Published:Updated:

சிறையை சீர்திருத்திய அன்பன்!

சிறையை சீர்திருத்திய அன்பன்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிறையை சீர்திருத்திய அன்பன்!

வெ.நீலகண்டன், படங்கள்: விஜயகுமார்

“இதோ... இந்தத் தண்ணிக்குட்டைக்குப் பக்கத்துலதான் உக்காந்து பேசிக்கிட்டிருந்தோம். ஆடு மாடெல்லாம்  கீழே மேஞ்சுகிட்டிருக்கு. திடீர்னு மூணு பேர்,  துப்பாக்கியோட வந்து நின்னாங்க. எஸ்.டி.எஃப் (சிறப்பு அதிரடிப்படை) ஆட்கள்தான் வந்துட்டாங்கன்னு நினைச்சு, ‘ஐயா  தெரியாம இந்தப் பக்கம் வந்துட்டோம்... எங்களை விட்டுடுங்கன்னு’ அழுதோம். ‘வாங்க... வந்து அண்ணங்கிட்ட சொல்லிட்டுப் போங்க’ன்னு எங்களைத் துப்பாக்கி முனையில கடத்தி மலைக்கு மேல கூட்டிக்கிட்டுப் போனாங்க... மடுவுல ஒரு கூடாரம்... அதுக்குள்ள இருந்து வெளியே வந்தார் வீரப்பன்...”

சொல்லும்போது,  சிலிர்ப்பா, விரக்தியா, வருத்தமா எனத் தெரியாத அளவுக்கு  இறுக்கமாக இருக்கிறது அன்புராஜின் முகம். சரிவிலிருந்து ஏறி முகடு தொடும் அந்தக் கரடுமுரடான மலையை ஒரு கணம் அண்ணாந்து பார்க்கிறார். எந்த அரவமும் இல்லை. வெறுமை சூழ்ந்திருக்கிறது மலையை. அன்புராஜின்  கண்கள் மெள்ள அரும்புகின்றன.

“ஆரம்பத்தில எனக்கு நம்பிக்கையில்லை தோழர்... சிறைக்குள்ளயே எல்லாம் முடிஞ்சு போயிரும்ன்னு நினைச்சேன். இனிமே இழக்கிறதுக்கு எதுவுமில்லை. இருக்கிறவரைக்கும் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யலாம்னு தோணுச்சு. சிறைக்குள்ள போனா வாழ்க்கை முடிஞ்சிடும்னு சொல்வாங்க... ஆனா, எனக்குச் சிறைக்குள்ளதான் வாழ்க்கையே தொடங்குச்சு. எனக்கு மட்டுமில்லை... என் மனைவி ரேகாவுக்கும்  அப்படித்தான்..”

சிறையை சீர்திருத்திய அன்பன்!

அன்புராஜ் அருகில் நிற்கும் ரேகாவைப் பார்க்கிறார். ரேகா முகத்தில் எப்போதும் பூத்தேயிருக்கிறது சிரிப்பு. அதைக் கடந்து காலம் நிகழ்த்திய காயத்தின் தழும்புகள் தெரிகின்றன. அவரது மடியில் படுத்துக்கொண்டு தேவதை போல மலர்கிறாள் யாழிசை. சிறையில் பிறந்தவள். நான்கு வயதாகிறது. அருகில் மண்ணள்ளி விளையாடுகிற அகரனுக்கு ஒன்றரை வயது.

அன்புராஜ் அந்தியூரை அடுத்துள்ள புதுக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். ஊரின் மூன்று புறங்களும் அடர்ந்த மலைக்காடுகள். தமிழகத்தின் முக்கிய யானை வழித்தடம் இது.  அந்த ஒரு நாள் மட்டும் விடியாமல் போயிருந்தால், அந்த ஒரு நிகழ்வு மட்டும் நடக்காமல் போயிருந்தால் அன்புராஜ் வாழ்க்கை வேறுவிதமாக மாறியிருக்கும். இரண்டரை ஆண்டுகள் வீரப்பனோடு வனவாசம்,  ஆயுள் தண்டனை,  22 ஆண்டுக்கால சிறை வாழ்க்கை... இவையெல்லாம் நடந்திருக்காது. 

