`ஐ டச் மைசெல்ஃப்' - மார்பக புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் செரீனா! | Serena Williams sings song for breast cancer awareness

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (30/09/2018)

கடைசி தொடர்பு:07:16 (01/10/2018)

`ஐ டச் மைசெல்ஃப்' - மார்பக புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் செரீனா!

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஒரு பாடலை பாடியுள்ளார். 

செரீனா வில்லியம்ஸ்

தற்காலத்தில் பெண்களை அதிகம் பாதிக்கும் நோயாக மாறியுள்ளது மார்பகப் புற்றுநோய். ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்கிலாந்தில் மட்டும் ஆண்டுக்கு 50,000-க்கும் அதிகமானோர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும், 2020-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடத்துக்கும் உலகம் முழுவதும் 76,000 பெண்களைக் கொல்லும் கொடிய நோயாக மார்பகப் புற்றுநோய் மாறும் என சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று கூறியுள்ளது. மிகவும் கொடிய நோயாக மாறியுள்ள இதிலிருந்து பெண்களைக் காக்கும் விதமாக பல்வேறு நாடுகளிலும் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பல பெண் பிரபலங்களும் நோயை ஒழிக்கக் குரல் கொடுத்து வருகின்றனர். 

அந்தவகையில், பிரபல அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு பாடலை பாடி அதைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 1991-ம் ஆண்டு வெளியான தி டிவினில்ஸின் `ஐ டச் மைசெல்ஃப்' எனத் தொடங்கும் பாடலைத் தன் சொந்தக்குரலில் செரீனா பாடியுள்ளார். கூடவே, ``எல்லா பெண்களுக்கும், உலகெங்கிலும் உள்ள அனைத்து நிறப் பெண்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சிக்கல் இது என்பதால், நான் அதைச் செய்ய விரும்பினேன். ஆரம்பக் கண்டறிதல் முக்கியமானது. அது பல உயிர்களைக் காப்பாற்றுகிறது. இது பெண்களுக்கு  ஞாபகப்படுத்த உதவும்  என நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். தொடக்கக் காலத்திலேயே நோயைக் கண்டறிய,  பெண்கள் மார்பக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். செரீனாவின் இந்த முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க