பரியேறும் பெருமாள் அழைக்கும் உரையாடல் ஏன் அவசியமாகிறது? #VikatanInfographics | Importance of the conversaton that Pariyerum Perumal invite people to

வெளியிடப்பட்ட நேரம்: 08:06 (06/10/2018)

கடைசி தொடர்பு:11:01 (06/10/2018)

பரியேறும் பெருமாள் அழைக்கும் உரையாடல் ஏன் அவசியமாகிறது? #VikatanInfographics

பரியேறும் பெருமாள் சாதிய இழிவுகளை நீக்கக் கோரும், சமத்துவத்துக்கான மொழியை முன்வைக்கிறது. மனிதனை மனிதனாக மதிக்கக் கோருகிறது.

பரியேறும் பெருமாள் அழைக்கும் உரையாடல் ஏன் அவசியமாகிறது? #VikatanInfographics

`சாதியும் மதமும் மனித வாழ்வுக்கே விரோதமானது' எனத் தொடங்குகிறது பரியேறும் பெருமாள் பி.ஏ, பி.எல். கறுப்பியின் சாவில் தொடங்கி பரியன் மீது இந்தச் சமூகம் நிகழ்த்தும் வன்முறைகளைப் பேசியபடி செல்கிறது பரியேறும் பெருமாள். பரியன் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்குக் காரணம், சாதி. பரியன் மட்டுமல்ல, இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளிலும் `சாதி' என்னும் நோய்க்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

சாதி இந்தியாவின் 2000 ஆண்டுக்கால சாபம். சக மனிதன் மீதே வெறுப்பையும், ஆதிக்கத்தையும் ஒருசேர உமிழச் செய்யும் ஆற்றல் சாதிக்கு உண்டு. பரியேறும் பெருமாள் மீது வெறுப்பும் கட்டமைக்கப்படுகிறது; ஆதிக்கமும் செலுத்தப்படுகிறது. முதல் தலைமுறையாக கல்லூரிக்குக் கல்வி பயிலச் செல்லும் பரியன்கள் தூக்குக் கயிற்றை நோக்கி நகர்வதன் காரணத்தை வெளிப்படையாகப் பேசுகிறது பரியேறும் பெருமாள். 

பரியன்களைப் போல, இந்தியா முழுவதும் சாதியின் பெயரால் வன்முறைக்கு உள்ளாக்கப்படுபவர்கள் ஏராளம். உலகமயமாக்கலுக்குப் பிறகு, சாதியின் பெயரால் நிகழும் வன்முறைகள் குறையவில்லை; சாதியின் பெயரால் நிகழும் சுரண்டல்கள் நிறுத்தப்படவில்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் பதிவுசெய்துள்ள தகவல்களின் அடிப்படையில், இந்தியாவில் 2016-ம் ஆண்டில், நாள் ஒன்றுக்குப் பட்டியல் சாதியினர் மீது 130 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சராசரியாக ஒரு நாளுக்கு 4 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 

சாதிய வன்முறை

இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மீதான தாக்குதல்களும், வன்புணர்வு நிகழ்வுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. வாச்சாத்தி, கயர்லாஞ்சி போன்று ஒவ்வொரு நாளும் இந்தியா முழுவதும் சராசரியாக 10 பெண்கள் ஆதிக்கச் சாதி மனோபாவத்தால் வன்புணர்வு செய்யப்படுகின்றனர். 

தோழி ஜோவின் அக்கா திருமண நிகழ்ச்சிக்குச் செல்லும் பரியன் மீது சாதிய வன்முறை நிகழ்த்தப்படுகிறது. பரியன் அதனை எங்கும் முறையிடவில்லை. இங்குக் குறிப்பிடப்பட்டிருப்பதைத் தவிர, பெரும்பாலான சாதிய வன்முறைகள் அரசு பதிவேடுகளில் பதிவு செய்யப்படுவதில்லை; முறையிடப்படுவதேயில்லை.         

தன் கல்லூரியில் படிக்கும், தான் பேசும் மொழியைப் பேசும், தன்னைப் போல உடலமைப்பைக் கொண்டும் வாழும் மனிதர்களால், `நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன்' என்று மூர்க்கமாகத் தாக்கப்படும் போது, நிச்சயம் பரியனைப் போல பாதிக்கப்படுபவர்களுக்கு, ``நான் யார்?" என்ற கேள்வி எழும். 

சாதியால் காதலை இழந்த இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், முருகேசன் முதலானோர், தூக்கு மரங்களில் பிணமாகத் தொங்கிய ரோஹித் வெமுலா, முத்துகிருஷ்ணன், ஜோயல் பிரகாஷ் முதலானோர், தாமிரபரணியில் பிணமாக மிதந்த மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளிகள், குடிசைகளுக்குள் கதறி எரிந்த கீழ்வெண்மணி விவசாயிகள் முதலானவர்களின் இரத்தம் தோய்ந்த  குரலாக ஒலிக்கிறது `நான் யார்?' என்ற பாடல்.

பரியேறும் பெருமாள்

சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களின் கடவுளர்கள் ஊருக்குள் தேரில் வலம் வர முடியாது; தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமென தனிக் குவளைகள் சாதாரணமாகப் புழங்கும்;  உத்தபுரம் போன்ற ஊர்களில் தீண்டாமைச் சுவர்கள் எழும். மலம் அள்ளுவது மட்டுமே தொழிலாக, தலைமுறை தலைமுறையாகப் பரிமாறப்படும்.

பரியேறும் பெருமாள் இந்த இழிவுகளை நீக்கக் கோரும், சமத்துவத்துக்கான மொழியை முன்வைக்கிறது.  மனிதனை மனிதனாக மதிக்கக் கோருகிறது. ரோஹித் வெமுலாவின் இறுதிக் கடிதத்தில், ``ஒரு மனிதனின் மதிப்பு உடனடியாக அவனைச் சுட்டும் அடையாளமாகவும், அதனோடு நெருங்கும் சாத்தியக்கூறாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதனின் மதிப்பு ஒரு வாக்காக, எண்ணாக, பொருளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது" என்று எழுதினார்.

பரியேறும் பெருமாள் இறுதியில், ``நீங்க, நீங்களாதான் இருக்கணும்னு, இருக்கிற வரைக்கும், நான் நாயா தான் இருக்கணும்னு, நீங்க நினைக்கிற வரைக்கும், இது மாறவே மாறாது" என்று கூறுவதற்கும், ரோஹித் வெமுலாவின் எழுத்துகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. காதலுக்காகக் கொல்லப்பட்ட சங்கருக்கும் கொலை முயற்சிக்கு ஆளான பரியனுக்கும் பெரிய வேறுபாட்டைப் பார்க்க முடியாது. 

``மரித்த பின் உடலெங்கும் நீலம் பரவும் நான் யார்?" எனப் பாடியபடியே, பரியேறும் பெருமாள் சாதிக்கு எதிரான உரையாடலுக்கு அழைக்கிறான். சாதி அழித்தொழிக்கப்பட வேண்டியது என நினைக்கும் அனைவரும் அவன் அழைக்கும் உரையாடலுக்கு செவி சாய்த்தல் அவசியம். அதுவே சமத்துவம் நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்.


டிரெண்டிங் @ விகடன்