அடுத்த 10 ஆண்டுகளில் சந்திரன்; 20 ஆண்டுகளில் செவ்வாய்... புதிய மைல்கல்லை நோக்கி நாசா! | NASA Unveils roadmap to Return to Moon and Mars

வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (01/10/2018)

கடைசி தொடர்பு:14:35 (01/10/2018)

அடுத்த 10 ஆண்டுகளில் சந்திரன்; 20 ஆண்டுகளில் செவ்வாய்... புதிய மைல்கல்லை நோக்கி நாசா!

இந்த நூற்றாண்டின் பெயர் சொல்லத்தக்க சாதனை ஒன்றை செய்யத் தயாராகிவருகிறது நாசா.

அடுத்த 10 ஆண்டுகளில் சந்திரன்; 20 ஆண்டுகளில் செவ்வாய்... புதிய மைல்கல்லை நோக்கி நாசா!

னிதனின் காலடித்தடம் பூமிக்கு வெளியே ஒரு இடத்தில் இருக்கிறதென்றால் அது சந்திரனில்தான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அதை நடத்திக் காட்டியது நாசா. தற்பொழுது அந்தச் சம்பவம் நடந்து ஐம்பது ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில், தனது அடுத்த இலக்கை அடைவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. நமக்கு அருகில் இருந்த சந்திரனையாவது நம்மால் பார்க்க முடிந்தது. ஆனால், நாசாவின் அடுத்த இலக்கான செவ்வாய்க் கிரகம் கண்களுக்குப் புலப்படாத தூரத்தில் இருக்கிறது.

மீண்டும் நிலவுக்கு ஒரு பயணம்

நாசா

நிலவில் கால்பதித்த பிறகு வேறு எந்தப் பெரிய சாதனையையும் நாசா நிகழ்த்தவில்லை. எனவே, தற்பொழுது முன்பைவிடப் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என நாசா முடிவெடுத்திருக்கிறது. அது செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது. இது திடீரென எடுக்கப்பட்ட முடிவு கிடையாது, பல வருடங்களாகவே நாசா அதை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக்கிறது. இப்போது அதை எப்படிச் செயல்படுத்தப்போகிறோம் என்பதை அறிவித்திருக்கிறது. அதன் முதல் படியாக இருக்கப்போவது மீண்டும் ஒரு நிலவுப் பயணம். அங்கே மீண்டும் தரையிறங்குவது, முன்பைவிட அதிக நாள்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வது என நாசாவிடம் பல்வேறு திட்டங்கள் கையில் இருக்கின்றன. கடந்த டிசம்பர் மாதம் Space Policy Directive 1 என்ற புதிய விண்வெளிக் கொள்கைக்கு ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அனுமதி அளித்திருந்தார்.

ட்ரம்ப்

அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த இலக்குகளை நாசா தீர்மானித்திருக்கிறது. அதன்படி அடுத்த பத்தாண்டுகளுக்குள் நிலவில் தனது விண்வெளி வீரர்களைத் தரையிறங்க வைக்க நாசா திட்டமிட்டிருக்கிறது. ஆனால், இது முன்னர் போல இருக்காது. அங்கே அதிக நாள்கள் அவர்கள் தங்கியிருப்பார்கள். அதற்கான கட்டமைப்புகளும் உருவாக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. இதற்காக முன்பை விடவும் அதிக தனியார் அமைப்புகளை நாடப்போகிறது நாசா. ``நாங்கள் மீண்டும் நிலவுக்கு திரும்பிப் போகவில்லை. நாங்கள் நிலவைத் தாண்டியும் முன்னேறப் போகிறோம்" என்கிறார் நாசாவின் இணை நிர்வாகி ஸ்டீவ் ஜூர்ஸிக் (Steve Jurczyk). அதன்படி பார்த்தால் இந்தப் பயணம் செவ்வாய்க்குச் செல்வதற்கான ஒரு முன்னோட்டமாக அமையக்கூடும்.

செவ்வாய் கிரகத்துக்குப் பயணம் எப்போது ?

செவ்வாய் கிரகம்

அடுத்த பத்து வருடங்களில் நிலவு என்றால், அதற்கடுத்த பத்தாண்டுகளில் செவ்வாயை அடைவதற்கான திட்டம் நாசாவிடம் இருக்கிறது. நமது சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்தபடியாக மனிதன் வாழத் தகுதியான கோளாகக் கருதப்படுவது செவ்வாய்தான். அதன் காரணமாகவே உலக நாடுகள் அதன் மேல் அதிக கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக அமெரிக்காவே அதீத ஆர்வம் காட்டுகிறது. இந்தியா போன்ற நாடுகள் அங்கே நீர் இருக்கிறதா என்று ஆராய்ந்துகொண்டிருக்கும் நேரத்தில் நாசா ஒருபடி மேலே போய் மனிதர்கள் வாழ முடியுமா என்று ஆராய்ந்துகொண்டிருக்கிறது. ஏற்கெனவே நாசாவின் ரோவர்கள் செவ்வாயில் தரையிறங்கியிருக்கின்றன. அவை மூலமாக பல்வேறு தகவல்கள் நமக்குத் தெரிய வந்திருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட அங்கே உயிரினங்கள் வாழ்ந்த தடயங்களைப் போல சிலவற்றைக் கண்டறிந்திருப்பதாக நாசா அறிவித்தது. ஏற்கெனவே உயிரினங்கள் வாழ்ந்திருந்தால் அவை எப்படி வாழ்ந்திருக்கும். இப்பொழுது ஏதாவது உயிரினங்கள் மிஞ்சியிருக்கிறதா? அப்படியிருந்தால் அவை எப்படி உயிர் வாழ்கின்றன என்பது போன்ற தகவல்கள் இன்னும் நமக்குப் புதிராகத்தான் இருந்து வருகின்றன.

அடுத்த இரண்டு வருடங்களில், அதாவது 2020-ம் ஆண்டில் மற்றொரு புதிய ரோவரை அனுப்புவதற்கும் நாசா திட்டமிட்டுள்ளது. இது கடந்த கால உயிரினங்களின் வாழ்க்கையை ஆராயும். அது மட்டுமின்றி எதிர்காலத்தில் ஆய்வு நடத்தப்போகும் மனிதர்களுக்கான ஆற்றல் வளங்களையும், எரிபொருள் ஆகியவற்றைக் கண்டறிவதில் இந்தப் புதிய ரோவர் கவனம் செலுத்தும். ஏனென்றால் மனிதர்கள் அங்கே செல்வதற்கு முன்னால் இதுபோன்ற சில விஷயங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. நாசாவின் திட்டம் அப்படியே நடந்தால் அடுத்த பத்தாண்டுகளில் சந்திரன், இருபதாண்டுகளில் செவ்வாயில் மனிதர்கள் இருப்பார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிலவுக்காக நாசாவுடன் போட்டி போட்டது பெரும்பாலானவை உலகநாடுகள்தான். ஆனால், இப்பொழுது அதைவிடப் போட்டி கடினமாகியிருக்கிறது. தற்போது நாசாவுடன் களமாட பல்வேறு தனியார் நிறுவனங்களும் தயாராகிவருகின்றன. அவை நாசாவை விடப் பல வருடங்கள் முன்னரே செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டங்களை கையில் வைத்திருக்கின்றன. உதாரணம் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இவர்களில் யார் முந்திக்கொள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்துப் பார்க்கலாம். 


டிரெண்டிங் @ விகடன்