சென்னையால் வாடும் காஞ்சிபுரம், திருவள்ளூர்... தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம்-16 | Thiruvallur, Kancheepuram affected because of chennai... Stories of water mafia Episode-16

வெளியிடப்பட்ட நேரம்: 09:38 (02/10/2018)

கடைசி தொடர்பு:09:38 (02/10/2018)

சென்னையால் வாடும் காஞ்சிபுரம், திருவள்ளூர்... தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம்-16

நகரத்தின் மறுபுறத்தில் அமைந்திருக்கிறது பெரும்பாக்கம். காட்டுப்பள்ளியைப் போல இங்கும் அதே கதைதான். இது சில ஆண்டுகளுக்குமுன் ஏரிகளும், குளங்களும், கிணறுகளும், நிலத்தடி நீர்த்தேக்கங்களும் நிறைந்திருந்த வளம்மிக்கப் பகுதியாக இருந்தது.

சென்னையால் வாடும் காஞ்சிபுரம், திருவள்ளூர்... தண்ணீர் மாஃபியாக்களின் கதை அத்தியாயம்-16

த்திய சென்னையிலிருந்து 29 கி.மீ வடக்கே அமைந்திருக்கிறது காட்டுப்பள்ளி கிராமம். அதற்கு அருகில் களஞ்சி என்ற கிராமம். மூன்று அனல்மின் நிலையங்கள், இரண்டு துறைமுகங்கள், ஒரு நிலக்கரிக்கூடம் போக மேலும் பல தொழிற்சாலைகள் நிரம்பிய எண்ணூர் தொழில்நகரத்துக்கு வெகு அருகில்தான் இவை அமைந்திருக்கின்றன. அதனாலேயே அளவுக்கு அதிகமான நிலத்தடி நீர் சுரண்டலுக்கு ஆளாவது இந்த இரண்டு கிராமங்கள்தான். அந்தச் சுரண்டல்தான் விரிவடைந்து கொண்டிருக்கும் நகரங்களுக்கும், புறநகர்ப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு அருகிலிருக்கும் தொழிற்சாலைகளின் உற்பத்திகளுக்கும் தேவையான தண்ணீர் கிடைப்பதற்குக்கூட இந்தக் கிராமங்களின் நிலத்தடி நீர்தான் மூலம்.

நகரத்தின் மறுபுறத்தில் அமைந்திருக்கிறது பெரும்பாக்கம். காட்டுப்பள்ளியைப் போல இங்கும் அதே கதைதான். இது சில ஆண்டுகளுக்குமுன் ஏரிகளும், குளங்களும், கிணறுகளும், நிலத்தடி நீர்த்தேக்கங்களும் நிறைந்திருந்த வளம் மிக்க பகுதியாக இருந்தது. இப்போது அதைச் சுற்றி வளர்ந்துள்ள ஐ.டி நிறுவனங்களுக்கு நீர்த்தேவையைப் பூர்த்திசெய்யும் சேவகனாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனங்களின் நீர்த்தேவைகள் பெரும்பாக்கத்தின் நிலத்தடி நீரைச் சார்ந்தே கட்டமைக்கப் பட்டிருக்கிறது. தினமும் இந்த ஒரு பகுதியிலிருந்து மட்டும் 15,000 முதல் 20,000 லிட்டர்கள் கொள்திறன் கொண்ட 200 தண்ணீர் லாரிகள் இரவும் பகலும் இங்கிருந்து அருகிருக்கும் ஐ.டி நிறுவனங்களுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும், கண்ணாடி மாளிகைகளுக்கும் பறந்துகொண்டிருக்கின்றன. தண்ணீர் விநியோகத்திற்கென்று முறையான கட்டமைப்புகளை நகர நிர்வாகம் அமைக்கத் தவறிவிட்ட நிலையில், தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் இரண்டு பக்கங்களிலுமே அவர்களின் தேவை இருந்துவருகிறது. அதுவே அவர்களை உயிர்ப்பிலேயே வைத்திருக்கிறது. 

