வெளியிடப்பட்ட நேரம்: 14:37 (03/10/2018)

கடைசி தொடர்பு:14:37 (03/10/2018)

ஹிமாலயன் நல்ல சாய்ஸா...பல்ஸர் RS200 Demon Black-ல் கிடைக்குமா...என்ன கார், என்ன பைக் வாங்கலாம்?

எனது பட்ஜெட் 2 லட்ச ரூபாய். 250 சிசி செக்மென்ட்டில் இருக்கும் புதிய ஹோண்டா CBR 250R மற்றும் கேடிஎம் டியூக் 250 ஆகியவற்றில் எது நல்ல மாடல்?இதே விலையில் வேறு ஏதெனும் ஆப்ஷன்கள் இருக்கின்றனவா கவுசிக் தயாளன்.

``புதிதாக பஜாஜ் பல்ஸர் RS200 பைக்கை வாங்க திட்டமிட்டிருக்கிறேன். இது 3 நிறங்களில் இருந்தாலும், முன்பிருந்த Demon Black கலர்தான் எனக்குப் பிடித்திருக்கிறது. இது தற்போது கிடைப்பதற்கு ஏதேனும் சாத்தியம் இருக்கிறதா? பஜாஜ், இந்த கலரை மீண்டும் கொண்டுவருமா? பல்ஸர் என்றால் அது கறுப்புதான் என்பது எனது எண்ணம்.’’

 - சுரேஷ் ஆன்ட்டோ, திண்டுக்கல்.

பைக்

``பஜாஜ் பல்ஸர் RS200, தற்போது கறுப்பு - கிரே, வெள்ளை - நீலம், வெள்ளை - சிவப்பு ஆகிய காம்பினேஷன்களில் மட்டுமே கிடைக்கிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கறுப்பு நிறம், BS-3 மாடல்களில் கிடைக்கப்பெற்றது. எனவே, அதை இப்போது புதிதாக வாங்குவது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லை!''

``புதிய எர்டிகாவை, மாருதி சுஸூகி எப்போது இந்தியாவுக்குக் கொண்டுவரும்? அதன் விலை, ஓட்டுதல் அனுபவம், இடவசதி, இன்ஜின் ஆப்ஷன்கள் ஆகியவற்றைப் பற்றி தகவல்கள் வேண்டும்.''

- சேகர், சிதம்பரம்.

கார்

``தற்போது இருக்கும் மாடலைவிட, நீளம் மற்றும் அகலத்தில் வளர்ந்திருக்கிறது புதிய எர்டிகா. இதனால் கடைசி வரிசையில் இடவசதி நன்றாக இருக்கலாம். புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், புதிய கிரில், ஸ்போர்ட்டியான பம்பர்கள், LED டெயில் லைட், 16 இன்ச் அலாய் வீல்கள் என வெளியே ஏகப்பட்ட புதிய அம்சங்கள் இருக்கின்றன. இரண்டாம் தலைமுறை எர்டிகா  Heartect  பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்பட்டுள்ளதால், முன்பைவிட காரின் எடை குறைந்திருக்கிறது. இதனுடன் புதிய 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் - 6.8 இன்ச் ஸ்மார்ட் பிளே இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் - க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி - ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் என, கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மஹிந்திரா மராஸோவுக்குப் போட்டியாக வரப்போகும் இது, மைலேஜ் மற்றும் விலை விஷயத்தில் ஆச்சர்யத்தை அளிக்கலாம். இரண்டாம் தலைமுறை மாடலை, தீபாவளிப் பரிசாக மாருதி சுஸூகி இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. எனவே, இதற்காகக் காத்திருப்பது நலம்.''

``புதிதாக 7 சீட்டர் எடுக்க முடிவுசெய்துள்ளேன். பட்ஜெட் பிரச்னையில்லை. இந்த வகையில் சிறந்த மற்றும் பாதுகாப்பான வாகனத்தைப் பரிந்துரைக்கவும்.''

- ஜெயராமன், இமெயில்.

கார்

``உங்கள் தேவைகளை வைத்துப்பார்க்கும்போது, புதிய மாருதி சுஸூகி எர்டிகா அல்லது மஹிந்திரா மராஸோ ஆகிய கார்களை நீங்கள் பரிசீலிக்கலாம். இவை அடுத்த 2 மாதத்துக்குள் டீலர்களையும் சாலைகளையும் வந்தடைவதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன. பட்ஜெட் ஒரு பொருட்டாக இல்லாதபட்சத்தில், டாடா ஹெக்ஸா அல்லது டொயோட்டா இனோவா க்ரிஸ்டா போன்ற கார்களையும் நீங்கள் பார்க்கலாம்.''

