"தமிழகத்தில் சாதிய ஒழிப்புக்காக ஒலித்த ஆன்மிகக் குரல்!" - வள்ளலார் எனும் 'சீர்த்திருத்தவாதி' | Vallalar Birthday - a special tribute story

வெளியிடப்பட்ட நேரம்: 17:58 (05/10/2018)

கடைசி தொடர்பு:21:53 (05/10/2018)

"தமிழகத்தில் சாதிய ஒழிப்புக்காக ஒலித்த ஆன்மிகக் குரல்!" - வள்ளலார் எனும் 'சீர்த்திருத்தவாதி'

பொதுவெளியில் ஆன்மிகவாதியாக மட்டுமே பார்க்கப்படும் வள்ளலார், 5 அக்டோபர் 1823 அன்று சிதம்பரம் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர். சிவபக்தராகவும், சிவ பக்தியை வலியுறுத்தக் கூடிய ஒரு துறவியாக மட்டுமே தன் வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டவர்.

மிழ்நாட்டில் `சாதி ஒழிப்பு' என்றதும் நம்மவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது பெரியாரும், அயோத்திதாசரும்தான். ஆனால், பெருமளவு மக்களிடம் சென்று சேராவிட்டாலும், சாதி ஒழிப்பை முன்னெடுத்தவர்களில் வள்ளலாரும் முக்கியமானவர் என்பதே நிதர்சனம். 

பொதுவெளியில் ஆன்மிகவாதியாக மட்டுமே பார்க்கப்படும் வள்ளலார், 5 அக்டோபர் 1823 அன்று சிதம்பரம் அருகே உள்ள மருதூரில் பிறந்தவர். சிவபக்தராகவும், சிவ பக்தியை வலியுறுத்தக் கூடிய ஒரு துறவியாக மட்டுமே தன் வாழ்க்கையை வடிவமைத்துக்கொண்டவர் அவர். ஆனால், அவருக்குள் இருந்த பகுத்தறிவுவாதியை அவரால் மறைத்துக்கொள்ள முடியவில்லை. மனிதர்களை முட்டாள்களாக்கும் மூட நம்பிக்கைகளுக்கும், சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும் சாதி அமைப்புக்கும் எதிராகக் குரல் கொடுக்க ஒருபோதும் அவர் தயங்கியதில்லை! 

வள்ளலார்

வள்ளலார் என அழைக்கப்படும் ராமலிங்க அடிகளுக்குப் பெரிய அளவில் கல்வி கற்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், சிறு வயதிலிருந்தே பா இயற்றும் ஆற்றல் இருந்திருக்கிறது அவருக்கு. பல கோயில்களுக்குச் சென்று பாடும் வழக்கத்தைக் கொண்ட அவர், சிதம்பரம் நடராஜர் கோயில் மீது அளவுகடந்த பற்று வைத்திருந்தார். 

ஏழைகள், நோயாளிகள், ஆதரவற்றவர்களுக்காகக் களத்தில் நிற்கத் தொடங்கியிருந்தார் வள்ளலார். இதன் தொடர்ச்சியாகவே 1865ல் சன்மார்க்க சங்கத்தையும், அதற்கு 2 ஆண்டுகள் கழித்து வடலூரில் கூழ்ச்சாலை ஒன்றையும் நிறுவினார். அந்தக் கூழ்ச்சாலையில் உள்ள அடுப்பில் வள்ளலார் ஏற்றிய நெருப்பு இன்று வரை அணைக்கப்படாமல் எரிந்துகொண்டிருக்கிறது. பசியோடு வருபவர்களுக்கு எந்தத் தடையுமின்றி இங்கு இன்றும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இந்தக் கூழ்ச்சாலையில் சாதி வேறுபாடு பார்க்காமல் அனைத்துத் தரப்பினரையும் வேலையில் சேர்த்தவர் அவர். 

1872 ம் ஆண்டு பொதுமக்கள் வழிபடுவதற்காக சத்தியஞான சபையை அமைத்த வள்ளலார், அங்கு பெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டினார். அன்றைய காலகட்டத்தில் கோயில்களில் தாழ்த்தப்பட்ட மக்களும் சில பிற்படுத்தப்பட்ட மக்களும் நுழைவதற்குத் தடை இருந்தது. அந்தத் தடையை முதலில் நொறுக்கிய வள்ளலார், அனைவரும் வழிபடும் தளமாக சத்தியஞான சபையைக் கட்டமைத்தார்.

