``என்னை மிரட்டியவர்களையும் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறேன்'' - சாலமன் பாப்பையா வேதனை | "I see those who threaten me as children" - says Salamon Pappaiya

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (04/10/2018)

கடைசி தொடர்பு:11:50 (04/10/2018)

``என்னை மிரட்டியவர்களையும் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறேன்'' - சாலமன் பாப்பையா வேதனை

``அந்தக் கடிதங்களை எழுதியவர்களையும் குறைசொல்ல முடியாது. அவர்களுக்கு என்னைப் பற்றியும் என் இயல்பும் தெரிந்திருந்தால், அப்படி எழுதியிருக்க மாட்டார்கள். என்னை மிரட்டியவர்களையும் என் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறேன்.''

'திருமணம் தாண்டி இன்னொரு நபருடன் உறவுகொள்வது கிரிமினல் குற்றம் கிடையாது' என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கடந்த வாரத்தின் பரபரப்பு. இதைக் கடுமையாக விமர்சிப்பது போன்று பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பெயரில் சமூக ஊடகங்களில் கட்டுரை ஒன்று ஷேர் ஆனது. அடுத்த சில மணி நேரத்தில், 'அது என்னுடைய பதிவு அல்ல' என்று சாலமன் பாப்பையா மறுப்பு தெரிவித்திருந்தார். என்ன நடந்தது என்று அறிய அவரைத் தொடர்புகொண்டேன்.

பேராசிரியர் சாலமன் பாப்பையா

``யாரோ தன்னை ஒளித்துக்கொண்டு என்னை கேவலப்படுத்திவிட்டார்கள் அம்மா. அது என்னுடைய பதிவே கிடையாது. பணமும் பதவியும் பெருக ஆரம்பிச்சா, சமூக ஒழுக்கம் பலியாகிவிடும். ரோம சாம்ராஜ்யத்துக்கும் இப்படித்தான் நிகழ்ந்தது. இதில் கருத்தெல்லாம் சொல்லித் திருத்தமுடியாது. வயதில் மூத்தவனாக எனக்குள் நானே புலம்பிக்கொண்டு, சமூகத்தில் ஓரமாக இருக்கவேண்டியதுதான். யாரோ எழுதிய பதிவுக்கு என் வீட்டுக்கு மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. அந்தக் கடிதங்களை நீங்கள் பார்த்தால் அரண்டுவிடுவீர்கள். அவ்வளவு அசிங்கமான வார்த்தைகள். என் குடும்பத்துப் பெண்கள் இந்தக் கடிதங்களைப் பார்த்துப் பயப்படுகிறார்கள்'' என்று வேதனைப்பட்டார்.

``அந்தக் கடிதங்களை எழுதியவர்களையும் குறைசொல்ல முடியாது. அவர்களுக்கு என்னைப் பற்றியும் என் இயல்பும் தெரிந்திருந்தால், அப்படி எழுதியிருக்க மாட்டார்கள். என்னை மிரட்டியவர்களையும் என் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறேன். வேறென்ன சொல்ல'' என்றவர் குரலில் மலையளவு துயரம்.


[X] Close

[X] Close