வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (01/10/2018)

கடைசி தொடர்பு:08:00 (02/10/2018)

இளம் ஓவியர்களை உற்சாகப்படுத்த கலைநகரத்தில் நடந்த கண்காட்சி!

கட்டடங்களில் கலை பேசும் காரைக்குடியில் ஓவியங்கள் வழியாக மக்களோடு உரையாடுவதற்காக கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். மூன்று நாள்களாக நடைபெறும் இக்கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டோம்.

ஓவியக் கண்காட்சி

ஓவியர்கள் செல்வக்குமார், சண்முகசுந்தரம் மற்றும் ஏராளமான இளம் ஓவியர்களின் ஓவியங்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தது. குட்டிக் குட்டி ஓவியர்கள் அவர்கள் வரைந்த ஓவியத்துக்கு அருகே நின்று பார்வையாளர்களின் வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருந்தனர்.

ஒன்பதாம் வகுப்பு பயிலும் லின்ஸி, தான் ஒரு மருத்துவராக விரும்புவதாகவும் அதே நேரத்தில் ஓவியங்களையும் வரைவேன் என்றும் சொல்லி சிரித்தார். அவரது ஓவியங்களைப் போலவே சிரிப்பும் அழகாக இருந்தது.

தான் வரைந்த ஓவியத்தை அழைத்துச் சென்று காண்பித்த சிறுவன் வசந்தசூரியன், தான் எதிர்காலத்தில் பைலட்டாக வர ஆசைப்படுவதாகக் கூறினார். ஓவியங்கள் வரைவதை அப்போதும் தொடர்வேன் என்று உறுதியளித்தார். குட்டீஸுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு அவர்களின் ஓவிய ஆசிரியர் செல்வக்குமாரிடம் பேசினோம்.

``நான் சிறுவயதில் ஷைன்போர்ட் ஆர்டிஸ்ட்டாக தான் இந்த துறைக்குள் வந்தேன். ஓவியத்தின் மீதான தீராத ஆர்வத்தால் ஓவியம் வரைய கற்றுக்கொண்டேன். அப்போது எல்லாம் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்காது. ஓவியம் கற்றுக்கொடுக்க ஆரம்பித்த பின்னர் இளம் ஓவியர்களின் ஓவியத்தைக் கண்காட்சியாக வைத்து ஊக்கப்படுத்த விரும்பினேன். இதே துறையில் ஆர்வமுடைய சண்முகசுந்தரத்தின் ஒத்துழைப்போடு இதை நடத்திக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

சுந்தரம்  தொழில் ரீதியாக நகை வியாபாரி. தன்னுடைய ஓய்வு நேரங்களில் ஓவியங்கள் வரைவதை பொழுதுபோக்கு தேர்வாகக் கொண்டிருப்பவர். அவருடைய விவேகானந்தரின் ஓவியம் பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டபெற்றது. அவரிடம் பேசியபோது, ``என்னுடைய 60வது அகவை நெருங்குவதையொட்டி என்னுடைய ஓவியங்களைக் கண்காட்சியாக ஏற்பாடு செய்து குடும்ப விழாவாக கொண்டாடலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஓவியர் செல்வத்தோடு உரையாடியபோது இதை பொது நிகழ்வாக, மாணவ ஓவியர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக, பல்வேறு பெருமைக்குரிய காரைக்குடி நகருக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஓவியக் கண்காட்சியாக நடத்த திட்டமிட்டோம்" என்று தெரிவித்தார்.

ஓவியங்கள் மூலமாக கண்களுக்கு மட்டும் விருந்து அளிக்காமல், வயிற்றுக்கும் விருந்தாக பாரம்பர்ய உணவு வகைகளை ஏற்பாடு செய்திருந்தனர். தொடக்க நாளன்று கிராமியக் கலை நிகழ்ச்சிகளோடு கண்காட்சி ஆரம்பித்தது. ஓவியர் பகவான் சங்கர் சவான் தொடங்கி வைத்தார்.

காரைக்குடி மக்கள் ஓவியக் கண்காட்சி அனுபவம் புதுமையாக இருப்பதாக வரவேற்பு தெரிவித்தனர். காலாண்டு தேர்வு விடுமுறையில் குழந்தைகள் இருப்பதனால் குடும்பத்தோடு மக்கள் ஓவியத்தை ரசித்துக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

கலை மீதான தாகத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற கண்காட்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். சிறு முயற்சியாக தொடங்கப்பட்டுள்ள கண்காட்சி இளம் ஓவியர்களை உற்சாகப்படுத்துவதோடு மட்டுமில்லாமல் கலைகள் குறித்த விழிப்பு உணர்வையும் மக்களிடம் ஏற்படுத்துவதாக அமைகிறது என்றே சொல்லலாம்.