Published:Updated:

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை!”

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை!”
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை!”

கமல்ஹாசன்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை!”

கமல்ஹாசன்

Published:Updated:
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை!”
பிரீமியம் ஸ்டோரி
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை!”
என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை!”

ந்த வாரம், உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன், ‘ஒரே ஒரு கிராமத்திலே...’ பாணி கதை. அனைத்துத் தமிழகக் கிராமங்களுக்கும் பொருந்தக்கூடிய கதை. ஒரு தமிழகக் கிராமம். அதில் ஒரு விவசாயக் குடும்பம். ஆடு, மாடு, கோழி, வீட்டுக்குப் பின்னால் கொல்லை, வயல்வெளி, குளம், வாய்க்கால்சூழ் வாழ்க்கை. தன்னிறைவான குடும்பம். அதிகாலை எழுந்து வேப்பங்குச்சியில் பல் துலக்கி, நீராகாரம் அருந்தி, சூரியன் உதிக்கும் முன்பே வயல் வேலைக்குச் செல்லும் குடும்பத் தலைவன்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவனை வயலுக்கு அனுப்பிவிட்டு, கொட்டகையில் ஆடு, மாடுகளை அவிழ்த்துவிட்டு, சாணம் அள்ளி, கூட்டிச் சுத்தம்செய்து, கோழிகளைத் திறந்துவிட்டுக் குடாப்பைச் சுத்தம் செய்து, பிறகு தோப்புக்குச்சென்று விறகெடுத்து... என பரபரப்பாக இருக்கும் குடும்பத்தலைவி. வயல், தோப்பில் இருந்து நேராக ஆற்றுக்குச் சென்று சிலுசிலுவென ஓடும் சுத்தமான ஆற்றுநீரில் குளித்தெழுந்து வீட்டுக்கு வந்து பழைய சோற்றைத் துவையலுடன் சேர்த்துண்டு வாழும் மகிழ்வான இணையர்.

மனைவி கருவுறுகிறாள். பத்திய வைத்தியம். வீட்டிலேயே பிரசவம். ஆண் குழந்தை பிறக்கிறது. அடுத்தடுத்த பிரசவங்களும் வீட்டிலேயே நடக்கின்றன. வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி, அக்கம்பக்கத்தார்... குழந்தைகளைப் பராமரிப்பதில் பிரச்னைகள் இருக்கவில்லை. குழந்தைகள் வளர்கின்றனர். கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் சேர்க்கிறார்கள். ஆசிரியர்கள், ஆத்திசூடியையும் அறநெறியையும் தங்களின் அனுபவத்துடன் சேர்த்துப் பாடமெடுக்கிறார்கள்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை!”

விவசாயம் நன்றாக நடக்கிறது. வசதி வாய்ப்பு வருகிறது. குடும்பம் பெரிதாகிறது. குடிசையை இடித்துவிட்டு, மாட்டு வண்டியில் ஆற்று மணல் அள்ளி, மண்ணுடன் குழைத்துச் சற்றே பெரிய வீடாக்குகிறார்கள். இந்தச்சூழலில் புற அழுத்தங்களால் அரசின் விவசாயக் கொள்கை மாறுகிறது. ‘அமோக விளைச்சல்’ என்ற ஆசைகாட்டி, விவசாயிகள் பாரம்பர்ய விவசாயத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ரசாயன விவசாயத்துக்கு மாறும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.