அன்புராஜ் - ரேகா கதை உறைய வைக்கும் ஒரு திரைப்படத்தின் கதை. அவர்களின் கடந்தகால வாழ்க்கையைப் பிறரால் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியாது. இருவருமே ஆயுள் தண்டனை பெற்றவர்கள். நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்பட்டவர்கள். கைதியாகச் சிறைக்குப் போன அன்புராஜ், கர்நாடகச் சிறைகளின் தன்மையையே மாற்றிவிட்டு வந்திருக்கிறார்.  கைதிகளைக் கொண்டு ஜெயிலில் நாடகக்குழு ஒன்றைத் தொடங்கி, டெல்லி தேசிய நாடகப்பள்ளி, கேரள நாடகத் திருவிழா என  நாடெங்கும் சுற்றிச்சுழன்று  நாடகங்களை நடத்தியிருக்கிறார்.   மனச்சிக்கலோடு சிறைக்குள் இருந்த 42 ஆயுள் தண்டனைக் கைதிகளை நாடகக் கலைஞர்களாக்கிப் புதுவாழ்க்கை உருவாக்கித் தந்திருக்கிறார். சிறைக்குள் இருந்தபடியே, அரசு அனுமதியோடு  ரங்கவாணி என்று ஒரு மாத இதழை நடத்தியிருக்கிறார். தொடர் கோரிக்கையின் விளைவாக, தான் மட்டுமன்றி  8 ஆண்டுகளுக்கு மேல் சிறைக்குள் இருந்த 386 ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக் காரணமாகவும் இருந்திருக்கிறார்.  

“ஆறாம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறலே. மெக்கானிக் வேலை கத்துக்கிட்டேன்.  அப்போ எனக்குப் பதினேழு வயசு. அன்னிக்கு அந்தியூர் சந்தை. அப்பாவும் அம்மாவும்  சந்தைக்குப் போயிட்டாங்க. அன்னிக்குப் பாலாத்துப் பக்கம் வீரப்பன் நடமாட்டம் இருக்கிறதா தகவல் பரவினதால எஸ்.டி.எஃப் ஆட்கள் எல்லோரும் அந்தப் பக்கம் போயிட்டாங்க. நானும், எங்க சித்தப்பா பசங்க ரெண்டு பேரும் ஆடு, மாட்டைப் பத்திக்கிட்டுப்போய் காட்டுக்குள்ள விட்டோம். அப்படியே காலார நடந்து மேலேயிருக்கிற குட்டைக்குப் போய் உக்காந்தோம். வீரப்பன் ஆட்கள், ஆள்காட்டின்னு நினைச்சு எங்களை வளைச்சுட்டாங்க.

வீரப்பனைப் பார்த்தவுடனே நடுக்கமாயிடுச்சு. உக்காரவச்சு, ‘யாரு, என்ன?’ன்னு விசாரிச்சார். ஊர் நிலவரத்தை விசாரிச்சார். டீ கொடுக்கச் சொன்னார். அரை மணி நேரம் கழிச்சு, ‘என்னைப் பாத்தேன்னு யார்கிட்டயும் சொல்லக் கூடாது’ன்னு சொல்லி அனுப்பிட்டார். நாலடி எடுத்து வச்சிருப்போம்... `தம்பியளா’ன்னு கூப்பிட்டார்.  திரும்பி வந்தோம். `எனக்கு ஒரு உதவி செய்றியளா... கீழே கெடுபிடி அதிகமாயிருக்கு. ரேஷன் வந்து சேரலே. கொஞ்சம் வாங்கியாந்து தர்றியளா’ன்னு கேட்டார். என் அண்ணனுங்க ரெண்டுபேரும் வேணாண்டா... வா ஓடிருவோம்னாங்க. எனக்கு மனசு வரலே... செய்றோம்னேன். லிஸ்ட்டும் பணமும் கொடுத்தார். அன்னிக்குச் சாயங்காலமே ரேஷனைக் கொண்டு போய்ச் சேத்துட்டோம்.

வீரப்பனுக்கு எங்களை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. என் கூட வர்றீங்களா டான்னு கேட்டார். விளையாட்டா கேக்குறாருனுதான் நெனைச்சோம். `சரண்டராகப் போறண்டே... அதிகாரிங் களுக்கு கேசட் கொடுத்தனுப்பணும்.  எங்காளுங்க முகமெல்லாம் வெளியில தெரிஞ்சு போச்சு. நடமாட முடியலே. மூணு மாசம் மட்டும் கூட இருங்க...’னு சொன்னார்.

