Published:Updated:

“வாழ்ந்து காட்டுறோம் ப்ரோ!”

“வாழ்ந்து காட்டுறோம் ப்ரோ!”
பிரீமியம் ஸ்டோரி
News
“வாழ்ந்து காட்டுறோம் ப்ரோ!”

மா.பாண்டியராஜன், படம்: க.பாலாஜி

சின்னத்திரையின் லேட்டஸ்ட் ஸ்வீட்டஸ்ட் லவ் ஜோடி  மணிமேகலை - ஹுசைன். ``திருமணமாகி இரண்டு மாதங்கள்தான் ஆகுது. ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ‘திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?’னு யார் கேட்டாலும் இந்தப் பதிலைதான் சொல்லத்தோணுது’’ என  ஹுசைன் சொல்ல, ‘`ஹே... செல்லக்குட்டி, இந்த மாதிரியெல்லாம் கேள்விகேட்டா, இப்படி ஒரு மனைவி கிடைக்க நான் ரொம்பக் கொடுத்து வெச்சிருக்கணும். அப்படி, இப்படி பல பிட்டுகளைச் சேர்த்துப் போடணும்பா...’’ என  ஹுசைனுக்குக் குறும்பு க்ளாஸ் எடுக்கிறார் மணிமேகலை.

‘`லவ் பண்ணும்போது  ஹுசைனை மீட் பண்ணணும்னா வீட்டுல எதாவது பொய் சொல்லிட்டுப் போக வேண்டியிருக்கும். இப்போ நாங்க ஒரே வீட்டுல இருக்கோம். எந்தத் தடையும் இல்ல’’ என்று சொல்லி,  ஹுசைனின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொள்கிறார் மணிமேகலை.

``கல்யாணம் ஆனதுக்குப் பிறகு விதவிதமா சமையல் செஞ்சு என்னை அசத்திடுவாங்கனு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால், நான் ஒரு தோசைகேட்டு ரெண்டு மாசம் ஆச்சு ப்ரதர். இன்னும் சுட்டுத்தரலை’’ என்று  ஹுசைன் சொல்ல, ‘`நான் தோசை நல்லாதான் ஊத்துவேன். ஆனா அதை எடுக்கும்போது அது தோசையாத்தான் இருக்கானு நீங்கதான் பார்த்துச் சொல்லணும்’’ என்று ஹுசைனைப் பார்த்துச் சிரிக்கிறார் மணிமேகலை.

“வாழ்ந்து காட்டுறோம் ப்ரோ!”

``2016 காதலர்தினத்துக்கு, `வேலன்டைன்ஸ் டே வந்தா சிங்கிள்க்கு எவ்வளவு கடுப்பா இருக்கும் தெரியுமா’னு ஒரு மீம் போட்டிருந்தேன். போன வருஷம் நானும் என் ஃப்ரெண்ட்ஸும் சேர்ந்து `எனக்கொரு கேர்ள் ஃப்ரெண்ட் வேணுமடா...’ பாட்டுக்கு டப்ஸ்மாஷ் பண்ணி ஃபேஸ்புக்ல போட்டிருந்தோம். இந்த வருஷம் லவ் பண்ணி, கல்யாணமே பண்ணிட்டேன். ஒரு வருஷத்துக்குள்ள எனக்குக் கல்யாணம் ஆகும்னு சத்தியமா நினைச்சுக்கூடப் பார்க்கலை’’ எனக் காதலுடன் மணிமேகலையைப் பார்க்கிறார்  ஹுசைன்.

‘` ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தோட ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ பாட்டைப் பார்த்ததில் இருந்துதான்  ஹுசைனை எனக்குத் தெரியும். அதுல லாரன்ஸ் மாஸ்டரும் இவரும் மட்டும் தனியா ஆடுற போர்ஷனைப் பார்த்து, `யாரு இந்தப் பையன் செமையா ஆடுறானே’னு தோணுச்சு. அப்புறம் என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட, ‘இந்தப் பையன் யாருன்னு கண்டுபிடிச்சுப் பேசணும்’னு சொன்னேன். கொஞ்ச நாள் கழிச்சு என் ஃப்ரெண்ட் இவரோட நம்பரை வாங்கி எனக்குக் கொடுத்தாங்க. நானும் ஆர்வமா போன் பண்ணி, `நான் வீஜே மணிமேகலை பேசுறேன். உங்க டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்’னு சொன்னா, ‘ஹ்ம்ம், ஓகே. தேங்க்ஸ்’னு போனை வச்சிட்டார்’’ என்று மணிமேகலை வருத்தப்பட்டுச் சொல்ல, ‘`நான் அப்போ ஹைதராபாத்ல ஷூட்டிங் போயிருந்தேன் ப்ரோ. நைட் ஃபுல்லா ஷூட் போயிட்டு காலையில வந்து தூங்கிட்டிருக்கும்போது போன் பண்ணுனாங்க. அதுனாலேயே என்னால பேச முடியல. அதுமட்டுமில்லாம, நம்ம பசங்கதான் யாரோ கலாய்க்கிறாங்கனு நினைச்சேன். அதான் சரியா பேசலை’’ எனக் கண்களாலேயே ஸாரி சொல்கிறார்  ஹுசைன்.

``மேரேஜுக்கு முன்னாடிவரைக்கும் எனக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்துச்சு. ஒரு சேனலுக்கு மட்டும்தான் வொர்க் பண்ணணும், பப்ளிக் ஷோக்களுக்கு வீஜேயிங் பண்ணக்கூடாதுனு நிறைய ரூல் எங்க வீட்டில் இருந்துச்சு. இப்போ எந்தத் தடையும் எனக்கு இல்ல.  ஹுசைன் என்னை நல்லா புரிஞ்சுகிட்டதனால என்னோட கரியரை என்னையே முடிவு பண்ணச் சொல்லிட்டார். இனி இந்த மணிமேகலையை வேற மாதிரி பார்ப்பீங்க’’ என்றதும், ‘`நானும் என்னோட கரியர்ல இப்போதான் மேல வந்துட்டிருக்கேன். `பாகுபலி’, `மெர்சல்’னு பெரிய படங்களுக்கு உதவி நடன இயக்குநரா இருந்திருக்கேன். சில படங்கள் நடன இயக்குநரா வொர்க் பண்றதுக்கு வாய்ப்பு வருது. நான்தான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், அதுக்கப்புறம் மாஸ்டரா வொர்க் பண்ணலாம்னு இருக்கேன். கல்யாணம் ஆகிடுச்சுன்னாலே பொறுப்புகள் வரத்தானே செய்யும். அதுக்காக நாங்க எங்களைத் தயார் படுத்திட்டிருக்கோம். வாழ்ந்து காட்டுறோம் ப்ரோ’’ என தம்ஸ்அப் காட்டுகிறது மணிமேகலை -  ஹுசைன் ஜோடி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz