``நார்மல் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்!’’ - ஷீபா ராதாமோகன் | sheeba radhamohan talks about her personal life

வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (04/10/2018)

கடைசி தொடர்பு:09:54 (05/10/2018)

``நார்மல் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள்!’’ - ஷீபா ராதாமோகன்

`` `என் குழந்தை சிறப்புக் குழந்தை'ன்னு வெளியில் சொல்லத் தயங்கறதை நிறுத்தணும். உங்க குழந்தையை எப்படி அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோகலாம்னு மட்டும் யோசிங்க. பெத்தவங்க கையில்தான் எல்லாமே இருக்கு."

`சிறப்புக் குழந்தைகளும் அவர்களுக்குப் பிடித்தமான பாடங்களைத் தேர்வுசெய்து படித்து வெற்றிபெற முடியும் என்றால் நம்புவீர்களா? அது சாத்தியம்தான். பெற்றோர்கள் அந்தக் குழந்தைகளைப் புரிந்துகொண்டால் சாதாரண குழந்தைகள் போன்றே சிறப்புக் குழந்தைகளையும் வளர்க்கலாம்'' என்கிறார் ஷீபா ராதாமோகன். இவர் இயக்குநர் ராதாமோகனின் மனைவி. தன் சிறப்புக் குழந்தையை இன்று ஒரு வெற்றிகரமான இளைஞனாக உயர்த்திவரும் தாய். 

ஷீபா ராதாமோகன்

``சிறப்புக் குழந்தைகளில் நிறைய வகையினர் இருக்காங்க. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் குறைபாட்டுடன் இருப்பாங்க. சில குழந்தைகள் ரொம்ப திறமைசாலிகளா இருப்பாங்க. ஆனா, அவங்களின் கை, கால்களை அவங்களால் ஒருங்கிணைக்க முடியாது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு வேறு மாதிரியான பிரச்னைகள் இருக்கும். சில குழந்தைகள் கற்றல் குறைபாட்டுடன் இருப்பாங்க. இவங்க எல்லோரையும் கவனிச்சுக்கிறது பெற்றோர்களின் கடமை.

என் பையன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவன்தான். அவனைச் சிறப்புப் பள்ளியில் சேர்க்கும்போது நிறையவே கஷ்டப்பட்டேன். அவங்களுக்கு நம் மொழியே புரியாது. அவங்க பேசறது நமக்குப் புரியாது. தெரபி, மருந்துகளை மட்டும் நம்பாமல், நாமே டிரெயினிங் கொடுக்கணும். என் பையன் ஐந்து வயசு வரைக்கும் பேசவே இல்லை. அவனுடன் உட்கார்ந்து டிரெயினிங் கொடுத்தேன். எனக்கும் நிறைய கோபம் வரும். நான் வெளியில் வேலை பார்த்துட்டு வீட்டுக்கு வந்து அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கணும் என்கிறபோது மன உளைச்சலில் அவனைத் திட்டுவேன். ஆனால், அவனுக்கு என்ன பாடம் படிக்க வரும் எது வராதுன்னு எனக்குத் தெரியும்.

கணக்கு அவனுக்குச் சுத்தமா வராது. அதனால், அவனுக்குப் பிடிச்ச மாதிரியான குரூப்ல சேர்த்தேன். சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளியில் பெயின்ட்டிங், டேட்டா என்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ்னு பல பாடப்பிரிவுகள் கொட்டிக் கிடக்கு. அவங்க ஆர்வத்தைப் பொறுத்து பிடித்தமான குரூப்பில் சேர்த்தால் போதும். அவங்களே படிச்சிடுவாங்க. என் பையன் ஸ்கூலில் ரித்துன்னு ஒரு பொண்ணு பயங்கர திறமைசாலி. ஆனால், அவளால் கை கால்களை ஒருங்கிணைக்க முடியாது; பேசவும் முடியாது. இப்போ அவ பி.ஜி முடிச்சுட்டு சம்பாதிச்சுட்டு இருக்கான்னு சொன்னா நம்புவீங்களா? அவளுக்கு என்ன பிடிக்கும்னு பெற்றோர் புரிஞ்சுட்டு டிரெயினிங் கொடுத்ததுக்கான பரிசு அது'' எனப் பிரமிக்க வைத்துத் தொடர்கிறார் ஷீபா.

``எனக்குத் தெரிஞ்ச பையனுக்குக் கற்றல் குறைபாடு இருக்கிறது அவன் அப்பாவுக்குத் தெரியும். ஆனால், அவன் அப்பா நார்மல் ஸ்கூலில் சேர்த்தார். அவனால் படிக்க முடியலை. ஏன் அங்கே சேர்த்தீங்கன்னு கேட்டதுக்கு, 'அவன் எப்படியாச்சும் படிச்சு இன்ஜினீயர் ஆகிட்டா போதும்'னு சொன்னார். அந்தப் பையனால் நார்மல் பசங்க மாதிரி எப்படி படிக்க முடியும்? குழந்தைகள் மேலே இப்படி தங்களின் ஆசையைத் திணிக்கிறது எவ்வளவு முட்டாள்தனம்.

ஷீபா ராதாமோகன்

அமெரிக்காவில் இரட்டைச் சகோதரிகளில் ஒரு பொண்ணுக்கு ஆட்டிசம். அந்தப் பொண்ணு அடிக்கடி டிரெஸைக் கழட்டிடறது, சுவத்துல முட்டிக்கிறதுனு இருப்பா. அவளை யாராலும் சரிசெய்யவே முடியலை. அவளின் அப்பா சும்மா இருந்துடலை. நிறைய சிகிச்சை கொடுத்தார். ஒருநாள் தெரபி பண்ணிட்டு இருக்கும்போது லேப்டாப்ல டைப் பண்ண ஆரம்பிச்சிருக்கா. அவளை மாதிரி (சகோதரி) எனக்கும் டான்ஸ் ஆட ஆசை, வெளியில் போக ஆசை. ஆனால், என்னால் முடியலை. என் உடம்பு முழுக்க எரியுது அதனால்தான் நான் டிரெஸைக் கழட்டறேன். திடீர்னு என் கை இல்லாத மாதிரி இருக்கு. அதனால்தான் அடிக்கடி கைத்தட்டுறேன்னு டைப் பண்ணியிருக்கா. இதுபற்றி கேள்விப்பட்டதுக்கு அப்புறம்தான் ஆட்டிசம் பற்றி நிறைய விஷயங்கள் தெரியவந்துச்சு. ஆட்டிசம் குழந்தைகளுக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைக்காதீங்க. அவங்களுக்கு எல்லாமே புரியும்.

என் பையன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, என்னை ஸ்கூலில் கூப்பிட்டுச் சொன்னாங்க. அவன் நூற்றுக்கு மூணு மார்க்தான் வாங்கியிருக்கான். சுத்தமா அவன் எழுதவே இல்லை. ஆனால், என் முன்னாடி அவன் எழுதறது எனக்குத் தெரியும். எல்லோரும் அவன் பாஸாக மாட்டான்னு சொன்னாங்க. நான் டிரை பண்ணட்டும்னு எக்ஸாமுக்கு அனுப்பிவெச்சேன். அவன் எழுதும்போது அந்த ஹால் வாசலிலேயே நான், என் அம்மா, என் அக்காவும் இருந்தோம். அவனை எழுது எழுதுன்னு உற்சாகப்படுத்தினோம். ஐந்து பாடங்களிலும் பாஸாகிட்டான். எல்லோரும் ஆச்சர்யமாகி பாராட்டினாங்க. கிஃப்ட் கொடுத்தாங்க. அதுவரை அவனுக்கு எக்ஸாம்னா எப்படி இருக்கும்னே தெரியாது. அதுக்கப்புறம் அவனுடைய ஆக்டிடுயூட் மாறுச்சு. அவன் மேலே ஒரு தன்னம்பிக்கை வைக்க ஆரம்பிச்சான். ப்ளஸ் டூவில் எட்டு பாடங்களிலும் பாஸ். இப்போ, சத்தியபாமா யுனிவர்சிட்டியில் எம்.எஸ்ஸி விஸ்காம் படிக்கிறான்'' எனச் சொல்லும் ஷீபா குரலில் தாய்மையின் பெருமிதம்.