கீழ்கட்டளை, நன்மங்கலம் ஏரிகள் தண்ணீர் மாஃபியாக்களின் திருட்டுகளால் ஒவ்வோர் ஆண்டும் தன் நீரைத் தொலைத்துக்கொண்டிருக்கிறது. அங்கு மட்டுமே நாளொன்றுக்கு 25 லட்சம் லிட்டர்கள் தண்ணீர் திருடப்பட்டு விற்கப்படுகின்றது. காஞ்சிபுரம் பகுதியிலும் பல கிராமங்களின் நீர்நிலைகள் தண்ணீர் திருட்டுகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்களிலேயே கிணறுகள் அமைத்து 35,000 லிட்டர்வரைக் கொள்திறன் கொண்ட லாரிகளில் நிரப்பிச் சென்னைக்குக் கொண்டுவந்து விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் காந்தி சாலையிலிருக்கும் மால்கள், ஐ.டி நிறுவனங்கள் என்று பெரும்பாலான நிறுவனங்கள் இந்த மாதிரியான லாரிகளையே உபரி நீர்த்தேவைகளுக்கு நம்பியிருக்கின்றன. அவர்களுக்கு நீரின் மதிப்போ அதைப் பாதுகாப்பதன் முக்கியத்துவமோ தேவையில்லை. காசு கொடுத்தால் லாரி வருகிறது. அதை எவ்வளவு பயன்படுத்தினால்தான் என்ன?

தண்ணீர்

அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4 அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8 அத்தியாயம் 9 அத்தியாயம் 10 அத்தியாயம் 11 அத்தியாயம் 12 அத்தியாயம் 13 அத்தியாயம் 14 அத்தியாயம் 15

இவர்களால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழும் கிராமங்களின் நீர்நிலைகள் திருடப்படுவதும் நிலத்தடி நீர் உவர்ப்படைவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இது சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய விஷயமில்லை. இவற்றைப்போல் சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் முன்பைப்போல் விவசாயத்தை முக்கியத் தொழிலாகச் செய்துகொண்டிருக்கிவில்லை. அவர்கள் கிடைக்கும் வேலையைச் செய்கிறார்கள், அது சட்டவிரோதமாயினும். இரவு பகலாகப் பறந்துகொண்டிருக்கும் தண்ணீர் லாரிகளால் சாலை விபத்துகளும் அதிகமாக நிகழ்கின்றன.

திருவள்ளூர் ஒருபுறமும், காஞ்சிபுரம் மறுபுறமும் என்று இரண்டு பக்கமும் வளம் மிக்கப் பகுதிகளைக் கொண்டிருந்தது சென்னை. இன்று அந்த இரண்டு பகுதிகளின் வளங்களும் கடந்த காலமாக மாறிக்கொண்டிருப்பதற்குக் காரணமாக மாறிக்கொண்டிருப்பதும் அதே சென்னைதான். அங்கிருந்து வரும் பல நீர்நிலைகள் சென்னை முழுவதும் பல மைல்கள் பயணிக்கிறது. அவை பல நிலத்தடி நீர்த்தேக்கங்களால் குறையக் குறையத் தொடர்ச்சியாக நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், தற்போது நடந்துகொண்டிருக்கும் நிலத்தடி நீர் சுரண்டல்கள் அந்த இயற்கைச் செயல்முறைகளைக் கேள்விக்குறியாக்கிவிட்டன. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் பள்ளிக்கரணை. "உலக தண்ணீர் இருப்பு, தேவை மற்றும் பற்றாக்குறையில் காலநிலை மாற்றங்கள் ஏற்படுத்தும் பாதிப்புகள் மீதான மறுபரிசீலனை (Reconsidering the impact of climate change on the global water supply, use and demand)" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கும் தகவலின்படி 14,820 ஏக்கர்களாக இருந்த பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் பரப்பளவு தற்போது வெறும் 1,464 ஏக்கர்களே. நிலத்தடி நீரைச் சேமித்து வைப்பதில் சதுப்பு நிலங்களின் பங்கு மிக முக்கியமானது. அந்த நிலத்தின் பல்லுயிர்ச்சூழல் அதன் வளங்களைத் தக்கவைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. ஆனால் தற்போது அந்தச் சதுப்பு நிலமோ கழிவு நிலமாகக் காட்சியளிக்கிறது.

