்பு நிகழ்ச்சினா, எங்க அம்மாவைக் கூப்பிடுவாங்க. அம்மாவும் அங்கப்போய் கலந்துப்பாங்க. ஆனா, அந்தக் கர்ப்பிணி பொண்ணுக்கு அவங்களை எந்தச் சடங்கும் செய்யவிடமாட்டாங்க. ``எங்க இவங்க சடங்கு செஞ்சா, இவங்க மாதிரியே அந்தப் பொண்ணு திருநங்கையைப் பெத்து எடுத்துடுவாங்களோ”னு நினைப்பாங்களாம். இந்த மாதிரி விஷயங்களை நான் யோசித்ததே இல்லை. இப்போ அம்மா சொல்லித்தான் தெரியுது. அதெல்லாம் எவ்வளவு பெரிய வலி இல்லையா... ஆரம்பத்துல, எங்க  வீட்டுலேயும் எதிர்ப்புகள் இருந்தது, என் கூடப் பிறந்தவங்க ஆரம்பத்துல என்னை ஏத்துக்கலை. ஆனா, அம்மா எனக்கு எப்பவுமே பலமா இருந்தாங்க. எங்க எல்லாரையும் சமமா நடத்தினாங்க.

இப்போ, சர்வதேச அளவில, எங்க குறும்படத்துக்கு அங்கீகாரம் கிடைச்சிருக்குனு நினைக்கும்போது மனநிறைவா இருக்கு. அதே போல, எனக்கு இன்னொரு கனவு இருக்கு. பல திருநங்கைகளுடைய அம்மாக்களை ஒருங்கிணைச்சு, ஒரு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தணும்”, என்று தன் நியாயமான ஆசையைக் கூறி முடிக்கிறார் சுதா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close