நெல் என்றால் நெல்லை மட்டுமே பயிரிடு, கரும்பென்றால் காலம் முழுவதும் கரும்பையே நடு... ரசாயன உரமிடு... தங்க முட்டையிடும் வாத்தை அரசுடன் சேர்ந்து அறுவடை என்கிற பெயரில் அறுக்கத் தொடங்குகிறான் விவசாயி. நாளாக நாளாக மண் மலடாக்கப்படுகிறது. விளைச்சல் குறைகிறது. விவசாயம் பொய்க்கத் தொடங்குகிறது. இதற்கிடையில் பக்கத்து மாநிலங்களுடனான தண்ணீர் தாவா, காலம் மாறிப் பெய்யும் சமயங்களில் பொய்க்கும் பருவமழை... நீரின்றி  வெடிக்கின்றன நிலங்கள். பொதி மணலால் நிறைகின்றன ஆறுகள். ஒருகாலத்தில் நீந்திச் சென்று கடந்த அக்கரை, கால்கள் அசரக் கடக்க முடியாத அளவுக்கான தொலைதூரமாக மாறுகிறது.

சோர்வடையும் விவசாயி, வரவு-செலவு கணக்கைப் பார்க்கத் தொடங்குகிறான். ‘வாழ்வதற்கு விவசாயம் ஏற்ற தொழிலல்ல’ என்ற முடிவுக்கு வரவழைக்கப்படுகிறான். கோட்டைகளில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த விதைநெற்களை விற்க ஆரம்பிக்கிறான். நெற்களைச் சேமித்துவைக்கப் பயன்படுத்திவந்த குதிர்களை உடைக்கிறான். பத்தாயங்களைப் பிரித்துச் சட்டங்களாக விற்கிறான்.

இவன் சோர்வடையும் சமயம் பார்த்து, வேறு சிலர் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். வெளியூர் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் விவசாய பூமியைக் குறைவான விலைக்கு வாங்கிக் கூறுபோடுகின்றன. விவசாய நிலங்கள் முடியும் இடத்தில் தொடங்கும் சிறு நகரங்கள், கிராமங்களை நோக்கி உள்ளே வருகின்றன. அங்கு புதிய நகர்களை நிர்மாணிக்கிறார்கள். நகர்கள் பெருக, கிராமங்கள் சுருங்குகின்றன. ‘தினமும் டவுன் பள்ளிக்கு நடந்துபோய்வரச் சிரமமாக இருக்கிறது. அதனால் டவுனை ஒட்டிய புதிய நகரிலேயே இடம்வாங்கிச் செல்லலாம்’ என வயல்சூழ் வாழ்க்கையில் இருந்து, கட்டடங்கள் சூழ் நகர் வாழ்க்கையை நோக்கி நகர்கிறான் விவசாயி. பொக்லைன் இயந்திரங்கள்மூலம் மணல் அள்ளிக்கொட்டி, வாங்கிய வயல்வெளியை மட்டப்படுத்தி, வீடெழுப்புகிறான்.

ஆறுகள் அள்ளப்பட்டு அந்த மணலை வைத்து அரசியல்வாதிகளும், திடீர்ப் பணக்காரர்களும்  மாவட்டங்களின் புறநகர்ப் பகுதியெங்கும் பொறியியல் கல்லூரிகளை எழுப்புகிறார்கள். நதிகள், மணலற்றுக் கழியாகின்றன. விவசாயியின் வாழ்வாதாரத்தின் மீது எழுப்பப்பட்ட கல்லூரிகளில் வயல்வெளிகளை விற்ற பணத்தை வைத்துத் தன் மகனையும் மகள்களையும் சேர்க்கிறான் விவசாயி. அதே கல்லூரியில் கடந்தாண்டு பட்டம்பெற்ற சீனியர் மாணவன், ஜூனியர் மாணவர்களுக்கு ஆசிரியர் ஆகிறான். தான் மனப்பாடம் செய்ததை விவசாயிகளின் பிள்ளைகளின் மனதுக்கு மடைமாற்றுகிறான். அதனால் அந்தப் பிள்ளைகள் விஞ்ஞானிகளாகவும் மாறமுடியாமல், விவசாயிகளாகவும் இருக்கமுடியாமல், தமிழும் முழுமையாகக் கற்காமல், ஆங்கிலமும் அறியாமல் ஏதேதோ ஆகிறார்கள். 

