வெளியிடப்பட்ட நேரம்: 15:21 (05/10/2018)

கடைசி தொடர்பு:20:17 (05/10/2018)

``எல்லா விஷயங்களிலும் பெண்ணியம் பேசி வீண் பிடிவாதம் ஏன் ?’’ - சபரிமலை குறித்து விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்

``அது மூலிகைகள் நிறைந்த காடு. பெண்கள் அங்குச் செல்லும்போது மாதவிடாய் துணியையோ நாப்கினையோ போட்டுவிட்டால், தொற்றுகள் பரவலாம். இப்படிக் காரண காரியங்களைச் யோசித்துத்தான் பெரியவர்கள் சில வழிமுறைகளை வகுத்துள்ளார்கள்.''

ண்டாள் பற்றிய சர்ச்சையில், கண்ணீருடன் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் அளவுக்கு ஆன்மிக விஷயங்களில் ஆத்மார்த்தமான ஈடுபாடுகொண்டவர், மூத்த நாட்டுப்புறக் கலைஞரான விஜயலட்சுமி நவநீதகிருஷணன். அவரிடம், `சபரிமலையில் எல்லா வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்' என்கிற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்துக் கேட்டோம். 

கணவருடன்

``கடந்த 45 வருடங்களாக நானும் என் கணவரும் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு வேலை நிமித்தமாகச் சென்றிருக்கிறோம். அங்கெல்லாம் இருக்கும் கிராம தேவதைகளை வணங்கியிருக்கிறேன். உதாரணத்துக்கு இரண்டு சொல்கிறேன்.

தாராபுரம் அருகே வெள்ளக்கோயிலில் இருக்கும் வீர முத்துக்குமார சுவாமி கோயிலில், ஆண்கள் மட்டுமே பூஜை செய்வார்கள். அந்தக் கோயிலுக்குப் பெண்கள் போவதில்லை. இது இன்றும் இருக்கும் மரபு. ஒளவையார் கோயில்களில் பெண்கள்தான் பூசாரி. அங்கே ஆண்கள் செல்லமாட்டார்கள். இப்படி ஆண்கள் மட்டுமே செல்கிற, பெண்கள் மட்டுமே செல்கிற கோயில்கள் நம் மண்ணில் ஏராளம். அலகு குத்துதல், பூக்குழி இறங்குதல், பூப்படையாத பெண் குழந்தைகளின் காலில் விழுந்து வணங்கும் பெண் தெய்வ வழிபாடு, நேர்த்திக்கடனுக்காகக் கரும்பில் தொட்டில் கட்டி குழந்தையைத் தூக்கிச்செல்லுதல் எனப் பல்லாயிரம் வழிபாடு முறைகள்கொண்ட நாடு இது. 3000 வருடப் பாரம்பர்யமிக்க மண் இது.

அந்தக் காலத்தில் ஊர்தான் உலகம். அதனால்தான், `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றார்கள். ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒவ்வொரு தெய்வம், வேறு வேறு சடங்கு சம்பிரதாயங்கள். அவற்றை யாரும் மீறுவதில்லை. அப்படியிருக்கும்போது, இந்தியா முழுக்க ஒரே வழிபாட்டு முறையை எப்படிக் கொண்டுவர முடியும்? இவற்றையெல்லாம் பொதுமைப்படுத்த வேண்டும் எனச் சட்டமும் நீதிமன்றமும் நினைக்கலாமா? வெள்ளைக்காரன் ஏற்படுத்திய உச்ச நீதிமன்றம், இந்தியா முழுக்க ஒரே அரசியலமைப்புக்காகக் கொண்டுவரப்பட்டது. கலாசாரமும் வழிபாடும் அரசியலமைப்புக்குள் வராது. மண்ணுடைய மரபுகளில் சட்டம் கை வைக்கக் கூடாது. கேரள மக்களின் வழிபாடு மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம் இது. அவர்களுக்கு இந்தத் தீர்ப்பு பிடிக்கவில்லை என்றால், அவர்களுடைய உணர்வுக்குச் சட்டமும் நீதிமன்றமும் மதிப்பளிக்க வேண்டும்'' என்கிறார் திட்டவட்டமான குரலில். 

விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்

மாதவிடாய் நிகழ்வு இருக்கும் பெண்கள் ஏன் சபரிமலைக்குப் போகக் கூடாது என்பதற்கு சில நடைமுறை காரணங்களையும் சொன்னார்.

``ஐயப்பன் அடர்ந்த காட்டில் குடிகொண்டவர். ஆண் சிட்டு இணை சேர, பெண் சிட்டுக்கு அரவம் கொடுக்காத காடு. ஆண் குயில் இணை சேர, பெண் குயிலுக்குக் குரல் கொடுக்காத அளவுக்கு அடர்ந்த காடு அது. இதைப் பறவைகள், தங்கள் இணைக்குக் குரல் கொடுத்தாலும் கேட்க முடியாத அளவுக்கு அடர்ந்த காடு என்றும் பொருள்கொள்ளலாம். இந்தக் காட்டுக்குள் நடந்துசென்று ஐயப்பனைத் தரிசிக்க முயலும்போது, விலங்குகளால் உயிருக்கு ஆபத்து வரலாம். மலையேறும்போது பெண்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டால், ரத்தவாடைக்குக் கொடிய விலங்குகள் வந்து தாக்கலாம். இப்படிச் சில காரணங்களுக்காகவே மாதவிடாய் நிகழ்வு இருக்கும் பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

தவிர, அது மூலிகைகள் நிறைந்த காடு. பெண்கள் அங்குச் செல்லும்போது மாதவிடாய் துணியையோ நாப்கினையோ போட்டுவிட்டால், தொற்றுகள் பரவலாம். இப்படிக் காரண காரியங்களை யோசித்துத்தான் பெரியவர்கள் சில வழிமுறைகளை வகுத்துள்ளார்கள். எல்லா விஷயத்துக்கும் பெண்ணியம் பேசி, வீண் பிடிவாதம் பிடித்தால் என்ன செய்வது'' என்கிறார் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்.

 


டிரெண்டிங் @ விகடன்