பிரீமியம் ஸ்டோரி

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பங்களாதேஷில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட்

11 கோலிகள்!

நடந்தது. அந்த அணியைத் தயார் செய்யும் பொறுப்பு  ராகுல் டிராவிடிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய மேற்பார்வையில் இளம்படை மிக நன்றாகவே ஆடியது. இறுதிப்போட்டி வரை முன்னேறினர். ஆனால், இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தோற்று உலக சாம்பியன் பட்டத்தை இழந்தனர்.

டிராவிட் அப்போது சொன்னார். ‘`எனக்கு இந்த இளையோர் உலகக் கோப்பையை வெல்வது முக்கியமேயில்லை. உண்மையில் அது முக்கியமற்றதும்கூட...’’ அவருடைய பதிலைக் கேட்ட யாருமே ``அப்ப எதுதாங்க முக்கியம்?’ என்கிற கேள்வியை எழுப்புவார்கள்தானே.

டிராவிட் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த `அதில்’தான் கவனம் செலுத்தினார். இளையோர் கிரிக்கெட்டின் அஸ்திவாரத்தை பலமாக அமைப்பது என்பது, இந்திய சீனியர் அணியின் எதிர்காலத்தைப் பிரகாசமாக்குகிற செயல் என்பதை டிராவிட் அறிந்திருந்தார். ஆனால், இதை ஒரே இரவில் செய்துமுடிப்பது சாத்தியமில்லை என்பது டிராவிடுக்குத் தெரியும். தன்னுடைய இன்னிங்ஸை  எப்படிப் பொறுமையாக, செங்கல் செங்கலாக, பதற்றமின்றிக் கட்டி எழுப்புவாரோ அப்படி ஓர் அஸ்திவாரத்தை வலுவாக உருவாக்கினார் டிராவிட்.

11 கோலிகள்!

டிராவிட் எழுப்பிய வலுவான அஸ்திவாரத்தில்தான் இன்று இந்திய இளையோர் அணி வெற்றிக்கோப்பையோடு நாடு திரும்பியிருக்கிறது. புதிய இளம் திறமைசாலிகளையும் கண்டெடுத்திருக்கிறது. 

இந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் 140 கி.மீ வேகத்துக்கும் மேல் பந்து வீசி எதிரணியினரை நிலைகுலையச் செய்திருக்கிறது நாகர்கோட்டி மற்றும் ஷிவம் மவி ஜோடியின் அபாரமான வேகப்பந்துவீச்சு. ஆடிய போட்டிகளில் எல்லாம் அதிரடி காட்டி ஏராளமாக ரன்குவித்தது  ஷுப்மன் கில் மற்றும் ப்ரித்வி ஷா ஜோடி. இந்தத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 14 விக்கெட்களோடு முதலிடம் பிடித்திருக்கும் இடது கை பந்துவீச்சாளர் அன்க்குல் ராய்.

11 கோலிகள் ஒரே அணியில் ஆடினால் எப்படி இருக்கும்? இந்த முறை நியூஸிலாந்துக்குச் சென்ற இந்திய இளைஞர் கிரிக்கெட் அணி அப்படித்தான் இருந்தது. எல்லோருமே ஆக்ரோஷமானவர்களாக இருந்தார்கள். கேப்டன் ப்ரித்வி ஷாவில் தொடங்கி எல்லோருமே வெற்றிக்காக எதையும் செய்யக்கூடிய அதிரடியன்கள்... ஆவேசன்கள். எதிரணிகள் இந்திய அணியின் ஆற்றல்மிக்க ஆட்டத்தில் மலைத்துப்போனார்கள். டிராவிட் ஊட்டி வளர்த்த அணி இப்படி இருக்குமா என்றுதான் எல்லோருக்குமே அதிர்ச்சி. அதிலும் மைதானத்தில் பையன்கள் காட்டிய அளவில்லாத எனர்ஜி... அச்சு அசல் கோலி ஸ்டைல்!

11 கோலிகள்!

