ஜீரோ பாயின்ட்... இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து... சிக்கிம்மில் ஒரு அட்வெஞ்சர் ட்ரிப்! | Travel to Zero point, the Switzerland of India

வெளியிடப்பட்ட நேரம்: 18:44 (04/10/2018)

கடைசி தொடர்பு:18:44 (04/10/2018)

ஜீரோ பாயின்ட்... இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து... சிக்கிம்மில் ஒரு அட்வெஞ்சர் ட்ரிப்!

15,000 கி.மீ உயரத்தைக் கடந்ததும், ஜீரோ பாயின்ட் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று போர்டு எதுவும் இருக்காது. சாலை எங்கு முடிவடைகிறதோ அதுதான் ஜீரோ பாயின்ட். அதற்கு மேல் எதுவுமே இருக்காது.

ஜீரோ பாயின்ட்... இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து... சிக்கிம்மில் ஒரு அட்வெஞ்சர் ட்ரிப்!

`லைஃப் ரொம்பவே ஸ்லோவா போகுது பாஸ்' என்று புலம்புபவர்களை ஜீரோ பாயின்டுக்குக் கூட்டிப்போகவேண்டும். ஜீரோ பாயின்ட் என்ற பெயரைக் கேட்டதும் இந்தியாவின் உச்சியில் ஒரு மலை... அந்த மலை உச்சியில் ஒரு நீர் வீழ்ச்சி... இப்படியெல்லாம் கனவு காணாதீர்கள். ஜீரோ பாயின்ட் என்பது வட சிக்கிம் பகுதியில் இருக்கும் இந்தியாவின் எல்லை. இங்கிருந்து நடந்து சென்றால் திபெத் வந்துவிடும். சிக்கிம் சாலை முடியும் கடைசி இடம் இது. 

ஜீரோ பாயின்ட்

சீனாவுக்கு அருகே இருப்பதால் இந்த இடத்தைச் சுற்றி தேனீ போல இந்திய ராணுவம் இருக்கும். அவ்வளவு சுலபமாக யாரும் ஊருக்குள் வந்துபோக முடியாது. லோக்கல் கைடு உதவியுடன் மட்டுமே இடத்தைச் சுற்றிபார்க்க முடியும். காரில் சென்றால் ஊருக்குள் போகும் முன்பே நிறுத்தி, `இது ஆபத்தான இடம்’ என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிடும் போலீஸ். அழகு இருக்கும் இடத்தில் ஆபத்தும் இருக்கும்தானே! 

சிக்கிம்மின் தலைநகரம் காங்தாக்கிலிருந்து 153 கி.மீ தொலைவில் இருக்கிறது ஜீரோ பாயின்ட். காங்தாக்கிலிருந்து கிளம்பினால் இரவு லச்சங்க் என்ற நகரத்துக்குச் சென்றிடலாம். நிலச்சரிவு, ரோடு கன்ஸ்டிரக்‌ஷன் போன்ற பிரச்னைகள் இல்லையென்றால் கவலைப்படத் தேவையில்லை. 100 கி.மீ தொலைவைச் சுலபமாகக் கடந்துவிடலாம். ஆனால், பெரும்பாலும் இந்தப் பிரச்னைகள் இருக்கும். நெடுஞ்சாலை கிடையாது. வளைவு நெளிவுகளாலான மலைச் சாலை. இடையில் டூங் செக்போஸ்ட்டைக் கடக்க குறைந்த பட்சம் 3 மணிநேரம் தேவை.

இந்த செக்போஸ்ட்டைத் தாண்ட வேண்டும் என்றால் பையிலும், கையிலும் வைத்திருக்கும் பிளாஸ்டிக் பொருள்களை செக்போஸ்ட்டின் நிறைந்து வழியும் குப்பைத்தொட்டியில் போட்டுவிட வேண்டும். நெகிழிக்கு அனுமதியில்லை என்பது நெகிழ்ச்சி. ஊட்டியிலும் இப்படி ஒரு செக்போஸ்ட் தேவை. டூங்கிலிருந்து லச்சங்க் 25 கி.மீ தொலைவு. லச்சங்க்கில் பெரிய விடுதிகள் எல்லாம் கிடையாது. பேயிங் கெஸ்ட் முறைதான். தங்குவதற்குப் பல வீடுகள் இருக்கும். லச்சங்கில் தூங்கிவிட்டு காலை எழுந்து கிளம்பினால் எனக்கு இன்னொரு முகம் இருக்கு என்று சிக்கிம் உக்கிரமாக முன் நிற்கும்.

