Published:Updated:

இனிவரும் காலம் ரோபோ காலம்!

இனிவரும் காலம் ரோபோ காலம்!
பிரீமியம் ஸ்டோரி
News
இனிவரும் காலம் ரோபோ காலம்!

ரா.சீனிவாசன்

``கம்ப்யூட்டர் ஆபரேட் பண்ணத் தெரியுமா?”

1980களின் இறுதியில், இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா வேலைக்கான நேர்முகத் தேர்விலும் கேட்கப்பட்ட கேள்வி இதுவாகத்தான் இருக்கும். “கம்ப்யூட்டர் எதுக்கு? நான் வந்தது கணக்கர் வேலைக்குங்க. கால்குலேட்டர் தெரியும். மனக்கணக்கு நல்லா வரும்!” என்று பதில் அளித்தவர்கள் வெறுங்கையுடன் வீடு திரும்பினார்கள். முயன்று கணினி கற்றதினால் மட்டும் நல்ல வேலை கிடைத்து முன்னேறியவர்கள் நிறைய பேர். அப்போது கணினியால் உருவான புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மட்டும் 1.85 கோடி. தொழில்நுட்பம் எப்போதும் அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தயாராகத்தான் இருக்கிறது. நாம் தயாராக இருக்கிறோமா என்பதுதான் இப்போதைய கேள்வி!

ஒரு புதிய விஷயத்தைக் கற்றுத் தேர்ந்துவிட்டு, அதைப் பரீட்சித்துப் பார்க்கலாம் என்று சட்டைக் கையை மடித்து உட்கார்ந்தால், “இதெல்லாம் இப்ப அவுட்டேடட் சார்!” என்று ஒரு குரல் கிண்டல் செய்யும். தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை, அளவு மாறாமல், 95 சதவிகிதத் துல்லியத்துடன் பத்துப் பொருள்களுக்கு வெல்டிங் வைத்து விட்டு நிமிர்ந்தால், 99.9 சதவிகிதத் துல்லியத்துடன் நூறு பொருள்களுக்கு வெல்டிங் வைத்துவிட்டு அடுத்து என்ன என்று கேள்வி கேட்கின்றன AI எனப்படும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திரங்கள். அது நம்மைப் போல சம்பளம் கேட்காது, போனஸ் கேட்காது. இயந்திரத்தை நிறுவுவதற்கான செலவைத் தவிர, மின்சாரம் மட்டுமே உணவாக, சன்மானமாகக் கேட்கும்.

செயற்கை நுண்ணறிவு ஏற்கெனவே நாம் பயன்படுத்தும் பல விஷயங்களில் நுழைந்து விட்டது. அமேஸான் நிறுவனம் தங்களின் தளத்தில் வாடிக்கையாளர்களுக்குப் பொருள்களைப் பரிந்துரைப்பதில் செயற்கை நுண்ணறிவை எப்போதோ பயன்படுத்தத் தொடங்கிவிட்டது. ஃபேஸ்புக் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனத்தின் SIRI  மென்பொருளும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தித்தான் இயங்கிவருகின்றன.

இனிவரும் காலம் ரோபோ காலம்!

தொகுப்பு: ச.ஸ்ரீராம், இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மாற்றம் 2030

மெக்கென்சி (Mckinsey) என்ற உலகளாவிய மேலாண்மை ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று அடுத்து வரப்போகும் மாபெரும் மாற்றமான செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் மற்றும் மென்பொருள் பற்றிச் சில அதிர்ச்சித் தகவல்களை முன்வைத்துள்ளது. இதன்படி, 2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும், 80 கோடி வேலை வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு கருணையே இல்லாமல் எடுத்துக்கொள்ளும் என்கிறார்கள். எப்படி நம் வாழ்க்கை முறை முன்னர் விவசாயத்துவத்தில் இருந்து இயந்திரத்தனம் ஆனதோ, அதேபோல் ஒரு பெரிய வாழ்வியல் மாற்றம் செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவில் மட்டும் 3.9 கோடியில் இருந்து 7.3 கோடி வரை வேலைகள் இயந்திரமயமாக்கப்படும். 

“அப்போ, அடுத்து என்ன கத்துக்கணும்?” என்று நீங்கள் தயாராவதற்கு முன், இந்த நவீனத் தொழில்நுட்பத்தால் ஏற்படப்போகும் அனைத்து மாற்றங்களையும் தெரிந்துகொள்வது அவசியம். இறந்தகால வளர்ச்சிகளைப்போல ஒரு தொழில் மற்றும் அதைத் தெரிந்து வைத்திருந்த ஊழியர்களின் வாழ்க்கையைச் சிதைத்து வேறொன்றை உருவாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு செயல்படப் போவதில்லை. மாறாக, இருக்கும் தொழில்முறையை பலப்படுத்துதல், வேலைப்பளுவைக் குறைத்தல், செயல்முறையையே மாற்றி அமைத்தல் போன்ற பணிகளைச் செய்யும். நீங்கள் தைரியமாக வேறொரு துறைக்கு மாறும் அளவுக்கு நம்பிக்கையை இது கொடுக்கலாம்.