டிராவிட் வாழ்விலும் சரி, மைதானத்திலும் சரி, எப்போதும் உடனடி ரிசல்ட்டுகளை எதிர்பார்க்காதவர். தொடர்ச்சியான நடவடிக்கைகளின் வழிதான் வெற்றிகரமான முடிவுகளை எட்டமுடியும் என உறுதியாக நம்புகிறவர். ப்ராஸஸில்தான் டிராவிட் கவனமாக இருப்பார். அதனால்தான் அவர் 2016-ன் தோல்விக்குப் பிறகு அதிர்ச்சிக்குள்ளாகவில்லை. அதை ஒரு நீண்ட நெடும் பயணத்தின் ஒரு பகுதியாகவே நம்பினார். கடந்த உலகக் கோப்பைக்குத் திட்டமிடவும் பயிற்சி அளிக்கவும் அவருக்கு இருந்தது வெறும் மூன்று மாதங்கள்தான். ஆனால், இந்தமுறை அவருக்கு 14 மாதங்கள் இருந்தன. அதை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டு அணியைத் தயாரிக்கத் தொடங்கினார். ஆமாம், தயார் செய்ய அல்ல... தயாரிக்க...

உலகக் கோப்பைக்கான வீரர்களை வெறும் 19 வயதிற்குட்பட்டோருக்கான கேம்ப்புகளில் அடைத்துவைப்பதை டிராவிட் விரும்பவேயில்லை. அவர்களை வெறும் இளையோர் போட்டிகளுக்கான வீரர்களாக மட்டுமே தயார் செய்வது அவர் திட்டமில்லையே! அதனால், ஒவ்வொருவரையும் சீனியர்கள் ஆடும் எல்லாவிதப் போட்டிகளுக்குமானவராக உருவாக்கத் தொடங்கினார். அதனால்தான் ப்ரித்விஷாவை மும்பை அணிக்கான ரஞ்சி அணிவரை கொண்டு சென்றார். ஷூப்மன் கில்லை பங்களாதேஷில் நடந்த 23 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணிக்காக விளையாட வைத்தார். அவர்களுக்கான மேடைகளைப் பெரிதாக்கியபோது அவர்களுடைய தன்னம்பிக்கையின் அளவும் அதிகமாகியது.

11 கோலிகள்!

டிராவிட் மிகவும் பொறுமையானவர். ஆனால், சக வீரர்கள் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறவர் இல்லை. அதுதான் டிராவிடின் பலம். அதிலும் ஒரு பயிற்சியாளராக அவர் தன்னுடைய மேதாவித்தனங்களை எல்லாம் இளம்படையின் மேல் சுமத்தி வைக்கிறவராக இருக்கவில்லை. அவர் அந்த இளைஞர்களை சுயமாகவே முடிவெடுக்கத் தூண்டினார். அவர்களாகவே கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்கினார். ஒவ்வொருவருக்கும் ஒரு பலம் இருக்கும், சிறப்பியல்புகள் இருக்கும். எக்காரணம் கொண்டும் அவற்றையெல்லாம் கைவிடாமல் அவற்றிலேயே கவனத்தைச் செலுத்த வற்புறுத்தினார். அதிரடிதான் அவர்களுடைய பலம் என்பதை உணர்ந்து அதிலேயே அவர்களை இயங்கவைத்தார்.

டிராவிட் செய்திருப்பது உலகக் கோப்பையை வெல்கிற ஒரு வெற்றிகரமான அணியை உருவாக்கியது மட்டுமேயல்ல. அவர் எதிர்கால இந்திய அணிக்கான இளம்படையை வடிவமைக்கும் முயற்சிகளில் இருக்கிறார். அதன் நட்சத்திரங்களை அர்ப்பணிப்போடு பொறுமையாக உழைத்து உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு எத்தனையோ பெரிய வாய்ப்புகள் வந்தபோதும் விடாப்பிடியாக இந்த அணியையே பற்றிக்கொண்டிருக்கிறார்.

11 கோலிகள்!

தன்னுடைய விளையாட்டையும் தான் விளையாடிய அணியையும் உயிருக்கும் மேலாக நேசிக்கிற ஒருவரால்தான் இப்படி ஓய்வுக்காலத்திலும் உழைக்க முடியும். அதுதான் டிராவிடின் சிறப்பு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு