Published:Updated:

``வேலையை முடிக்காமல் வர மாட்டேன்” - இந்தோனேசியா நிலநடுக்கத்தின்போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

``வேலையை முடிக்காமல் வர மாட்டேன்” - இந்தோனேசியா நிலநடுக்கத்தின்போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
``வேலையை முடிக்காமல் வர மாட்டேன்” - இந்தோனேசியா நிலநடுக்கத்தின்போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

இந்தோனேசியா நாட்டின் சுலவேசி தீவை கடந்த வெள்ளிக்கிழமை கடும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியது. இதில் பலு உள்ளிட்ட பல இடங்கள் தரைமட்டமாயின. இந்தப்  பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை  800-ஐ தாண்டியுள்ளது. மீட்புப்பணிகள்  இன்னும் தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. 

இந்த நிலையில், விமான நிலைய அதிகாரி ஒருவர் அந்நாட்டு மக்களால் நாட்டின் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருகிறார். அவர் பெயர் அந்தோனியஸ் குணவான் அகுங். 21 வயதான இவர் பலுவில் உள்ள அல் -ஜுஃப்ரி விமான நிலையத்தில், ஏர் டிராஃபிக் கட்டுப்பாட்டு அறையில் பணி செய்துவந்தார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பணியில் இருந்த அவர், பாடிக் ஏர் விமானம் செல்ல அனுமதி அளித்தார். அந்த விமானத்தில் சுமார் 200 பயணிகள் இருந்தனர். நிலநடுக்கத்தை  உணர்ந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக

கட்டடத்தை விட்டு வெளியேறினர். கட்டடத்தில் இருந்து வெளியேறும்படி மற்ற அதிகாரிகள் சொல்லியும், தன் பணியை முடிக்காமல் வரமாட்டேன் என்று மறுத்துள்ளார் அகுங்.  

தான் அனுமதி அளித்த விமானம் முழுமையாகப்  பறக்க தொடங்கியதை 4-வது மாடியில் இருந்து உறுதி செய்துவிட்டு அதன் பின்னர் கீழே இறங்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்குள் கட்டடம் நிலைகுலைந்துவிழ, அகுங் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். பலத்த காயங்களுடன் கீழே விழுந்த அவருக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டது. 

மேல் சிகிச்சைக்காக அவரை அழைத்துச் செல்ல ஏர் அம்புலன்ஸ் வந்தபோது, அவர் மரணமடைந்துவிட்டார். இவரது இந்தச்  செயல் பெரும் தியாகம் என பாடிக் ஏர் விமான விமானி தெரிவித்துள்ளார்.  சமூகவலைதளங்களில் பலர் அவருக்கு தங்களது பாராட்டுகளைப் பதிவு செய்து வருகின்றனர். அவர் செய்த தியாகத்தால் இன்று  200-க்கும் அதிகமானோர் உயிருடன் இருப்பதாக அந்நாட்டு மக்கள் அகுங்குக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  

மேலும் இவரது தியாகத்தை கெளரவிக்கும் விதமாக, அவரது இறுதிச்சடங்குக்கு அந்நாட்டு பாதுகாப்பு வீரர்கள் அவரது உடலை தங்களது தோளில் சுமந்து வந்தது நெகிழ்ச்சியாக இருந்தது.  இந்த இளம் வயதில் அவரது துணிச்சல் ஆச்சர்யம் அளிப்பதாக தெரிவிக்கின்றனர் அந்நாட்டு மக்கள்.