வண்டியில் செல்லும்போது குழந்தைகளின் கையில் ஸ்மார்ட்போன் கொடுக்காதீர்கள்... ஒரு அலர்ட் கட்டுரை! | Do not give Smartphone to kids while driving the car or bike

வெளியிடப்பட்ட நேரம்: 13:17 (02/10/2018)

கடைசி தொடர்பு:13:26 (02/10/2018)

வண்டியில் செல்லும்போது குழந்தைகளின் கையில் ஸ்மார்ட்போன் கொடுக்காதீர்கள்... ஒரு அலர்ட் கட்டுரை!

ம்மாவுடன் காரில் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருக்கிறாள் அந்த 3 வயது சிறுமி. அவள்  கையில் அம்மாவின் டேப்லெட். அதில் கேம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியும், காரை ஓட்டிக்கொண்டிருந்த அம்மாவும் சில விநாடிகளில் நடக்கப்போகும் விபத்து பற்றி அறியாமல் சந்தோஷமாக சென்று கொண்டிருக்கிறார்கள். பின்னால் வந்துகொண்டிருந்த பள்ளிக்கூடப் பேருந்து ஒன்று அவர்களின் காரில் இடிக்க, சின்னதாக விபத்து ஏற்படுகிறது. இதில், சிறுமியின் அம்மாவுக்கு லேசானக் காயம்தான். பேருந்திலும் யாருக்கும் அடிபடவில்லை. ஆனால், அந்த 3 வயது சிறுமி இப்போது உயிருடன் இல்லை. கார் மீது பேருந்து மோதிய வேகத்தில், சிறுமியின் கையிலிருந்த டேப்லெட் அவள் முகத்தின் மீது வேகமாக மோதி தலையில் பலத்த காயத்தை ஏற்படுத்த, அதன் விளைவு... அந்தப் பிஞ்சுக் குழந்தை இறந்தே விட்டது. ஸ்பெயினில் சில நாள்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது.

குழந்தை

 

''இது முழுக்க முழுக்க எதிர்பாராத விபத்து. இப்படியும் விபத்து நடக்குமென்று யோசிக்கவே முடியவில்லை. இனிமேல் காரில் செல்லும்போது சீட் பெல்ட் போட சொல்வதுபோல, குழந்தைகளின் கையில் இருக்கும் கேட்ஜெட்ஸ் மீதும் கவனம் செலுத்திட வேண்டும்'' என்று வருத்தத்துடன் சொல்லி இருக்கிறது அந்த நாட்டுக் காவல்துறை.

பைக் மற்றும் காரில் செல்லும்போது, குழந்தைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும்? பிரசிடென்ட் கான்வென்ட் மற்றும் சர்ச் பார்க்கில் சைக்காலஜிஸ்ட்டாகப் பணியாற்றிவரும் டாக்டர் திவ்யபிரபா, தான் பார்த்த அனுபவத்தில் இருந்து சொல்கிறார். 

சைக்காலஜிஸ்ட் திவ்யபிரபா    ''காரில் மட்டுமின்றி, பைக்கில் செல்லும் குழந்தைகளும் மொபைல்போனில் கேம் விளையாடிக்கொண்டே போவதை அன்றாடம் பார்க்கிறோம். இரண்டு கையிலும் போனைப் பிடித்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் பிடிமானத்துக்கு வண்டியில் எதையும் பிடித்துக் கொள்வதில்லை. ஒரு ஸ்பீட் பிரேக் வந்தாலோ, வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் அப்பா சடன் பிரேக் போட்டாலோ பைக்கின் பின்னால் உட்கார்ந்திருக்கும் குழந்தையின் நிலைமை என்னவாகும்?

    நம் ஊரில் போலீஸிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது, லஞ்சம் கொடுக்கக்கூடாது என்ற காரணத்துக்காகவே வேண்டா வெறுப்புடன் ஹெல்மெட் அணிகிறார்கள். பாதுகாப்பு பற்றி யோசிக்கவே மாட்டேன் என்கிறார்கள். வண்டி ஓட்டும் அப்பாவோ, அம்மாவோ கண்டிப்பாக ஹெல்மெட் போடுங்கள். உங்கள் குழந்தைக்கும் ஹெல்மெட் போடுங்கள். காரில் போகிறவர்கள், சீட் பெல்ட் போட்டுக்கொள்வதுடன் குழந்தைகளுக்கும் போடுங்கள். சிக்னல்களைச் சரியாக ஃபாலோ செய்யுங்கள். உங்களைப் பார்த்துத்தான் உங்கள் குழந்தைகள் வளர்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

காரில் போகும்போது குழந்தைகள் தூங்கிவிடுவார்கள் என்பதற்காக, டேப்லெட்  தருவது, படம் பார்க்கச் சொல்வது அவர்களின் கண்களுக்கு நல்லதல்ல. ஓடும் பேருந்தில் புத்தகம் படிப்பதே கண்களுக்கு கேடு என்று நம் தலைமுறைக்குச் சொல்லப்பட்ட அதே அறிவுரையைத்தான் இந்தத் தலைமுறையில் கேட்ஜெட்ஸ் பயன்படுத்தும் குழந்தைகளுக்குச் சொல்லவேண்டியிருக்கிறது. 

பள்ளிக்கூடம் போவதற்குள் என் மகள் தூங்கிவிடுகிறாள். அதற்காகத்தான் கையில் போனைக் கொடுக்கிறோம் என்று சில பெற்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்துக்கு 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகுமா? அந்த நேரத்தில் குழந்தைகளின் கையில் போனை கொடுப்பதற்குப் பதில் ஏதாவது பேசிக்கொண்டே வரலாமே. குழந்தையும் உங்களை இறுக்கமாகப் பிடித்தபடிதான் பேசிக்கொண்டு வருவாள். ஸ்பீட் பிரேக்கிலோ, சடன் பிரேக் போட்டாலோ கவனமாக இருப்பாளே ஒழியக் கீழே விழ மாட்டாள்'' என்கிறார் திவ்யபிரபா. 


டிரெண்டிங் @ விகடன்