``தாழ்வான சீட்டிங் பொசிஷன் மற்றும் ஹேண்டில்பார்கொண்ட க்ரூஸர் பைக்கை வாங்க ஆசை. 2 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய பஜாஜ் அவெஞ்சர் 220 மற்றும் ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு 350 பைக்ஸ் எனக்குப் பிடித்திருக்கின்றன. ஹிமாலயன் நல்ல சாய்ஸாக இருக்குமா?''

- பாலசுப்ரமணியன் சந்திரன், இமெயில்.

அவெஞ்சர்

``நீங்கள் குறிப்பிட்டவற்றில், பஜாஜ் அவெஞ்சர் நல்ல சாய்ஸாக இருக்கும். தண்டர்பேர்டு பைக்குடன் ஒப்பிடும்போது இதன் விலை மற்றும் பராமரிப்புச் செலவுகள் குறைவு என்பதுடன், பர்ஃபாமென்ஸ் மற்றும் கையாளுமை நன்றாக இருக்கிறது. உங்கள் பட்ஜெட்டில் கிடைக்கக்கூடிய மற்றொரு க்ரூஸர் பைக்கான யுஎம் ரெனிகாடே பைக்கையும் நீங்கள் பரிசீலிக்கலாம். என்றாலும், அது டீலர் நெட்வொர்க், ரீ-சேல் மற்றும் பிராண்ட் மதிப்பு ஆகியவற்றில் பின்தங்கிவிடுகிறது. ஹிமாலயன் நல்ல தயாரிப்பாக இருப்பினும், அது அட்வெஞ்சர் பிரியர்களையே திருப்திப்படுத்தும்.''

``கடந்த 8 ஆண்டுகளாக பஜாஜ் பல்ஸர் 150 பைக்கைப் பயன்படுத்திவருகிறேன். எனக்கு முதுகுவலி மற்றும் தோள்வலி இருப்பதால், சொகுசான பைக்கை வாங்க உள்ளேன். குறைந்த அளவே அதை தினமும் ஓட்டுவேன் என்றாலும், சாலை கரடுமுரடாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அதை வைத்துக்கொள்ளும் எண்ணம் இருக்கிறது. யமஹா FZ மற்றும் பஜாஜ் அவெஞ்சர் ஆகியவற்றில் எதை வாங்கலாம்?''

- ஶ்ரீராம், இமெயில்.

பைக்

``பஜாஜ் அவெஞ்சர் உங்களுக்கான சாய்ஸாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இதன் தாழ்வான இருக்கைகள் மற்றும் உயரமான ஹேண்டில்பார் உங்களுக்கு வசதியாக இருக்கலாம். யமஹா FZ குறைவான எடையைக்கொண்டிருந்தாலும், அதன் சஸ்பென்ஷன் கொஞ்சம் இறுக்கமான செட்-அப்பையே கொண்டிருக்கிறது. எனவே, டெஸ்ட் டிரைவ் செய்து முடிவெடுங்கள்.''

``காம்பேக்ட் பெட்ரோல் செடான் வாங்க முடிவெடுத்துள்ளேன். எனது பட்ஜெட் 8 லட்சம் ரூபாய். நிறைய மைலேஜும் குறைவான பராமரிப்புச் செலவும் மிக முக்கியம். கூடுதலாக டச் ஸ்கீரின் சிஸ்டம், நிறைவான பூட் ஸ்பேஸ் மற்றும் போதுமான கிரவுண்ட் க்ளியரன்ஸும் அவசியம். எனக்கு டாடா டிகோர் மற்றும் ஹேண்டா அமேஸும் பிடித்திருக்கின்றன. இவற்றில் எதை வாங்கலாம்?''

- ராம், இமெயில்.

கார்

``நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அமேஸ், தற்போது பரபரப்பான விற்பனையில் இருக்கிறது. மேலும் உங்கள் தேவைகளான பூட் ஸ்பேஸ், கிரவுண்ட் க்ளியரன்ஸ், டச் ஸ்க்ரீன் சிஸ்டம், குறைவான பராமரிப்புச் செலவுகள் ஆகியவை அந்த காரில் இருக்கின்றன. ஆனால், பெட்ரோல் இன்ஜின் மைலேஜ் பொறுத்தமட்டில், மாருதி சுஸூகி டிசையர்தான் காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் முன்னிலை வகிக்கிறது. எனவே, இரு கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்து முடிவெடுங்கள்.''

``எனது பட்ஜெட் 2 லட்சம் ரூபாய். 250சிசி செக்மென்ட்டில் இருக்கும் புதிய ஹோண்டா CBR 250R மற்றும் கேடிஎம் டியூக் 250 ஆகியவற்றில் எது நல்ல மாடல்? இதே விலையில் வேறு ஏதெனும் ஆப்ஷன்கள் இருக்கின்றனவா?''