அதிகரித்துவரும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள், நிலத்தடி நீர்ச் சுரண்டல்கள், காலநிலை மாற்றங்கள் என்று அனைத்துமே கடலோர நகரத்தின் நீர்த்தேவைகளைக் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கின்றன. 2017-ம் ஆண்டு மத்திய நீர் மேலாண்மை வாரியம் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கைப்படி, சென்னை நகரத்தில் நிலத்தடி நீர்ச் சுரண்டல் 185% அதிகமாக நடந்துவருகிறது. வடக்கே மீஞ்சூரில் தொடங்கி தென்கோடிவரை கடலோர நிலத்தடி நீர் மொத்தமும் உவர்ப்படைந்துவிட்டது. சென்னையின் காலநிலை மாற்றங்களும் இதில் முக்கியப் பங்கு வகித்து வருகின்றது. வெள்ளம் வந்த அடுத்த ஆண்டே கடுமையான வறட்சியைச் சந்தித்தோம். சென்னையில் சுமார் 3,600 நீர்நிலைகள் இருப்பதாக நகர வரைபடம் சுட்டுகின்றது. அப்போதுகூட அளவுக்கு அதிகமான நீர் வரத்து இருந்தும் அதை முறையாகச் சேமித்து வைக்காமல் விட்டுவிட்டுத் தண்ணீர் பற்றாக்குறை என்று கூறிச் சட்டங்களை மீறுவதை நியாயப்படுத்த முடியாது. மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்திசெய்யும் விதத்தில் கட்டமைப்புத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தியிருக்க வேண்டியது நகர நிர்வாகத்தின் கடமை. அதைச் செய்யாமல் விட்டதோடு, அதைச் சாதகமாக்கிக்கொண்டு சட்டவிரோதமாக நிலத்தடி நீரைத் திருடிக்கொண்டிருக்கும் தண்ணீர் மாஃபியாக்களையும் வளர்த்துவிட்டுள்ளார்கள்.

மெட்ரோ குடிநீர் நிலையம்

மெட்ரோ குடிநீர் நிலையங்களில் தண்ணீர் எடுக்கும் தனியார் லாரிகள்

சென்னையின் ஒரு நாளைய நீர்த்தேவை 1,200 மில்லியன் லிட்டர்கள். இந்த நகரத்துக்கு வற்றாத நீர்நிலைகளென்று எதுவும் கிடையாது. அனைத்துமே மழைக்காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமித்துப் பயன்படுத்தும் வகையில் அமைந்தவையே. சென்னையின் நீர்த்தேவை மழைநீரை நம்பியே உள்ளது. அதுவன்றித் தற்போது சென்னைக்கு வரும் இரண்டு முக்கியமான நீராதாரங்கள் வீராணம் ஏரியும், கிருஷ்ணா நதியும், இங்கு அமைந்திருக்கும் இரண்டு உப்புநீரைக் குடிநீராக்கும் நிலையங்கள். செழிப்பான காலங்களில்கூட நம்மால் 900 மில்லியன் லிட்டர் தண்ணீரையே விநியோகிக்க முடிகிறது. மீதியை நிலத்தடி நீரிலிருந்துதான் பெறவேண்டியுள்ளது. அதற்குக் காரணம் முறைப்படுத்தப்படாத, அளவுக்கு அதிகமாக வளர்ந்துவரும் நகரக் கட்டுமானமும், அதில் அதிகரித்துவரும் தொழிற்சாலைகளும், அதிகமாகிவரும் மக்கள்தொகையுமே. இருந்தும் மொத்தத்தையும் அழித்துவிடக் கூடாதென்ற நோக்கில், நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் சென்னை நிலத்தடி நீர் கட்டுப்பாட்டுச் சட்டம் (1987), தமிழ்நாடு நிலத்தடி நீர் பாதுகாப்புச் சட்டம் (2003) போன்ற சட்டங்களும் தமிழகத்தில் இருக்கின்றன. ஆனால், ஒரே காரணத்தைச் சொல்லி அந்தச் சட்டங்களை வசதியாகத் தவிர்த்துவிடுகிறோம். அந்தக் காரணம் தண்ணீர் பற்றாக்குறை. "தண்ணீர் போதவில்லையே! வேறு என்ன செய்வது? சட்டங்களைப் பார்த்தால் தண்ணீர் கிடைக்குமா! இருக்குமிடத்தில் எடுத்துத்தானே ஆகவேண்டும்."