``கற்பனையை நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக!”

மூடநம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்களுக்கு எதிராக வள்ளலாரின் வரிகள் இவை.

வள்ளலாருக்குத் தமிழ் மொழி மீது அத்தனை பிரியம். அவர் இயற்றிய பாடல்களும், இலக்கிய உரைநடைகளும் தமிழ் மொழிக்கு அவர் அளித்த பெரும் பரிசு எனக் கூறமுடியும். அந்தக் காலத்தில் சங்கராச்சாரியார், `மொழிகளுக்கெல்லாம் தாய் மொழி சம்ஸ்கிருதமே’ என்று நிறுவ முயன்றபோது, மிக ஆணித்தரமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார் வள்ளலார். சம்ஸ்கிருத மொழிக்கு எதிராக முழங்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் `தாய் மொழி சம்ஸ்கிருதம். அப்படியென்றால் மொழிகளுக்கெல்லாம் தந்தை மொழி தமிழ் மொழியே!’ என வெடித்து எழுதினார்.

வள்ளலார்

வள்ளலாரின் காலத்துக்குப் பிறகு அவரது எழுத்துகளைத் தொகுத்த ஆய்வாளர்கள், அவரது கவிதைகளை 6 திருமுறைகளாக வகுத்தனர். அதில் முதல் ஐந்தாம் திருமுறைகளில் இறை பக்தி நிறைந்த ஆன்மிகப் பாடல்களும், ஆறாம் திருமுறையில் சமூகம் சார்ந்த பாடல்களும் தொகுக்கப்பட்டன. முதல் ஐந்தாம் திருமுறை பாடல்களும் ஆன்மிகவாதிகளாலும், பக்தர்களாலும் இன்றளவும் போற்றிக் கொண்டாடப்படுகின்றன. ஆனால், ஆறாம் திருமுறை போதிய அளவு கவனத்தைப் பெறவில்லை என்பதே உண்மை. அதற்குக் காரணம், அதில் உள்ள பாடல்கள் சமூக நீதி, சாதி ஒழிப்பு, மத நல்லிணக்கம் போன்ற பண்புகளை வலியுறுத்துவதே.

வள்ளலாரின் காலத்தில் பிரிட்டிஷ் காலணி ஆட்சியின் கொடுமைகள் எளிய மக்களைப் பாதித்த வண்ணம் இருந்தன. அதைக் கண்டு பொறுக்காத வள்ளலார் தன் கோபத்தை ஒரு பாடல் வழியாக வெளிப்படுத்துகிறார். ஆன்மிகத்தைக் கடந்து அவர் எந்த அளவுக்கு மக்களைப் பற்றி யோசிக்கக் கூடியவராக இருந்தார் என்பதை இப்பாடலில் காணமுடியும்:

``கருணையற்ற ஆட்சி கடுகி ஒழிக
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க- தெருள்நயந்த
நல்லோர் நினைத்த நலம்பெறுக, நன்றுநினைத்து
எல்லோரும் வாழ்க இசைந்து”

19ம் நூற்றாண்டில் சாதி ஒழிப்பு முன்னெடுத்த வள்ளலார் மீது 20ம் நூற்றாண்டில் சாதி ஒழிப்பை முன்னெடுத்த தந்தை பெரியாருக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது. இதன் காரணமாக ஒருமுறை வடலூரில் உள்ள சத்திய ஞான சபையைக் காணும் விருப்பத்துடன் அங்குச் செல்கிறார். ஞான சபையின் முன் பக்கத்தில், `கொலையும் புலையும் தவிர்த்தவர் மட்டுமே வருதல் வேண்டும்’ என்ற அறிவிப்புப் பலகை மாட்டியிருந்தது. தான் புலால் உணவு உண்டிருந்ததால் உள்ளே செல்வது சரியாகாது எனப் பெரியார் திரும்பிச் சென்றுவிட்டார்!

வள்ளலார், அயோத்திதாசர், பெரியார் என எத்தனையோ சமூக உணர்வாளர்கள் சாதி ஒழிந்து சமத்துவம் ஓங்க உழைத்திருக்கின்றனர். ஆனால், நம் சமூகத்தைப் பீடித்திருக்கும் சாதி வக்கிரங்கள் எப்போது அகலும் எனத் தெரியவில்லை. அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வோம் என வள்ளலாரின் பிறந்தநாளான இன்று உறுதி கொள்வோம்! 


டிரெண்டிங் @ விகடன்