``இன்னொன்னு சொல்லியே ஆகணும். இப்போ உள்ள நார்மல் பசங்க இப்படிப்பட்ட குழந்தைங்களை ஏத்துக்கறாங்க. அவன் எப்போ எப்படி நடந்துப்பான்னு தெரிஞ்சுட்டு நல்லா கேர் எடுத்துப் பார்த்துக்கிறாங்க. நார்மல் பசங்களின் பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த மாதிரி சிறப்புக் குழந்தைகளுடன் சேர்ந்துப் படிச்சால் தன் பிள்ளையும் அப்படி ஆகிடுவான்னு சொல்லாதீங்க. உங்க பையனுக்கு இரக்கம் அறிவு எல்லாத்தையும் ஒரு படி அதிகமாவே இந்தச் சிறப்புக் குழந்தைகள் கற்றுக்கொடுப்பாங்க. உங்க பிள்ளைகள் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாகத்தான் வளர்வாங்க. என் பொண்ணு சிறப்புக் குழந்தைங்க படிக்கிற ஸ்கூலுக்கு அடிக்கடி போவாங்க. அங்கே போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டாங்க. அதை என்னால உணர முடிஞ்சது.

ஷீபா ராதாமோகன்

அதேமாதிரி, 'என் குழந்தை சிறப்புக் குழந்தைன்னு வெளியில் சொல்லத் தயங்கறதை நிறுத்தணும். உங்க குழந்தையை எப்படி அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோகலாம்னு மட்டும் யோசிங்க. பெத்தவங்க கையில்தான் எல்லாமே இருக்கு. இப்போ என் பையன்கிட்ட, 'நீ குறைந்தது 50,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போகணும். என்னையும் அவனுடைய தங்கையையும் பார்த்துக்கணும்னு சொல்லியிருக்கேன். ஏன்னா, அவனுக்குத் திரும்பி செய்யும் கடமை இருக்கிறதைச் சொல்லி வளர்க்கிறேன். இது செல்ஃபிஷ் இல்லீங்க. நார்மல் குழந்தைகளிடம் பெத்தவங்க எதிர்பார்க்கும் விஷயத்தை சிறப்புக் குழந்தைகளிடமும் எதிர்பார்க்கலாம்.

நிராகரிப்பின் வலியானது நார்மல் பசங்களையே காயப்படுத்தும்போது, இந்த மாதிரியான பசங்களை இன்னும் அதிகமாகவே காயப்படுத்தும். அவங்களுக்கு எல்லாமே புரியும். மனசுக்குள்ளே மத்தவங்க மாதிரி நம்மால் இருக்க முடியலை என்கிற வலியை சுமந்துட்டு இருப்பாங்க. 'இவன் எங்களுடைய சாபம்!'னு சபிக்கிறது அவனை எந்த அளவுக்கு வெறுக்கவைக்கும்னு யோசிங்க. ஆட்டிசம் குழந்தைகள் இரக்கப்பட மாட்டாங்கன்னு சொல்வாங்க. அது தப்பு. அவங்களுக்கும் இரக்கம், அழுகை, சிரிப்புன்னு எல்லா எமோஷனலும் உண்டு. அதை எல்லோரும் புரிஞ்சுக்கங்க'' என்கிறார் ஷீபா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்