தண்ணீர் லாரி உரிமையாளர்களும், தனியார் நீர் விநியோகஸ்தர்களும் புறநகர்ப் பகுதிகளிலிருந்து தண்ணீரை அதிகமாக எடுத்துவந்து இங்கிருக்கும் மால்களுக்கும், தொழிற்சாலைகளும் விற்பதையும் இப்படித்தான் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே அதீதச் சுரண்டலால் சென்னையின் நிலத்தடி நீர் உவர்ப்படைந்துவிட்டது. இப்போது திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களையும் சென்னைக்காகக் காவு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் தண்ணீர் மாஃபியாக்கள். அப்படிக் கொண்டுவரும் நீருக்குப் பெருந்தொகை வசூலிக்கிறார்கள். சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களும், புறநகர்ப் பகுதிகளும் நீர்வளம் மிகுந்த நிலங்களைக் கொண்டவை. ஆனால், பெருகிவரும் தண்ணீர் சந்தை அந்த நீர்வளங்களை அழித்துக் கொண்டிருக்கின்றன. அதில் பெருமளவு தண்ணீர் தொழில் நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மினரல் வாட்டர் உற்பத்தியாளர்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இவர்களும் சங்கிலித் தொடராக மக்களிடம் தண்ணீரை விலைக்கு விற்றுக்கொண்டிருக்கிறார்கள். சுத்தமான குடிநீரை அரசே நேரடியாக மக்களுக்கு விநியோகித்தால் இந்த இடைத்தரகுகளுக்கு இடமில்லாமல் போகும். அப்படிப் போய்விடும் என்பதாலேயே நிர்வாகம் அதைச் செய்யாமலிருக்கின்றதோ என்னவோ?

மாசடைந்த நீர்நிலைகள்

லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்டிருக்கும் இந்தத் தொழில் மக்களின் அடிப்படை உரிமை சார்ந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீரைக் காசுகொடுத்து வாங்க வேண்டுமென்று சொன்னபோது இதே சென்னைவாசிகள் கேலியாகச் சிரித்தனர். இப்போது சுத்தமான குடிநீரை இலவசமாகக் கொடுக்கிறோமென்று யாரேனும் சொன்னால் அவர்களைப் பரிதாபமாகப் பார்க்கும் நிலையிலிருக்கிறார்கள் அதே சென்னைவாசிகள். அவ்வளவுதூரம் சென்னையின் நீர்நிலைகள் மாசடைந்தும் இல்லாமலும் போய்விட்டன. இந்த நிலையில் அவர்கள் நம்பியிருப்பது இந்த மாதிரி தண்ணீரை விற்கும் மாஃபியாக்களைத்தான். தண்ணீர் அடிப்படை உரிமை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். முதலில் அந்தத் தண்ணீர் கிடைக்கவேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்