- கவுசிக் தயாளன், இமெயில்.

பைக்

``நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இரண்டு பைக்குகளுமே, வெவ்வேறு செக்மென்ட்களைச் சேர்ந்தவை. தற்போது அமலுக்கு வந்திருக்கும் புதிய இன்ஷூரன்ஸ் விதிகளால், அவை உங்கள் பட்ஜெட்டைவிட அதிகமான விலையில்தான் கிடைக்கின்றன. இருப்பினும் ஸ்போர்ட்டியான கையாளுமையுடன்கூடிய நேக்கட் பைக் வேண்டும் என்றால், கேடிஎம் டியூக் 250 பைக்கையும், ரிலாக்ஸ்டான ஓட்டுதலுடன்கூடிய ஃபுல் ஃபேரிங் பைக் வேண்டும் என்றால் ஹோண்டா சிபிஆர் 250ஆர் பைக்கையும் தேர்ந்தெடுங்கள். ஏறக்குறைய இதே விலையில் கிடைக்கக்கூடிய பஜாஜ் டொமினார் பைக்கையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.''

``தினசரி பயன்பாட்டுக்காக மாருதி சுஸூகி ஆல்ட்டோ K10 AMT காரை வைத்திருக்கிறேன். இதை விற்றுவிட்டு, MUV / SUV-க்குப் போகும் எண்ணம் இருக்கிறது. எர்டிகா, பொலேரோ, லாஜி ஆகியவற்றில் எது நல்ல சாய்ஸ்?''

- கணேஷ்குமார் ஆனந்த், இமெயில்.

``நீங்கள் பல சீட்களைக்கொண்ட எம்பிவி/எஸ்யூவி வாங்க விரும்புகிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டதில் பொலேரோ மிகவும் பழைய மாடல் என்பதால், பாதுகாப்பு - இடவசதி - ஓட்டுதல் அனுபவம் - தொழில்நுட்பம் ஆகியவற்றில் பின்தங்கிவிடுகிறது. முற்றிலும் புதிய எர்டிகாவை, தீபாவளிப் பரிசாக வழங்க இருக்கிறது மாருதி சுஸூகி. எனவே, தற்போதைய மாடலுக்கு அதிரடியான ஆஃபர்கள் ஏதும் கிடைத்தால் மட்டும், அதை வாங்குவது பற்றி யோசிக்கவும்.

ரெனோ லாஜியைப் பொறுத்தவரை, அது கொடுக்கும் காசுக்கு மதிப்புமிக்க பிராக்டிக்கலான வாகனமாக இருப்பினும், அது விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும், அது ரீ-சேல் மதிப்பு மற்றும் டீலர் நெட்வொர்க் ஆகியவற்றிலும் ஓகே ரகத்தில்தான் உள்ளது. எனவே, புதிய எர்டிகாவுக்கு நீங்கள் காத்திருக்கலாம்.''

``நான் கடந்த 8 ஆண்டுகளாக மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரைப் பயன்படுத்திவருகிறேன். எனது நண்பர், தனது 3 ஆண்டு பழைய ஃபோர்டு ஆஸ்பயர் பெட்ரோல் காரை விற்கும் முடிவில் இருக்கிறார். வெறும் 3,200 கி.மீ மட்டுமே அதை ஓட்டியிருக்கிறார் என்பதால், அதை வாங்க விரும்புகிறேன். எனது முடிவு சரியானதா? என்னென்ன விஷயங்களை நான் செக் செய்ய வேண்டும்?''

- மணவாளன், சென்னை.

கார்

``நீங்கள் இந்தச் செய்தியைப் படித்துக்கொண்டிருக்கும்போது, ஃபோர்டு தனது ஆஸ்பயர் பேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கும். யூஸ்டு கார் மார்க்கெட்டில், தற்போதைய ஆஸ்பயரின் சந்தைமதிப்பு கொஞ்சம் சரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் குறிப்பிட்ட காரின் பயன்பாடு குறைவாக இருப்பதால், எல்லாமே பர்ஃபெக்ட்டாக இருக்கும் என்கிற முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.

காரை வாங்குவதற்கு முன்பு, ஒருநாள் காரை ஓட்டிப்பாருங்கள். அது உங்கள் முந்தைய காரைவிட செளகரியமாகவும் கையாள எளிதாகவும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தும். பிறகு சர்வீஸ் ஹிஸ்டரி, இன்ஷூரன்ஸ், பேட்டரி, டயர்கள் மற்றும் ரப்பர் பாகங்கள், பாடி - அண்டர் சேஸி - கேபின் ஆகியவற்றை ஒருமுறை பக்காவாக செக்செய்துவிட்டு, கார் வாங்குவதைப் பற்றி முடிவெடுங்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்