வீரப்பன், துப்பாக்கி, யூனிபார்ம் எல்லாத்தையும் பார்த்து எனக்கு ஆசை வந்திடுச்சு. என் அண்ணனுங்க அழ ஆரம்பிச்சுட்டாங்க. மூணு மாதம்தானே... வாங்க பாத்துக்கலாம்ன்னு நான்தான் தைரியம் கொடுத்தேன். ஒரு மிருகம் வனத்தைப் பத்தி என்னவெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்குமோ, அதைவிட அதிகம் வீரப்பனுக்குத் தெரியும். நாலைஞ்சு கிலோ மீ்ட்டருக்கு அப்பால ஒரு புதுநபர் வனத்துக்குள்ள நுழைஞ்சாக்கூடக் கண்டுபிடிச்சிடுவார். 

எந்த இடத்துலயும் ரெண்டு நாளுக்கு மேல தங்க மாட்டோம். குடகு, பென்னாகரம், வால்பாறையைச் சுத்தியிருக்கிற 10 ஆயிரம் சதுர கி.மீ காடும் அவருக்கு அத்துப்படி. தினமும் 50 கிலோ மீட்டருக்கு மேல நடப்போம். தங்குற இடத்துல சென்ட்ரி, பாரா-ன்னு பலவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும். கடத்தி, காட்டுப்பூனை, முசுக்கோத்தி, முள்ளம்பன்றி, கொண்டைக்குறின்னு சோறு கொஞ்சம், கறி நிறையன்னு சாப்பாடே வித்தியாசமா இருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சிறையை சீர்திருத்திய அன்பன்!

பல நெருக்கடிகள்... நேருக்கு நேர் சண்டைகள்... எல்லா அனுபவமும் இருக்கு. ஒரு கட்டத்துல வீரப்பன் சரணடையிற எண்ணத்துக்கு வந்தார். அரசாங்கம் எப்படி நடத்துதுன்னு முன்னோட்டம் பாக்குறதுக்காக எங்க மூணு பேரையும் சரணடைய வெச்சார். சென்னையில சரணடைஞ்சோம். எப்படியும் குறைந்தபட்ச தண்டனையோட வெளியில வந்திடுவோம்னு நம்பினேன். அப்படித்தான் வாக்குறுதிகள் தந்தாங்க. 

 ஆனா 6 வருஷம் தமிழகச் சிறையில கிடந்தேன். தமிழக அரசு விடுதலை செஞ்சப்போ, கர்நாடக வன ஊழியர்களைக் கடத்தின வழக்குக்காக  கர்நாடக அரசு எங்களை ரிமாண்ட் பண்ணி,  மைசூரு சிறையில அடைச்சாங்க. அந்த வழக்கு 2 வருஷம் நடந்துச்சு. வீரப்பன் இல்லாததால என்னை முதல் குற்றவாளியாகப் போட்டு என்னோட சேர்த்து என் அண்ணனுங்க இன்னும் ரெண்டு பேர்ன்னு எல்லோருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்திட்டாங்க.

வாழ்க்கையே முடிஞ்சுபோனது மாதிரி தோணுச்சு. கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிடுச்சு. பத்துநாள் அறையை விட்டு வெளியவே வரலே. அதுக்கப்புறம் யோசிச்சேன். மனதைத் திடப்படுத்திக்கிட்டேன். சாவு எப்ப வேணுன்னாலும் வரட்டும். இருக்கிற வரைக்கும் நிறைவா வாழ்வோம்னு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துல பட்டப்படிப்பு சேர்ந்தேன். கன்னட மொழி படிச்சேன். மூணே மாசத்துல பேசவும் எழுதவும் கத்துக்கிட்டேன். மண் பொம்மைகள் செய்ய, ஓவியம் வரையக் கத்துக்கிட்டேன்.

ஒருநாள், கைதிகளை ஆற்றுப்படுத்துறதுக்காக கர்நாடகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகர்களான சுட்டிமணி, தீபக்னு ரெண்டு பேர் சிறைக்குள்ள வந்தாங்க. என் அமைதியையும் செயல்பாட்டையும் பார்த்துட்டு,  ‘கைதிகளை மட்டும் வச்சு ஒரு நாடகக்குழு தொடங்கலாம்னு திட்டமிருக்கு... நீங்க முன்னெடுத்து நடத்துறீங்களா’ன்னு கேட்டாங்க. அந்த வார்த்தைகளே எனக்குள்ள மண்டியிருந்த இருட்டையெல்லாம் விரட்டுச்சு. ‘நிச்சயம் பண்றேன்’னு முன்னாடி நின்னேன், பயிற்சி கொடுத்தாங்க. ஆயுள் தண்டனை பெற்று, கடுமையான மனப் பிரச்னைகள்ல இருந்த 42 சிறைவாசிகளைக் குழுவுக்குத் தேர்வு செஞ்சோம். ‘தலைதண்டா’, ‘கஸ்தூரிபா’, ‘மாதவி’ன்னு கன்னடத்துல புகழ்பெற்ற நாடகங்களைத் தேர்வு செஞ்சோம்.

