வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (01/10/2018)

கடைசி தொடர்பு:15:35 (03/10/2018)

100-க்கும் மேற்பட்ட அரங்குகள்! - வி.ஐ.டி பல்கலைக்கழகம் நடத்தும் விவசாய திருவிழா!

தமிழ்நாட்டிலுள்ள விவசாயப் பெருமக்களின் வேளாண்மைத் தொழில் சிறப்படையவும், அவர்களது வாழ்வு உயரவும், வி.ஐ.டி பல்கலைக்கழகம் பல்வேறு வேளாண் தொழில்நுட்ப விரிவாக்கத் திட்டங்களையும், ஊரக வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த சில ஆண்டுகளாக `உழவர் களஞ்சியம்` என்னும் நிகழ்ச்சி வேலூரில் வி.ஐ.டி பல்கலைக்கழக வளாகத்தில் விவசாய விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகளும், குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கான பேரும் கலந்துகொண்டு பயன்பெற்று வருகின்றனர்

இந்த ஆண்டும், வருகிற அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில் வி.ஐ.டி-யில் ‘உழவர் களஞ்சியம் 2O18’ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நபார்டு வங்கி ஆகிய நிறுவனங்களோடு இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இதில் 5,OOO விவசாயிகள் கலந்துகொள்வர். அரசு வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, பட்டுப்பூச்சி வளர்ப்புத் துறை, பண்ணை இயந்திரவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிலையங்கள் வேளாண் அறிவியல் மையங்கள், விதை, நீர் மேலாண்மை, இயற்கை உரம், தோட்டக்கலை, உணவு பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டப்பட்ட விலை பொருள்கள், நவீன விவசாயக் கருவிகள், கால்நடை வளர்ப்பு , தேனீ உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வரும் தனியார் விவசாய நிறுவனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

''விவசாயப் பெருமக்களுக்காக இவ்விரு நாள்களிலும் கருத்தரங்குகள் நடைபெறும். இயற்கை வேளாண்மையில் நுண்ணுயிர்களின் பங்கு, மண் வளம் மற்றும் பயிர் பாதுகாப்பு, புதிய வேளாண் விற்பனை உத்திகள், காய்கறி மற்றும் பழங்களில் அறுவடை பின்சார் தொழில்நுட்பம் , காளான் வகைகளும் சாகுபடி முறைகளும் ஆகிய தலைப்புகளில் விவசாய வல்லுநர்கள் கருத்துரை வழங்க இருக்கிறார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் வி.ஐ.டி பல்கலைக்கழக வேளாண்மைத் துறை, வேளாண் பண்ணை , மூலிகைப் பண்ணை ஆகியவற்றின் திறப்பு விழாவும் நடைபெற உள்ளது. வி.ஐ.டி-யில் இளநிலை வேளாண்மை பயிலும் மாணவ மாணவியர் ‘விவசாய பாரம்பர்யம்' என்ற தலைப்பில் கண்காட்சியும், செயல்முறை விளக்கங்களும், கலை நிகழ்ச்சிகளும் நிகழ்த்த இருக்கிறார்கள். அனுமதி இலவசம் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறலாம்'' என அழைப்பு விடுத்தார் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் செல்வம்.