ஜீரோ பாயின்ட்

Image Courtesy: Sandipan Paul

யம்தங் பள்ளத்தாக்கு 11,000 அடி உயரத்தில் இருக்கும் பகுதி. இதை `valley of flowers’ என்பார்கள். பிப்ரவரி முதல் ஜூன் மாத ஆரம்பம் வரை இந்த இடமே பூக்களால் நிறைந்திருக்கும். செப்டம்பர் மாதம் பனியாக இருக்கும். யம்தங் பள்ளத்தாக்கை `இந்தியாவின் ஸ்விட்சர்லாந்து’ என்றும் சொல்வார்கள். பூக்கள், வெள்ளைப் பனி, முயல்போலவும், மான் போலவும் கொத்துக் கொத்தாக மேகங்கள், அடர் நீல வானம்... வைக்கிங் தேசத்துக்கு வந்ததுபோலவே இருக்கும்.

ஆனால், சாலைகள் மட்டும் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. 15,100 அடி உயரத்தில் இருக்கும் ஜீரோ பாயின்ட்டுக்கு யம்தங் பள்ளத்தாக்கைக் கடந்துதான் செல்ல வேண்டும். மழை நேரங்களில் வந்தால் பெரிய அட்வெஞ்சர் ரைடு கிடைக்கும். சாலையெல்லாம் குளமாக நிறைந்திருக்கும். லாண்டு ரோவர் விளம்பரத்தில் வருவதுபோல தண்ணீரில்தான் காரை ஓட்டவேண்டும். யம்தாங் தாண்டி ஜீரோ பாயின்ட் செல்லும் பாதை ஆபத்தானது. நிலச்சரிவு அதிகம் நடைபெறும் பாதை இது. பாறைகள் உருண்டு வந்து சாலையில் வழிமறித்து நின்றுகொள்ளும். ஒன்று பாறையை நகர்த்த வேண்டும் இல்லையென்றால் கிடைத்த கேப்பில் புகுந்து போகவேண்டியதுதான். 

பள்ளத்தாக்கு

15,000 கி.மீ உயரத்தைக் கடந்ததும், ஜீரோ பாயின்ட் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று போர்டு எதுவும் இருக்காது. சாலை எங்கு முடிவடைகிறதோ அதுதான் ஜீரோ பாயின்ட். அதற்கு மேல் எதுவுமே இருக்காது. ஜீரோ பாயின்ட்டில் ட்ரெக்கிங் போகலாம், பனியில் விளையாடலாம், பனி மலையில் தொலைந்து போக நினைக்கலாம், படம் பிடிக்கலாம், இரவில் டென்ட் கட்டிப் படுத்து உறங்கி நட்சத்திரங்களை எண்ணலாம், ஐஸ்பால் செய்து தூக்கிப்போட்டு ஸ்லோ மோஷன் வீடியோ எடுக்கலாம், கதை படிக்கலாம். எல்லாம் முடித்துவிட்டுக் கிளம்பும்போது மீண்டும் அந்தக் கரடுமுரடான சாலை பயமுறுத்தும்!

பார்க்க வேண்டிய இடங்கள்: லச்சன்க் புத்த மடம், கடாவோ பள்ளத்தாக்கு, குருடோங்மார் ஏறி, தாங்கு ட்ரெக்கிங், செவன் சிஸ்டர்ஸ் நீர் வீழ்ச்சி, கன்சென்ஜுங்கா, யம்தங் பள்ளத்தாக்கு, வெப்ப நீரூற்று. 

குறிப்பு: சிக்கிம் டூரிஸத்தில் அனுமதிக்கப்பட்ட கார்கள் மட்டுமே உள்ளே செல்ல முடியும். அதனால், ஒரு கைடு ஏற்பாடு செய்வது நல்லது. பிளாஸ்டிக் பொருள்களுக்கு அனுமதி கிடையாது. எந்த இடத்தைச் சுற்றிப்பார்க்கச் சென்றாலும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்