``சில பேரு ஒத்த ரூபாய்க்கெல்லாம் பேரம் பேசுவாங்க... என்ன செய்யச் சொல்ற...”- ராணி பாட்டியின் வாழ்க்கைப்பாடு! #InternationalDayForOlderPersons | An Elder age woman in Koyambedu market shares her life story

வெளியிடப்பட்ட நேரம்: 09:24 (01/10/2018)

கடைசி தொடர்பு:18:35 (01/10/2018)

``சில பேரு ஒத்த ரூபாய்க்கெல்லாம் பேரம் பேசுவாங்க... என்ன செய்யச் சொல்ற...”- ராணி பாட்டியின் வாழ்க்கைப்பாடு! #InternationalDayForOlderPersons

``சில பேரு ஒத்த ரூபாய்க்கெல்லாம் பேரம் பேசுவாங்க... என்ன செய்யச் சொல்ற...”- ராணி பாட்டியின் வாழ்க்கைப்பாடு! #InternationalDayForOlderPersons

ன்று (அக்டோபர் 1) முதியோர் தினம். நள்ளிரவில் எழுந்து பேருந்திலோ, ஷேர் ஆட்டோவிலோ நெரிசலில் சிக்கி வந்து பழங்களையும், பூக்களையும், காய்கறிகளையும் வாங்கிச்சென்று சாலையோரத்திலோ, வீதி வீதியாகச் சென்றோ விற்பனை செய்கிற பாட்டிகளின் வாழ்க்கைப்பாட்டை அறிந்துகொள்ள கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்றேன்.   

ராணி பாட்டி

அதிகாலை 6 மணி. 

ராணி பாட்டி, பெயருக்கும் உருவத்துக்கும் சம்பந்தமில்லாமல், கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு திண்டில் துளசிமாலைக்கும், வில்வ இலைகளுக்கும் இடையில் உட்கார்ந்திருந்தார். அவரைப் போலவே சில பாட்டிகளும், 30 வயதைக் கடந்த சில பெண்களும் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். பாட்டியிடம் பேச்சுக்கொடுத்தேன். 

கடந்த இருபத்தைந்து வருடங்களாக கோயம்பேடு பகுதியில் பூ வியாபாரம் செய்துகொண்டிருக்கிறாராம் ராணி பாட்டி. தாமரை, அறுகம்புல், வில்வம், துளசி, துளசி மாலை விற்கிறார். மூன்று மகன்கள், ஒரு மகள் என மொத்தம் நான்கு பிள்ளைகள். அதில் இரண்டு மகன்கள், ஆட்டோ ஓட்டுநர்கள். கடைசி மகன், போலீஸ். மகள், பக்கத்திலேயே பூக்கடை வைத்திருக்கிறார். எல்லோரையும் ஆளாக்க உதவியது இந்தப் பூ வியாபாரம்தான். 

ராணி பாட்டி

``எனக்குச் சென்னை அயனாவரம்தான் பூர்வீகம். நாற்பதைஞ்சு வருசமா பூ யாவாரம்தான். உடம்பு நல்லாயிருந்த வரைக்கும், பூவைக் கட்டித் தெருத்தெருவாப் போய் விப்பேன். இப்போ, வயசு 68 ஆச்சு. முன்னமாதிரி உழைக்க எல்லாம் தெம்பில்ல. அதனால, இங்க உட்காந்து விக்கிறேன்..." என்றபடி வியாபாரத்தில் கண்ணாயிருக்கிறார் ராணி பாட்டி. 

``விடியகாலையில மூணு மணிக்கெல்லாம் இங்க வந்துடுவேன். பக்கத்துல இருக்க கோயில் ஐயருங்கலாம் வர ஆரம்பிச்சுடுவாங்க. தினம் மதியம் மூணு மணி வரை வியாவாரம் நல்லா இருக்கும்" என்கிற ராணி பாட்டி, ``படைக்குறது சாமிக்கா இருந்தாலும், அஞ்சு ரூவா குறைச்சுக்கோமானுதான் நிறையபேர் பேரம் பேசுவாங்க  கண்ணு. சில பேரு ஒத்த ரூபாய்க்கெல்லாம் பேரம் பேசுவாங்க... என்ன செய்யச் சொல்ற... கொஞ்சம் கூடுதலா வாங்குங்கப்பா, குறைச்சு தர்றேன்னு சொல்லிடுவேன்" என்கிறார். 

பேசிக்கொண்டிருந்தபோதே பிள்ளையாருக்கும், அனுமாருக்கும் துளசியும், தாமரையும், வில்வமும் வாங்கிச் செல்கிறார்கள். எல்லோரும் பொதுப்பண்பாக பேரம் பேசுகிறார்கள். பாட்டியே தொடர்ந்தார்... ``என் வீட்டுக்காரர் பேரு முனுசாமி... பக்கத்து ஸ்கூல்ல, வாட்ச்மேனா இருக்காரு. மாசம், அஞ்சாயிரம் கொடுப்பாங்க. போன வருசம்தான் காப்பீட்டு திட்டத்துல கால் ஆபரேஷன் பண்ணிகிட்டாரு. மருந்து மாத்திரையெல்லாம் ரெகுலரா போடனும்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. அந்தச் செலவே ரெண்டாயிரம், மூணாயிரம் வந்துடும். மட்டுமில்லாம அவருக்குப் போக்குவரத்துச் செலவு வேற... அதனால, அவரோட வருமானம் எதுவும் வீட்டுக்கு வராது.  என்னோட வருமானத்தையும் அவர் கேட்டுக்க மாட்டார். ஆபரேஷனுக்கு மட்டும், பிள்ளைகக்கிட்ட காசு வாங்கினோம். மத்தபடி, எதுக்காகவும் பிள்ளைகளை எதிர்பாக்குறதில்லை... பாவம், அதுங்க கஷ்டம் அதுகளுக்கு...”