இப்படி ஆதாரமாக இருந்த விவசாயம், லாபமற்ற தொழில் என்று அடுத்தடுத்த தலைமுறையால் கைவிடப்பட்டதால் ஆதரவின்றிக் கிடக்கிறது. உலகுக்கு உழவைக் கற்றுக்கொடுத்த மூத்த குடி, கையேந்தி நிற்கவேண்டிய சூழல். விவசாயம், அவற்றின் உப தொழில்கள்... எண்ணற்றவை உள்ளன. ஆனால், அவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் படாமலேயே முழுமையாகக் கற்பிக்கப் படாமலேயே நாட்டு மருத்துவம்போல் அழிந்து வருகிறது.

இதுதான் கிராமப்புறங்களில் இன்றைய விவசாயத்தின், விவசாயிகளின் நிலை. ஊக்கப்படுத்த வேண்டிய வேளாண்மைத் துறையோ, அதிகாரிகளை முடுக்கிவிட்டு, ‘இத்தனை லட்சம் ஹெக்டேர் சம்பா சாகுபடி...’, ‘வறட்சி, வெள்ள நிவாரணம் இத்தனை கோடி’ என்று  ஆவணங்களில் மட்டுமே ஆட்சி செய்துகொண்டு இருக்கின்றன. தன்னிடம் உள்ள உழவுக்குத் தேவையான கருவிகளைக் கழட்டிப்போட்டுக் காயலான் கடையாக்கி, இப்படி ஒரு துறை இருக்கிறதா என்று கேள்விகேட்கும் வகையில் வைத்துள்ளது வேளாண்மைப் பொறியியல்துறை.

இன்னொருபுறம் மக்கள் இடம்பெயராமல் இருக்கக் கிராமப்புறக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அரசு, பொதுக்கழிப்பிடம், சமுதாய நலக்கூடம், நூலகம், ரேஷன் கடை... என்று டெண்டருக்காகவே கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் காரைபெயர்ந்து அரசின் லட்சணங்களை, அலட்சியங்களைப் பறைசாற்றிக்கொண்டு நிற்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள பொதுக்கழிப்பிடங்களைப் பெரியபெரிய பூட்டுபோட்டுப் பூட்டி வைத்திருப்பதில் உள்ள அரசியல் என்ன என்பதுதான் என் மிகப்பெரிய சந்தேகம். பொதுவான இடத்தில் உள்ள கழிப்பிடங்களைப் பயன்படுத்த மக்கள் சங்கோஜப்படுகிறார்கள் என்றால், ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாகக் கழிப்பிடம் கட்ட மானியம் வழங்கி ஊக்கப்படுத்தலாமே? அப்படி மானியங்கள்மூலம் அனைத்து வீடுகளிலும் ஏற்கெனவே கழிப்பிடங்கள் இருந்தால் பிறகெதற்குப் பூட்டிய பொதுக்கழிப்பிடங்கள்?

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை!”