சமீப காலத்தில் நடந்த ஒரு முழுமையான ஆய்வாகக் கருதப்படும் இதில், 800 தொழில்கள், 46 நாடுகள் உட்பட ஒட்டுமொத்த உலகத்தின் 90 சதவிகித உற்பத்தித் திறன் அலசப்பட்டுள்ளன. வெவ்வேறு பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் வேறுபட்ட, அதே சமயம் ஒழுங்கமைக்கப்பட்ட பணியமைப்புகளைக் கொண்ட நாடுகளான அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா மற்றும் மெக்சிகோ முழுவதுமாக ஆராயப்பட்டுள்ளது. இந்தச் செயற்கை நுண்ணறிவின் வருகையால் ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், அமெரிக்கா, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில் இதன் பாதிப்பு அதிகம் இருக்குமாம்.

செயற்கை நுண்ணறிவை நம்பி நம் கல்லாப்பெட்டியின் சாவியைக் கொடுக்கலாமா என்ற விவாதம் பல ஆண்டுகளாக உலக அரங்கில் நடந்துகொண்டுதான் வருகிறது. விண்வெளி ஆய்வு, வாகனத் தயாரிப்பு, பணப் பரிமாற்றம் எனப் பல்வேறு துறைகளில் புரட்சி செய்து வரும் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு குறித்து தனது அச்சத்தைப் பலமுறை வெளிப்படுத்தியுள்ளார்.

இனிவரும் காலம் ரோபோ காலம்!

``ரோபோவைக் கட்டமைக்கும் தொழில்நுட்பத்தை நாம் ஏன் வரவேற்கிறோம் என்றே தெரியவில்லை. எந்த நாட்டு அரசும் இதைக் கண்டுக்கொள்வதாக இல்லை. மனிதனைவிட ரோபோக்கள் எல்லா வேலைகளையும் திருத்தமாகச் செய்யும். அதனாலே இது மனித இனத்திற்கு ஆபத்தானதுதான். செயற்கை நுண்ணறிவு தொடர்பாக நாம் செய்யும் ஆய்வுகள், அறிமுகப்படுத்தப்படும் கண்டுபிடிப்புகள் அனைத்துக்கும் தேசிய மற்றும் உலக அளவில் முறையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். நாம் முட்டாள்தனமாக எதுவும் செய்து விடக் கூடாது” என்று எச்சரித்துள்ளார் எலான்.

``செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும் திறன் வாய்ந்தது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை வடிவமைத்துக்கொள்கிறது. அதன் பரிணாம வளர்ச்சியின் வேகம், மனிதனைவிட வேகமானது. அதன் வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். கூடிய விரைவில் அது நம்மைத் தாண்டி ஓடக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம்” என்கிறார் தத்துவார்த்த இயற்பியலாளர், அண்டவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்.

ஒருபுறம் செயற்கை நுண்ணறிவை எதிரியாகச் சித்திரித்துப் பல ஹாலிவுட் படங்களும் வெளிவந்துகொண்டிருந்தாலும், இத்தகைய தொழில்நுட்பம் எதிர்காலத்தில் பெரும் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே மனித இனம் அழியாமல் பிழைக்க முடியும் என்ற வாதத்தையும் முன்வைக்கின்றனர். இறந்த பின்னும், மனித மூளையைச் செயற்கை நுண்ணறிவின் உதவியால் செயல்பாட்டிலேயே வைப்பது, ஒருவரின் நினைவுகளை இன்னொருவருக்குச் செலுத்தி… அட, இதெல்லாம் வெறும் அறிவியல் புனைவு என்று நினைத்தாலும், ஒரு காலத்தில் செயற்கை நுண்ணறிவே அறிவியல் புனைவாகத்தான் இருந்தது என்பதை மறந்துவிட வேண்டாம். அறிவியலில் எதுவும் நடக்கும்.

சிட்டி ரோபோ கூறியதுபோல், உங்க குழந்தையை ரோபோட்டிக்ஸ் படிக்க வைங்க, நல்ல ஸ்கோப் இருக்கு!

யாருக்கு பாதிப்பு?

புதிதாக வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் உயர் பதவியில் இருப்பவர்களுக்குப் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. இடைநிலை ஊழியர்கள், அதிலும் நாற்பதிலிருந்து ஐம்பது வயதுக்குள் இருக்கும் ஊழியர்களுக்கு இடைஞ்சல்கள் நேரலாம். அதுபோக, அதிகமாக உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளைச் செய்யும் கூலிப் பணியாளர்களுக்குப் பெருமளவில் பாதிப்பு ஏற்படும்.

யாருக்கு பாதிப்பில்லை?

படைப்பாற்றல் மற்றும் புலனுணர்வு சார்ந்த வேலைகளைச் செய்பவர்கள், திறனாய்வு மற்றும் மேலாண்மை அதிகம் தேவைப்படும் பணியில் இருப்பவர்கள் எவ்விதக் கவலையும் கொள்ளத் தேவையில்லை. சொல்லப்போனால், அவர்களுக்குக் கீழே இருக்கும் பணியிடங்கள் சிலவற்றைச் செயற்கை நுண்ணறிவுகள் எடுத்துக்கொள்வதால், அவர்களின் வேலைப்பளு மேலும் குறைய வாய்ப்புகள் உண்டு.