ராணி பாட்டி கதை - கோயம்பேடு மார்கெட்

பாட்டியை இறுக அணைத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. எவ்வளவு பெருந்தன்மை பாட்டிக்கு. இன்றைக்கும், அப்பாக்களையும் பிள்ளைகளையுமே பொருளாதார ரீதியாக நம்பியிருக்கும் பல 'குடும்பத்தலைவி'களை நான் பார்த்திருக்கிறேன். பெண்பிள்ளைகளை, பெண் என்பதாலேயே வேலைக்குச் செல்ல அனுமதிக்காத, பொருளாதார ரீதியாக சுதந்திரமாக விடாத எத்தனையோ குடும்பங்களும் இருக்கின்றன. அவர்களுக்கு மத்தியில் இத்தனை பக்குவமாகப் பேசுகிற பாட்டியைப் பார்க்கிறபோது பெருமிதமாக இருந்தது. 

எனக்கு என் அம்மாவின் நினைவு வந்தது.

``அதான் ரெண்டு பிள்ளைகளும் வேலைக்கு போய்டாங்கள்ல... நீங்க வேலையை விட்டுட்டு வீட்டுல இருக்க வேண்டியதானே...”  அம்மா அதிகம் எதிர்கொண்ட கேள்வி இது. 

``பிள்ளைகளை படிக்க வச்சேன். அதுங்க, வேலைக்கு போய்டுச்சுங்க. அதுக்கும், நான் வேலையை விடறதுக்கும் என்ன சம்பந்தம்?"  என்பார் அம்மா. 

ராணி பாட்டியும் இப்படித்தான் பேசினார். ``எனக்கு வேலை செஞ்சு பழகிடுச்சும்மா. வீட்டுல உட்கார மனசு வரலே. செலவுக்கு பணம் வேணும்னா, மவன்கிட்டயும் மருமவகிட்டயும் கை நீட்டுற நிலை வந்துடும். அவங்க தப்பா நினைச்சுக்க மாட்டாங்கதான்... ஆனா எனக்குதான் சங்கடமா இருக்கும். இப்போ பாரு, என் பேரப்பிள்ளைகளுக்கு, கை செலவுக்கு தெனமும் நான் காசு கொடுக்குறேன். அதுகளுக்கு செய்றதுதானே என்னோட சந்தோஷம்..." என்கிறார்.

பாட்டி - பூ வியாபாரம்

பாட்டியின் மிகப்பெரிய பிரச்னை, அவர் அமர்ந்திருக்கும் இடம்! கடை லீஸுக்கு எடுத்து வியாபாரம் செய்யுமளவுக்கு வசதியில்லை. ஓரமாக உட்கார்ந்து வியாபாரம் செய்யவேண்டிய சூழல். திடீரென வரும் மாவட்ட ஆட்சியரின் 'பறக்கும் படைகள்', ராணிப்பாட்டியைப் போல திண்டுகளில் இருப்பவர்களின் பொருள்களை வீசி எறிந்துவிடுகின்றனராம். விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பவை எல்லாம் கடவுளுக்கு படைக்கப்படும் பொருள்கள் என்பதால், சில அதிகாரிகள் விநோதமாக, பக்கத்திலிருக்கும் கோயில்களில் கொண்டுபோய் கொட்டிவிடுகிறார்களாம். 

இப்படி ராணி பாட்டி இழந்தது மட்டும், நாற்பாதாயிரம் ரூபாய்க்கு மேல் இருக்குமாம். அந்த இடத்தில், இவரைப்போல ஐம்பது பேராவது இருப்பார்கள். ’மார்க்கெட்டின் பின்புறம் இருக்கும் காலி இடத்தில் வேண்டுமானால் உட்கார்ந்துகொள்ளுங்கள்’ என்று ஆட்சியர் கூறியுள்ளார். அங்கே அமர்ந்தால், வியாபாரம் இருக்காது என்பது இவர்களின் கவலை. அதிகாரிகளிடம் பேசவும் முடியாமல், வேறு வியாபரத்துக்குச் செல்லவும் முடியாமல் பலர் அங்கு தவிக்கிறார்கள்.

ராணிப் பாட்டியைப்போல, பள்ளிகளின் வாசல்களில் இலந்தைப்பழம் விற்கிற, தெருமுனைகளிலும் பஸ் ஸ்டாண்ட்களிலும் பூ கட்டி விற்கிற, தெருவோரங்களில் இட்லி வியாபாரம் செய்கிற எத்தனையோ பாட்டிகளை தினமும் கடந்து செல்கிறோம். இவர்கள் ஏன் கைவிடப்பட்டார்கள்..? தள்ளாத வயதில் தங்கள் பேரன், பேத்திகளோடு சந்தோஷமாக கழிய வேண்டிய இவர்களின் பொழுதுகள் ஏன், கடும் உழைப்பில் கழிய வேண்டும்?

கோயம்பேடு மார்க்கெட்

முதியோரை இன்றைய இளைய தலைமுறை உரிய மரியாதையோடு நடத்துகிறதா? எத்தனைப் பிள்ளைகள், தங்கள் தந்தையை, தாயை, பாட்டியை, தாத்தாவை அன்பாக அரவணைத்து அவர்கள் தேவைகள் தீர்த்து ஆதரவாக இருக்கிறார்கள்? ஒரேயொரு எதார்த்தத்தை மட்டும் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். காலம் சக்கரம் போன்றது. இன்றைய இளைஞர்கள் நாளை முதியவர்கள். இன்று முதியவர்களை நாம் எப்படி நடத்துகிறோமோ, அப்படித்தான் நாளை காலம் நம்மை நடத்தும்...!

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close