தொப்பை இருக்கா... உங்களுக்கு இந்த ஜீன்ஸ்தான் செட்டாகும்! | Prefer this jeans pants to hide your excess tummy

வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (03/10/2018)

கடைசி தொடர்பு:17:53 (03/10/2018)

தொப்பை இருக்கா... உங்களுக்கு இந்த ஜீன்ஸ்தான் செட்டாகும்!

தொப்பை இருக்கா... உங்களுக்கு இந்த ஜீன்ஸ்தான் செட்டாகும்!

ம் எல்லோருடைய அலமாரியிலும் நிச்சயம் இருக்கும் ஓர் உடை ஜீன்ஸ். ஷர்ட், டீ-ஷர்ட், குர்த்தி எனப் பெரும்பாலும் எல்லாவிதமான ஆடைகளோடும் கச்சிதமாய்ப் பொருந்தும் இணையாடை, ஜீன்ஸ். ஆண், பெண் அனைவரும் உடுத்தக்கூடிய இது, `டெனிம்' எனும் துணிவகையில்தான் உருவாகிறது. 1873-ம் ஆண்டு, லீவ் ஸ்ட்ராஸ் மற்றும் அவரின் பார்ட்னர் ஜாகோப் டேவிஸ், ஜீன்ஸ் பேன்ட்டுகளின் கிங்கான `லீவைஸ்' பிராண்டை நிறுவினர். அன்றுதான் ஜீன்ஸ் பிறந்த தினம். தொடக்கத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் மட்டுமே பயன்படுத்திய ஜீன்ஸ் பேன்ட், நாளடைவில் பெரும்பாலான மக்கள் உடுத்தும் நம்பர் ஒன் உடையாய் மாறியது. `வரலாற்றின் மிகப் பிரபலமான பேன்ட்' என, இதற்கு மியூசியத்திலும் இடம் உண்டு.

ஜீன்ஸ்

எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து உடைகள் வாங்கினாலும், `எடையைக் குறைச்சிட்டுப் போட்டுக்கலாம்' என்ற பலரின் கனவால், கடை அலமாரியைவிட்டு வீட்டு அலமாரியில் தூங்கும் எத்தனையோ `ஜீன்ஸ்' உண்டு. ஆனால், எந்த உடலமைப்பாக இருந்தாலும், உடுத்தும்விதத்தில் ஆடைகளை அணிந்தால் நிச்சயம் `ஸ்மார்ட் லுக்' பெறலாம். ஆண், பெண் அனைவருக்கும் பொருந்தும் ஜீன்ஸ் ஸ்டைலிங் டிப்ஸ் இதோ..

தொப்பை உள்ளது என்றால், நிச்சயம் `Low Rise' மாடல்களைத் தவிர்க்கவேண்டும். இது அதிகப்படியான வயிற்றுத் தசைப் பகுதியை மிகுதிப்படுத்திக் காண்பிக்கும். எனவே, `high rise' மாடல் ஜீன்ஸ் பேன்ட்டுகள்தாம் உங்களுக்குச் சிறந்தவை. உடலை இறுக்கும் ஷர்ட், டீ-ஷர்ட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஷ்ரக், கோட், ஜாக்கெட் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். Mid-rise ஜீன்ஸ்களும் இவர்களுக்குப் பொருந்தும்.

தொப்பைப்போலவே பலரும் புலம்பும் மற்றொரு பிரச்னை, அதிகப்படியான தொடைப்பகுதி. அதை மறைப்பதற்காக, முட்டி வரை நீண்டிருக்கும் டாப் வகைகளைத் தேர்ந்தெடுப்பது பெரும்பாலான பெண்களின் வழக்கமாகிவிட்டது. இந்தப் பிரச்னைக்கான ஒரே வழி, கவனத்தைத் திசைதிருப்புவது. அதிகப்படியான வேலைப்பாடுகள் நிறைந்த டாப், பெல்ட் போன்றவற்றை அணிந்து, எக்ஸஸ் தொடைப்பகுதியைக் குறைத்து, சீரான உடலமைப்பு பெற்றதுபோல் மாயை உருவாக்குகிறது. சிறிதளவு `ஹீல்ஸ்' வைத்த காலணிகள் இவர்களுக்குப் பக்காவாகப் பொருந்தும்.

Jeans

மிகவும் மெல்லிய கால்கள் கொண்டவர்கள், ஃபேடட், வாஷ்டு போன்ற ஜீன்ஸ் வகைகளைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. இதனுடன் `பிரின்ட்டெட்' ஷர்ட் அல்லது டீ-ஷர்ட்டுகளை மேட்ச் செய்துகொள்ளலாம். மேலும், ஜீன்ஸ் பேன்ட்டின் விளிம்புகளை மடித்துவிடுவதன்மூலம், மெல்லிய கால்களை கனமாய்க் காண்பிக்கும் மாயையை உருவாக்கும். ஸ்கார்ஃப், ஷ்ரக் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். `ஹீல்ஸ்'கொண்ட காலணிகளை, இவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது, கால்களை மேலும் மெலிதாகக் காண்பிக்கும்.

மெல்லிய வயிற்றுப்பகுதி உடையவர்கள், நிச்சயம் `டபுள் லேயர்' டாப்ஸ் உடுத்தவேண்டும். கோட் வகைகள் என்றாலே தொடையளவு வரை நீண்டிருக்கும். ஆனால், இவர்கள் இடையளவு வரை நீண்டிருக்கும் கோட் வகைகளைத்தான் உடுத்த வேண்டும். அதாவது, டீ-ஷர்ட் அல்லது ஷர்ட் தொடையளவு நீண்டிருக்க வேண்டும். அதன்மேல் கோட், ஷ்ரக் போன்றவை இடையளவு வரை மட்டுமே இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால், மெல்லிய இடை மறையப்பட்டு சீரான உடலமைப்பைப் பெற முடியும். இவர்கள் ஹீல்ஸ், `லைட்' வண்ணங்களில் ஜீன்ஸ் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது.

மேலும், எப்போதும் எந்த ஆடையையும் அதன் முன்பக்கமாய்த் துவைக்கக் கூடாது. உள்பக்கத்தைத் திருப்பி, பிறகு பவுடர் அல்லது லிக்விட் கொண்டு ஊறவைத்து துவைக்க வேண்டும். இப்படிச் செய்தால் நீண்டநாள் உழைக்கக்கூடிய ஜீன்ஸ் இன்னும் நீண்டு உழைக்கும். ஆனால், துவைக்காமல் `யூஸ்' பண்ணாதீங்க பாஸ்!  


டிரெண்டிங் @ விகடன்