அரசின் கல்வித்துறையோ, தான் நடத்தும் கிராமப்புறப் பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் போட்டிபோடுகின்றன. கட்டடங்களும் ஆசிரியர்களும் மாணவர்களை எதிர்நோக்கி அநாதையாகக் காத்துநிற்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பது மட்டும் புரிகிறது. இருக்கும் கொஞ்சநஞ்ச மாணவர்களையும் ‘இதற்கு என்ன அர்த்தம், இதைப் படிப்பதால் என்ன பயன்’ என்று சொல்லாமலேயே ‘(A+B)2 ஃபார்முலா சொல்லிக்கொடுத்துத் தலைதெறிக்க ஓட வைக்கிறார்கள். ஆமாம், இன்றைய மாணவர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லித்தந்தால் அது அவனின் வாழ்க்கைக்கு எந்தளவுக்குப் பயன்பெறும் என்று சொன்னாலொழிய மற்றவை அவனுக்குத் தேவையற்றவையே. இந்தத் தொழில்நுட்ப யுகத்தில், செயல்முறை கற்றல் இல்லை என்றால், அந்தந்தந்த வருடப் பாடத்தை மனனம் செய்து, அந்தந்த வருடம் தேர்வில் தேறி, வருடாவருடம் வாழ்வில் தோற்பான். வெற்றிக்கான வாழ்க்கைக் கல்வியை என் கிராமத்தானுக்கு, என் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு எப்போது கற்பிக்கப்போகிறோம்?
போதாததற்குப் பல மாணவர்களுக்கு, என் விவசாயிகளுக்கு மிகப்பெரிய எதிரியாக நிற்பது சாதி. தேர்தல் பாதைப் பயனுக்காக அதைப் பாதுகாத்து வேறு வருகிறார்கள். அதனால் சாதி மறக்க, தொழில் கற்க, தன் திறமையை உலகறிய வைக்க... பெரு நகரம் நோக்கி இடம்பெயர வேண்டிய நெருக்கடி நம் விவசாயிகளின் பிள்ளைகளுக்கு. அப்படி இடம்பெயரும் நாம், மந்தைபோல் பெரும் ஜனத்திரளில் மூச்சுமுட்டப்  பயணிக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாகக் கிராமம் மறக்கிறோம்.

நம்முடைய இந்த மறதி ஆள்பவர்களுக்கும் வசதியாகிவிட, அவர்களும் தாங்கள் பயனுற கிராமம், விவசாயத்துக்கான திட்டங்களைப் போட்டுவிட்டு அவற்றைச் செயல்படுத்த வசதியாய் மறக்கின்றனர். ஊழலில் திளைக்கின்றனர். அரசியலே தீங்கு என இளைய சமுதாயத்தாரை எண்ண வைக்கின்றனர். கூடவே, நம் ஒற்றுமையில் வேற்றுமையை ஏற்படுத்தவேறு முனைகின்றனர்.

இப்படி, அரை நூற்றாண்டுக்கான கேள்விகளைக் கேட்டுவிட்டு நான் ஓய்ந்துபோவேன் என்று நினைத்தார்கள். இவர்களை நானறிவேன் என்பதால், என் கேள்விகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கிவிட்டேன். அதன் முதல்படிதான் என் அமெரிக்கப் பயணம். புலம்பெயர்ந்த தொழில்முனைவோருடன் கலந்துரையாடல், அவர்களின் அறிவை, தொழில்நுட்பத்தைத் தமிழகத்தில் முதலீடு செய்ய வலியுறுத்தல், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூலில் உரை... என இந்தப் பயணத்தை என் கிராமங்களை நோக்கியதாகவே அமைத்துக்கொண்டேன்.

கலிஃபோர்னியா மாகாணம், சனிவேலில் நமக்குத் தேவையான மின்சாரத்தை நாமே தயாரித்துக்கொள்ளும் தொழில்நுட்பமான ப்ளூம் பாக்ஸைக் கண்டறிந்த தமிழர் டாக்டர் கே.ஆர்.ஸ்ரீதரைச் சந்தித்தேன். ஸ்ரீதர், அரிசோனா பல்கலைக்கழகத்தின் விண்வெளி தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தின் தலைவராக இருந்து, மார்ஸ் ஆக்ஸிஜன் எனப்படும் அதிநவீன தொழில்நுட்பத்தில் சுத்தமான ஆக்ஸிஜன் தயாரிக்கும் திட்டத்துக்குத் தலைமை தாங்கி, அதற்கான பிரத்யேகக் கூடமும் உருவாக்கியவர். நாசா, மார்ஸ்-2011 திட்டத்தைக் கைவிட்டதும், இவர் ஆக்ஸிஜனையும் ஹைட்ரஜனையும் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் ஈடுபட்டார். இதுவே ப்ளூம் எனர்ஜி உருவாகக் காரணம்.

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை!”

