ஜாவா பைக்குகளில் உங்களுக்கு எது பிடிக்கும்?! | Forgotten Jawa and Yezdi motorcycles in India

வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (30/09/2018)

கடைசி தொடர்பு:12:36 (30/09/2018)

ஜாவா பைக்குகளில் உங்களுக்கு எது பிடிக்கும்?!

முதலாம் உலகப்போரின் முடிவில் ஆயுதங்களுக்கான தேவை தீர்ந்திருந்தது. அதுவரை ஆயுதம் செய்தவர்கள் தொழிற்சாலைகளில் வாகனங்களைத் தயாரிக்க ஆரம்பிக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் கார்களை தயாரிக்க சிறிய நிறுவனங்கள் மோட்டார் பைக்குகளை தயாரிக்க...செக் குடியரசின் ராணுவத்துக்கு கையெறிகுண்டை உருவாக்கி கொடுத்த ஃபிரான்டிசெக் ஜானிசெக் என்பவர் ஜெர்மனியைச் சேர்ந்த வாண்டரர் எனும் நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலையை வாங்கி, 1929-ம் ஆண்டு ஜானிசெக்-வாண்டரர் (ஜாவா) எனும் நிறுவனத்தை உருவாக்கினார். ஜாவாவின் நோக்கம் எடைகுறைவான, விலைகுறைவான எல்லோராலும் வாங்கும்படியான பைக்கை தயாரிப்பது.

31 ஆண்டுகள் கழித்து மைசூரைச் சேர்ந்த ஐடியல் எனும் நிறுவனம் இந்த ஜாவா பைக்குகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்தது. 1973-ல் இந்தியாவிலேயே உற்பத்தியைத் தொடங்கி யெஸ்டி என்ற பெயரில் இந்த பைக்குகளை களமிறக்கியது. விற்பனை நிறுத்தப்பட்டு 22 ஆண்டுகள் கழித்து இன்னும் ஜாவா என்றால் ஒன்றுகூடி விடுவார்கள் ரசிகர்கள். ஜாவாவில் பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்தவை யெஸ்டி ரோடுகிங் மற்றும் யெஸ்டி கிளாசிக்தான். ஜாவா இந்தியாவில் வேறு என்னென்ன பைக்குகளை விற்பனை செய்தது என்று பார்ப்போம்.

ஜாவா Type A

ஜாவா 250  Type A

இந்தியாவில் வந்த ஜாவாவின் முதல் பைக்  Type A (Type 353 என்றும் சொல்வார்கள்). இந்த பைக் 249சிசி சிங்கில் சிலிண்டர் இன்ஜின் மற்றும் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வெளிவந்தது. 12bhp பவர் தரக்கூடிய இந்த பைக் எண்டியூரன்ஸ் மற்றும் ட்ரையல் போட்டிகளில் பங்கேற்பவர்களின் ஃபேவரைட். நல்ல கண்டிஷனில் இருக்கும் Type A பைக்கை வாங்க இன்னும் பைக் கலெக்டர்கள் அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

YEZDI Roadking

யெஸ்டி ரோடுகிங்

ராயல் என்ஃபீல்டின் தீவிர எதிரி என்றால் அது யெஸ்டிதான். பொள்ளாச்சி, திண்டுக்கல், கேரளா பக்கம் எல்லாம் ராயல் என்ஃபீல்டு பிரியர்களுக்கும், யெஸ்டி விரும்பிகளுக்கும் கேங் வார் நடந்த கதையெல்லாம் சொல்வார்கள். யெஸ்டியில் எல்லோருக்கும் தெரிந்த மாடல் யெஸ்டி ரோடுகிங். இந்த பைக்கில் 248.5 cc சிங்கில் சிலிண்டர் 2 ஸ்டிரோக் இன்ஜின் வந்தது. இந்த இன்ஜின் 16bhp பவரையும், 24Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது. இதன் எடை வெறும் 140 கிலோதான். புல்லட்டில் பெரிய இன்ஜின்கள் இருந்தாலும், வேகம் என்று வந்தால் ஜாவாதான் கிங். அதற்குச் சாட்சி இந்த ரோடுகிங். 4.1 நொடிகள் போதும் 60 கி.மீ வேகத்தை அடைய. 120 கி.மீ அதிகபட்ச வேகம் போகக்கூடியது இந்த ரோடுகிங்.

யெஸ்டி ஆயில்கிங்

ஆயில்கிங்-ரோடுகிங் இரண்டு பைக்குக்கும் ஒரே வித்தியாசம்தான். ஆயில்கிங் பைக்கில் ஆயில் பம்ப் வரும். இது பெட்ரோல் மற்றும் ஆயிலை இன்ஜினுக்கு கலந்து அனுப்பும். ஆயில்கிங் பைக்கில் இருக்கும் ஆயில்பம்ப் சரியாக வேலைசெய்யாது. அதனால் பல பேர் பைக்கை ஆயில் இல்லாமல்தான் ஓட்டிச்செல்வார்கள். இதனால், இந்த பைக்கின் விற்பனையை 3 ஆண்டுகளிலேயே நிறுத்திவிட்டார்கள். ஆயில்கிங் பைக்கை நிறுத்திய பிறகுதான் ரோடுகிங் வந்தது. ஆயில்கிங் பைக் 16 bhp பவரை உருவாக்கக்கூடியது. 1975-ல் வெளிவந்த இது அந்த காலத்தின் ஃபாஸ்டஸ்ட் சிங்கில் சிலிண்டர் பைக்.

YEZDI 175

யெஸ்டி 175

பெயரிலேயே தெரிந்திருக்கும்...இந்த பைக்கில் இருந்தது 175சிசி சிங்கில் சிலிண்டர் 2 ஸ்டிரோக் இன்ஜின். 9.5bhp பவரையும், 14.27Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது இந்த இன்ஜின். 95 கி.மீ வேகம் போகக்கூடிய இந்த பைக் அப்போதைய ராயல் என்ஃபீல்டு பைக்கை விட இருமடங்கு விலை குறைவு. ஆனால், அதை விட வேகம் அதிகம். இதில் 14 லிட்டர் பெட்ரோல் டேங்க் வந்தது இருந்தும் இதன் எடை வெறும் 113 கிலோதான். 40கி.மீ வேகத்தை 3.5 நொடிகளில் அடைந்துவிடும். எடை குறைவு, மைலேஜ் அதிகம், மேடுகளில் அசால்ட்டாக ஏறும் என்பதால் இந்த பைக்கை தொலைதூர பயணங்களுக்கு அதிகம் கொண்டுசெல்வார்கள்.

YEZDI Monarch

யெஸ்டி மோனார்க்

யெஸ்டி 175 பைக்கின் ஃபிரேமிலும், யெஸ்டி ரோடுகிங் பைக்கின் இன்ஜினையும் கலந்து விற்பனைக்கு வந்ததுதான் இந்த மோனார்க். மோனார்க்கின் இன்ஜின் 16bhp பவரையும், 24 Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது. யெஸ்டி 175 பைக்கின் அப்கிரேட் இது என்பார்கள். 250சிசி பைக்குகளிலேயே எடை குறைவானது இது. வெறும் 136 கிலோதான்.

ஜாவா யெஸ்டி கிளாசிக்

யெஸ்டி கிளாசிக்

புல்லட்டின் நேரடி எதிரி இந்த யெஸ்டி கிளாசிக். தொலைதூர பயணங்களுக்காகவே ஜாவா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பைக் இது.  Forever Bike, Forever Value என்ற வாசகத்தோடு ஐடியல் ஜாவா விற்பனை செய்த முதல் பைக் இது. கிளாசிக்கில் 250சிசி சிங்கில் சிலிண்டர் 2 ஸ்டிரோக் இன்ஜின் வந்தது. இந்த இன்ஜின் 13bhp பவரையும் 20Nm டார்க்கையும் உருவாக்கக்கூடியது. ஓடும் நிலையில், நல்ல கன்டிஷனில் இருந்தால் இந்த பைக்கின் தற்போதைய மதிப்பே 1 லட்சம் ரூபாய். ஜாவா பைக்குகளிலேயே டிசைனில் அனைவருக்கும் பெரும்பாலும் பிடித்தது கிளாசிக் மாடல்தான்.

யெஸ்டி  CL-II

கிளாசிக்  CL-II மாடல் யெஸ்டி ரோடுகிங்கின் அப்டேட். யெஸ்டி கிளாசிக் பைக்கின் அதே இன்ஜின்தான் இந்த பைக்கிலும். ஆனால், இதன் எடை அதைவிட 9 கிலோ குறைவு. 131 கிலோதான். அதிகபட்சம் 110கி.மீ வேகம்போகும் இந்த பைக் 60கி.மீ வேகத்தை 4.6 நொடிகளிலேயே அடைந்துவிடும்.

yezdi classic

யெஸ்டி 60

ஐடியல் ஜாவா தயாரித்த மினிபைக் இந்த யெஸ்டி 60. இளைஞர்களையும், பெண்களையும் குறிவைத்து வந்த யெஸ்டி 60 step through ஸ்டைலில் வந்தது. இந்த பைக்கில் 60cc 2 ஸ்டிரோக் இன்ஜின் வந்தது. இந்த இன்ஜின் 3.6bhp பவரை உருவாக்கக்கூடியது. இந்த இன்ஜின் 3 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணியோடு வந்தது.

யெஸ்டி டீலக்ஸ்

யெஸ்டி ரோடுகிங் மற்றும் கிளாசிக் மாடலில் இருக்கும் அதே இன்ஜின், சஸ்பென்ஷன், பிரேக் உடன் வந்த மாடல் யெஸ்டி டீலக்ஸ். இந்த மாடலை ஜாவாவின் ஸ்டைலிஷ் பைக் என்று சொல்வார்கள். 21Nm டார்க்கும் 13bhp பவரும் உருவாக்கக்கூடிய இந்த பைக்கின் எடை வெறும் 131 கிலோதான். 4.6 நொடியில் 60கி.மீ வேகத்தைத் தொட்டுவிடும்.

YEZDI deluxe

யெஸ்டி 350

மற்ற ஜாவா பைக்குகள் புல்லட்டுக்கு போட்டி என்றால் இந்த பைக் யமஹா  RD350-யின் போட்டி என்பார்கள் (ரியாலிட்டி வேறு). ஜாவா பைக்குகளை ஒப்பிடுகையில் இந்த பைக் பவர்ஃபுல்லானது. 21bhp பவரை உருவாக்கும் ட்வின் சிலிண்டர் செட்டப் கொண்டது இது.  RD350-யை விட விலை குறைவாக இருந்தாலும் அதன் டபுள் கார்புரேட்டர், ரீட் வால்வ் போன்ற தொழில்நுட்பங்கள் இதில் இல்லை. மேலும்  RD350 பைக்கின் 30.5bhp பவரோடு மோதமுடியவில்லை.


டிரெண்டிங் @ விகடன்