`பொருள எடுங்க; கல்லாவில் காசைப் போடுங்க!'- பாபநாசத்தில் அசத்தும் ஆள் இல்லாக் கடை | Shop without seller in papanasam

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (02/10/2018)

கடைசி தொடர்பு:14:20 (02/10/2018)

`பொருள எடுங்க; கல்லாவில் காசைப் போடுங்க!'- பாபநாசத்தில் அசத்தும் ஆள் இல்லாக் கடை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பாபநாசத்தில் ஆள் இல்லாக் கடை திறக்கப்பட்டது. இதில் குழந்தைகளுக்குத் தேவையானவை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். பொது மக்களே அவர்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொண்டு அதற்குரிய விலையை அங்கு வைக்கப்பட்டிருக்கும் கல்லாப் பெட்டியில் போட்டுவிட வேண்டும். நேர்மை குறித்து மக்களிடத்தில் விழிப்புஉணர்வை ஏற்படுத்தவே ஹானஸ்டி ஷாப் என்கிற பெயரில் ஒருநாள் மட்டும் இந்த ஆள் இல்லாக் கடை நடத்தப்படுகிறது. மக்கள் இதில் நடந்துகொள்ளும் விதம் பெருமையும்,பெருமிதமும் கொள்ள வைப்பதாக உள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் ரோட்டரி சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வருடமும் காந்தி ஜெயந்தி தினத்தில் ஆள் இல்லா கடையைத் திறப்பது வழக்கம். அதேபோல் இன்று காலை 8 மணிக்கெல்லாம் இந்தக் கடை திறக்கப்பட்டது. குழந்தைகளுக்குத் தேவையான பிஸ்கட், சாக்லெட், எழுது பொருள்கள், நோட்டுப் புத்தகம் மற்றும் வீட்டு உபயோகத்துக்குத் தேவையான பொருள்கள் என அனைத்தும் ஸ்டாலில் வைக்கப்பட்டிருக்கும். இதேபோல் கல்லாப் பெட்டி ஒன்றும் அங்கேயே வைக்கப்பட்டிருக்கும். பேருந்து ஏற காத்திருப்பவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து தங்களுக்குத் தேவையான பொருள்களை எடுத்துக்கொள்வதோடு அதற்கான விலையைப் பார்த்து அவர்களே கல்லாப் பெட்டியில் போட்டு விடுவதோடு மீதிச் சில்லறை வருவதாக இருந்தால் அவர்களே எடுத்துக்கொண்டு செல்கிறார்கள்.

இது குறித்து சிலரிடம் பேசினோம். ``காந்தி தான் மட்டுமல்ல இந்த தேசமும் நேர்மை, உண்மை, நம்பிக்கை, நாணயம் இவற்றைப் பின்பற்றி இருக்க வேண்டும் எனக் கனவு கண்டார். அதேபோல் காந்தி வாழ்ந்து காட்டினார். நேர்மையை மக்கள் மத்தியில் விதைக்கும் விதமாகவே இந்தக் கடை நடத்தப்படுகிறது.தொடர்ந்து 19 ஆண்டுகளாக ஆள்  இல்லா கடை திறக்கப்படுவதோடு ஹானஸ்ட் என்ற பெயருக்கு ஏற்ப மக்கள் ரொம்பவே ஹானஸ்டாக இருப்பது பெருமைப்படக்கூடிய விஷயம். காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இயங்கும் இந்தக் கடையில் எந்தச் சிறு தவறும் நடக்காமல் மக்கள் ரொம்பவே உண்மையாகவும், நேர்மையாகவும் நடந்துகொள்வார்கள். இதன் மூலம் காந்தி கண்ட கனவு நிறைவேறி விட்டதாகவே நாங்கள் கருதுகிறோம்'' என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close