கூகுள் டூடுலில் உங்களுடைய கைவண்ணமும் இடம்பெற வேண்டுமா? | Doodle 4 Google 2018 Participate before 6th October‎

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (05/10/2018)

கடைசி தொடர்பு:15:30 (05/10/2018)

கூகுள் டூடுலில் உங்களுடைய கைவண்ணமும் இடம்பெற வேண்டுமா?

இன்றைய இணைய உலகை ஆட்டிப்படைக்கும் கூகுள் இணைய உலாவியின் பிரத்யேகமான அம்சம் அதன் டூடுல். கூகுள் இயந்திரத்தைத் திறந்த உடனே நம் கண் முன் கண்கவர் வண்ணங்களில் அன்றாடம் அலங்கரிப்பது இந்த டூடூல்தான். தொடக்கக் காலங்களில் விடுமுறை தினங்களை மட்டுமே குறித்து வந்துகொண்டிருந்த கூகுளின் டூடுல் காலப்போக்கில் சிறப்பான நிகழ்வுகள் நடந்த தேதிகள், முக்கியமான நபர்களின் பிறந்தநாள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகளைக் குறிக்கும் டூடுல்களும் கூகுள் பக்கத்தில் இடம்பெற ஆரம்பித்தன.

பின்னர் அதன் தேவைகள் அதிகரிக்க ஒவ்வொரு நாட்டுக்கும் ஏற்றவாறு டூடுல்கள் அந்தந்த நாடுகளில் பார்க்கும் வண்ணம் வரத்தொடங்கின. சமீபத்தில் கூட கூகுள் இந்தியாவில் அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர். கோவிந்தப்பா வேங்கடசாமியின் நூறாவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வண்ணம் டூடுல் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த வரிசையில் கூகுள், இந்தியப் பள்ளி மாணவர்களுக்கான டூடுல் போட்டியை அறிவித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இந்தியாவில் படிக்கிற பள்ளி மாணவர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ளலாம். இதற்கான டூடுலை சமர்ப்பிக்கும் தேதி நாளையுடன் நிறைவடைகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் மாணவர்களுக்கான டூடுல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான தலைப்பு `What inspires you?'. மாணவர்கள் தங்களுடைய கற்பனைகளுக்கு ஏற்றவாறு க்ரேயான்ஸ், களிமண், கிராபிக்ஸ் டிசைனிங் என விருப்பமான வடிவத்தில் டூடுல் வரையலாம். டூடுல்கள் உண்மையானதாகவும், புதிய ஐடியாவாகவும் இருக்க வேண்டும். மற்றுமொரு படைப்பை காப்பி அடித்துச் செய்யப்படுவதாக இருக்கக்கூடாது. அனைத்து டூடுல்களிலும் Google என்கிற ஆறு எழுத்துகளும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் டூடுலை புகைப்படம் எடுத்து இணையத்திலே சமர்ப்பிக்க வேண்டும். (விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்க இறுதி நாள் அக்டோபர் 6, இரவு 10 மணி) போட்டி ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஐந்து பிரிவுகளாக (1-2, 3-4, 5-6, 7-8, 9-10) நடைபெறும். கூகுள் டூட்லர்கள் குழுவும் (Doddler – டூடுல் வரைபவர்கள்), சிறப்பு நடுவர்கள் குழுவும் இணைந்து ஒவ்வொரு பிரிவின் கீழ் நான்கு இறுதிப் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பர்.

பிரிவுக்கு நான்கு பேர் வீதம் இருபது பேர் இறுதிப் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவர். பின்னர் இவர்களில் இருந்து ஒவ்வொரு பிரிவின் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்க 23 அக்டோபர் முதல் 5 நவம்பர் வரை கூகுள் இணையதளத்தில் இருபது இறுதிப் போட்டியாளர்களின் பெயர்களும் பொதுமக்கள் வாக்கெடுப்புக்காக விடப்படும். இதன்மூலம் ஒவ்வொரு பிரிவின் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இவ்வாறு ஐந்து பிரிவின் வெற்றியாளர்களில் இருந்து தேசிய அளவில் ஒரு வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இவர் பொதுமக்கள் வாக்குகள், சிறப்பு நடுவர்களின் மதிப்பெண் மற்றும் கூகுள் நிர்வாகிகள் குழுவின் இறுதி முடிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒட்டுமொத்த மதிப்பெண்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இறுதி வெற்றியாளரின் பெயர் நவம்பர் 14-ம் தேதி அறிவிக்கப்படும்.

இறுதி வெற்றியாளருக்கு ஐந்து லட்சம் ரூபாய் உதவித் தொகையும்' இரண்டு லட்சம் மதிப்பிலான தொழில்நுட்ப உபகரணங்கள், வெற்றிக் கோப்பை, சான்றிதழ் மற்றும் கூகுள் இந்தியா அலுவலகத்துக்குச் சென்று வருவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வெற்றியாளர்களுக்கும் ரொக்கப் பரிசு தவிர கோப்பை, பதக்கம், சான்றிதழ் மட்டும் கூகுள் இந்தியா அலுவலகம் சென்று வருவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். மற்ற இறுதிப் போட்டியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கூகுள் உபகரணங்கள் கிடைக்கும்.

அனைத்து இறுதிப் போட்டியாளர்களின் டூடுல்களும், கூகுள் கேலரியில் காட்சிக்கும் வைக்கப்படும். பள்ளி மாணவர்களே இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய கைவண்ணத்தை தீட்டுங்கள்.

விண்ணப்பப் படிவம் பெற : https://doodles.google.co.in/d4g/enter.html

மாதிரி டூடுல்களை காண்பதற்கு:- https://www.google.com/doodles/

மேலும் விவரங்களுக்கு:-  https://doodles.google.co.in/d4g/

நீங்க எப்படி பீல் பண்றீங்க