‘சங்கல்பா’ன்னு எங்க குழுவுக்குப் பேர் வெச்சோம். முதல்ல சிறைகளுக்குள்ளதான் நாடகங்கள் போட்டோம்.  ஊடகங்கள் எல்லாம் சிலாகித்து எழுதினாங்க. முதல்வர், கவர்னர்ன்னு பெரியவங்களோட கவனத்துக்குப் போனபிறகு, சிறையை விட்டு வெளியேவும் செய்யுங்கன்னு அனுமதி கொடுத்தாங்க. யு.ஆர்.அனந்தமூர்த்தி, கிரிஷ் கர்னாட், தேவனூர் மாதேவ், கிரிஷ் காசரவல்லின்னு பெரிய பெரிய ஆளுமைகளோட நட்பும் தொடர்பும் கிடைச்சுச்சு. அதுமட்டுமில்லே... ரேகாவை எனக்கு அறிமுகம் செஞ்சதும் இந்த நாடகம்தான்..”-  ரேகாவைப் பற்றிப் பேசுகிறபோது அன்புராஜின் முகத்தில் உற்சாகம் ததும்புகிறது.

பெரும்பாலும் நாடகங்களில் ஆண் சிறை வாசிகளே பெண் வேடம் போட்டு நடிப்பார்கள். ‘மாதவி’  நாடகத்தில் பெண் பாத்திரம்தான் பிரதானம். அதற்காக, பெண் கைதிகளைத் தேர்வு செய்யச் சிறைத்துறையிடம் அனுமதி கேட்டிருக்கிறார் அன்புராஜ். பெங்களூரு பரப்பன அஹ்ரகாரா பெண்கள் சிறையில் உள்ள ஆயுள் தண்டனைக் கைதிகளைத் தேர்வு செய்துகொள்ள அனுமதி அளித்தது சிறைத்துறை. அங்குதான் ரேகா அறிமுகம்.

சிறையை சீர்திருத்திய அன்பன்!

ரேகா சென்னைக்காரர். அப்பா, அம்மா இருவரும் இவருடைய சிறுவயதிலேயே இறந்துவிட, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். பதினைந்து வயதில் பாட்டியும் இறந்துவிட, ஒரு இல்லத்தில் தங்கி வேலை செய்து வந்தார். வேலை செய்த இடத்தில் ஒரு பெண், பெங்களூரில் ஒரு வயதான தம்பதியைப் பராமரிக்க ஆள்தேவை என்று சொல்ல, அவருடன் கிளம்பினார். அங்கு ஏற்கெனவே மூன்று பெண்கள் இருந்திருக்கிறார்கள். சில நாள்கள் நன்கு உபசரித்திருக்கிறார்கள். நான்காம் நாள், மும்பையிலிருந்து வந்த சிலர், இவர்களை அங்கே கொண்டு செல்ல முயல, அப்போதுதான் தெரிந்தது, மும்பைக்காரர்களுக்கு தாங்கள் விற்பனை செய்யப்பட்ட விபரம்.  பிற பெண்கள் தப்பித்து ஓடிவிட, ரேகா மட்டும் அவர்களிடம் சிக்கிக்கொண்டார். விட்டால் காட்டிக்கொடுத்துவிடுவார் என்று ஒருவன் கத்தியால் ரேகாவைக் குத்தினான். 16 இடங்களில் குத்து. ஏதோ ஒரு வேகத்தில் அந்தக் கத்தியைப் பறித்து அவன் கழுத்தில் இறக்க, ஆள் காலி. உடனே  காவல்துறையில் சரணடைந்துவிட்டார் ரேகா.

காவல்துறை, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மறைத்து, கொலை வழக்குப் பதிவு செய்து ரேகாவை நீதிபதி முன் நிறுத்தியது. நீதிபதி, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பெழுதிவிட்டார். 

“எனக்கு வாழ்க்கை மேல நம்பிக்கையே இருந்ததில்லை.. வெளியே யார் இருக்கா...? உள்ளேயாவது சக கைதிகள் ஆறுதலா இருக்காங்க. விரக்தியிலதான் இருந்தேன். அப்போதான், ‘நாடகத்துல நடிக்கிறீங்களா’ன்னு கேட்டு இவர் வந்தார். நாங்க ஆறு பேர் முன்வந்தோம். எங்களை, மைசூரு பெண்கள் சிறைக்கே மாத்தினாங்க. எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான ஒரு அம்சம், நாங்க தமிழர்ங்கிறது. நட்பு அடுத்த கட்டத்துக்குப் போச்சு. துண்டுக் காகிதங்கள்ல காதல் பரிமாறிக் கிட்டோம். மைசூர்ல நடந்த ஒரு நாடகத்துலதான் இவரோட அப்பா, அம்மா என்னை வந்து பாத்தாங்க. அவங்களும் மனசார சம்மதிச்சாங்க. சிறைத்துறை அதிகாரிகள் ரெண்டு பேருக்கும் பரோல் கொடுத்தாங்க. அந்தி்யூர்ல திருமணம் நடந்துச்சு. அடுத்த ஒரு வருஷத்தில சிறையிலேயே யாழ் பிறந்தா...”- நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் ரேகா.

அன்புராஜின் நன்னடத்தை காரணமாக, குறிப்பிட்ட இடைவெளியில் பரோல் கொடுத்தது சிறைத்துறை. பரோல் காலம் முழுவதும், 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை விடுவிக்கக்கோரி கோரிக்கை விடுப்பதிலேயே கழித்திருக்கிறார் அன்பு. கர்நாடகப் படைப்பாளிகள் பலரும் இக்கோரிக்கைக்குக் குரல் கொடுக்க, அரசு கொள்கை முடிவு எடுத்தது. அன்புராஜும், ரேகாவும் விடுவிக்கப்பட்டார்கள். கூடவே 386 ஆயுள் கைதிகளும்.

சிறையை சீர்திருத்திய அன்பன்!

“ஏதோ புதுசா பிறந்தது மாதிரி இருக்கு தோழர்...  என்னால குடும்பத்தில எல்லோரும் ரொம்பச் சிரமப்பட்டுட்டாங்க. தம்பிக்கு ராணுவ வேலை போச்சு.  தங்கச்சிக்குப் படிப்பு போச்சு. ஆனா, யாரும் என்னைப் புறக்கணிக்கல. எல்லோரும் கூட்டுக்குடும்பமாத்தான் இருக்கோம்.  செக்குல எண்ணெய் ஆட்டி விற்பனை செய்றேன். யாழிசையும், அகரனும் வாழ்க்கையை நிறைவாக்குறாங்க. இன்னும் ஒரே ஒரு உறுத்தல் இருக்கு... என் கணக்குப்படி, 2,530 பேர் மேல வீரப்பன் சம்பந்தப்பட்ட வழக்குகளைப் போட்டாங்க. ஆனா, பெரும்பாலான வழக்குகள் நிக்கல. பதினைஞ்சு பேருக்குள்ளதான் பெரிய தண்டனைகளுக்கு உள்ளானாங்க.  நாங்ககூட அரசாங்கக் கருணையில வெளியில வந்துட்டோம். ஆனா, கர்நாடகச் சிறையிலயும், தமிழகச் சிறையிலயும் 7 பேர் இன்னும் ஆயுள் தண்டனை அனுபவிச்சுக்கிட்டிருக்காங்க. அதுல சிலபேர் வீரப்பனை நேரா சந்திச்சதுகூட இல்லை. 2 பேருக்கு இப்போ  மனநலம் பாதிக்கப்பட்டிருக்கு. சிலர் கடும் நோய்களால பாதிக்கப்பட்டிருக்காங்க. இவங்களுக்கு ஒரு விடிவு பிறக்கணும். கடைசி காலத்திலேயாவது, இவங்க சுதந்திரமான, துயரமில்லாத காத்தை சுவாசிச்சுட்டுப் போகணும். அதுக்காக சில வேலைகள் செஞ்சுகிட்டிருக்கேன்...”

அழுத்தமாகச் சொல்கிறார் அன்புராஜ். அந்த இடத்தை  யாழிசையும் அகரனும் வண்ணமயமாக்குகிறார்கள்.