அந்த ப்ளூம் பாக்ஸ் தொழில்நுட்பத்தைத் தமிழகத்தில் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்தோம். இது எதிர்காலத்துக்கான திட்டம். ‘`தமிழ்நாடும் இந்த மாதிரியான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதன்மை நுகர்வராக மாறும் எதிர்காலத்தை என்னால் கணிக்க முடிகிறது’’ என்கிறார் ஸ்ரீதர். இதேபோல் பேராசிரியர் கஸ்தூரி ரங்கனுடனான சந்திப்பும் ஆக்கபூர்வமானதாக அமைந்திருந்தது.

மாவட்டம்தோறும் ஒரு கிராமம் தத்தெடுப்பது, ஆகப்பெரும் லாபம் தரக்கூடிய விவசாயம், அந்தச் சூழலை மாசுபடுத்தாத, அதையொட்டிய தொழிற்சாலைகள்... என்று கிராமத்தை வளர்த்தெடுக்கும் என் எண்ணத்தையும் அதை நோக்கிய என் அரசியல் பயணத்தையும் அறிந்த புலம்பெயர்ந்த நண்பர்கள், அதற்குப் பல வகைகளிலும் உதவிக்கரம் நீட்டுவோம் என்று உறுதியளித்துள்ளனர். அதில் ஒரு நண்பர்,  ‘`உலக நாயகன், உள்ளூர் நாயகனாகிறார்’’ என்றார். ``அந்த உள்ளூர் நாயகர்களால்தான் நான் உலக நாயகனாக அறியப்படுகிறேன்’’ என்றேன்.

நன்றாக யோசித்துப்பாருங்கள், உழவின்றி உலகம் உண்டா? உழவனின்றி உழவு உண்டா? ஆனால், மணலைத் தோண்டியெடுத்த ஆற்றுக்குள், பொறியியல் கல்லூரி கட்ட தோண்டிய கடைக்கால் குழிகளுக்குள், ரியல் எஸ்டேட் ஃப்ளாட் கற்கள் புதைக்கத் தோண்டிய பள்ளங்களுக்குள்... உழவையும் உழவனையும் போட்டுப் புதைக்க முயன்று கொண்டிருக்கிறோம். இந்த அரசியல்வாதிகளும் கற்றுத் தேர்ந்த அதிகாரிகளும் நினைத்தால் நம் பாரம்பர்யத்தையும் இன்றைய தொழில்நுட்பத்தையும் இணைத்துப் பிணைத்து அடுத்தகட்ட வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தலாம். மக்கள் ஆசையாசையாய் வாழ விரும்பும் பூலோகச் சொர்க்கங்களாகக் கிராமங்களைத் தரம் உயர்த்தலாம். ‘`அந்தக் கிராமத்திலா, அங்க ஃப்ளாட் கிடைப்பதெல்லாம் கஷ்டம்பா’’ என்று பேசும்வகையில் அந்த மண்ணையும் மனிதர்களையும் விலை மதிப்பில்லாதவர்களாக உயர்த்தலாம்.

ஆம், அதைநோக்கிய தமிழகத்துக்கான, தமிழர்களுக்கான என் பயணம் தொடங்கிவிட்டது. உழவுக்கு வந்தனை செய்யும் படை, ‘நாளை நமதே’ என்று கூறிப் புறப்படத் தயாராகிவிட்டது. ஆர்வம் உள்ளவர்கள், நல்லுள்ளம்கொண்டவர்கள் இணைக.  விருப்பமில்லாதவர்கள் எங்களுக்கு வழிவிடுங்கள். நாங்கள் நிகழ்த்திவிட்டு உங்களை வந்தடைகிறோம். உங்களைப் பிறகு இணைத்துக்கொள்கிறோம். ‘நாளை நமதே’.

- உங்கள் கரையை நோக்கி!

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 20 - “உழவுக்கு வந்தனை செய்யும் படை!”

இந்தத் தொடர் குறித்த உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்துகொள்ள kamalhassan@vikatan.com-க்கு எழுதுங்கள்.