தீபாவளிக்கு நகை வாங்கப் போறீங்களா... இந்த 4 விஷயத்தை மறந்துராதீங்க! | Read this before planning to buy Gold Jewels this Diwali

வெளியிடப்பட்ட நேரம்: 14:44 (06/10/2018)

கடைசி தொடர்பு:14:45 (06/10/2018)

தீபாவளிக்கு நகை வாங்கப் போறீங்களா... இந்த 4 விஷயத்தை மறந்துராதீங்க!

ஹால்மார்க் நகைகளின் விலை சற்று அதிகமாக இருக்கும். ஹால்மார்க் நகைகளை வாங்கும்போது நாம் கேட்காவிட்டாலும் பில் போட்டுத்தருவார்கள். பில்லில் வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். ஹால்மார்க் நகையைப் பொறுத்தவரை தரத்துக்கு உத்தரவாதம் உண்டு. இந்த நகையை எங்கு வேண்டுமானாலும் விற்க முடியும்.

தீபாவளிக்கு நகை வாங்கப் போறீங்களா... இந்த 4 விஷயத்தை மறந்துராதீங்க!

தீபாவளி நெருங்கிவிட்டது... விதவிதமான தங்க நகைக்கடை விளம்பரங்கள்... அந்த விளம்பரங்களைப் பார்க்கையில், நம்பிக்கையான கடையில் வாங்குவதா, நாணயமாக வாங்குவதா எவ்வளவு செய்கூலி சேதாரத்தில் வாங்குவது, தங்கத்தின் தரத்தை எப்படிப் பார்ப்பது என்றெல்லாம் எண்ணற்ற கேள்விகள் எழுகின்றன. இதில் சில விளம்பரங்களில் அறிவுரைக்குமேல் அறிவுரை சொல்லி மற்ற நகைக்கடைகள் மீது சந்தேகத்தை விதைக்கிறார்கள். 

1/4 கிலோ வெண்டைக்காய் வாங்குவதாக இருந்தால்கூட முனையை ஒடித்துப் பார்த்து வாங்குகிறோம், ஆனால் தங்கத்தைப் பொறுத்தவரை தரம் குறித்து நாம் அதிகம் சிந்திப்பதில்லை. நமக்குப் பிடித்த டிசைனில் கிடைக்கிறதா என்பதையும், செய்கூலி சேதாரத்தில் பேரம் பேசிக் குறைக்க முடிகிறதா என்பதை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம்.

பல ஆயிரம் ரூபாய் செலவுசெய்து வாங்கும் தங்க ஆபரணங்களில் தரம் பார்ப்பது எப்படி, சரியானதைக் கண்டறிவது எப்படி. இவற்றுக்கெல்லாம் பதில் தருகிறார், ஜெம் அண்டு ஜுவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டரின் இயக்குநர் சுவாமிநாதன். 

தங்க ஆபரணங்கள் வாங்கும்போது அதிலிருக்கும் முத்திரையைப் பார்த்து வாங்க வேண்டும். 2018-ம் ஆண்டுக்கு முன்பு செய்த நகைகளில் 5 முத்திரைகள் இருக்கும். 2018-க்குப் பிறகு தயாரித்தவற்றில் 4 முத்திரைகள் இருக்கும். 

தங்க நகை

`பிஐஎஸ்' (BIS - Bureau of Indian Standards) ஹால்மார்க்: இந்தியத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தால் வழங்கப்படும் தரச்சான்றிதழ் தான்`பிஐஎஸ்' ஹால்மார்க் முத்திரை. இந்த முத்திரை முக்கோண வடிவில் இருக்கும். ஹால்மார்க் முத்திரைக்கான சோதனையின்போது சிறிது இழப்பு ஏற்படுவதால் ஹால்மார்க் நகைகளின் விலை சற்று அதிகமாக இருக்கும். ஹால்மார்க் நகைகளை வாங்கும்போது நாம் கேட்காவிட்டாலும் பில் போட்டுத்தருவார்கள். பில்லில் வரியும் சேர்த்து வசூலிக்கப்படும். ஹால்மார்க் நகையைப் பொறுத்தவரை தரத்துக்கு உத்தரவாதம் உண்டு. இதை எங்கு வேண்டுமானாலும் விற்க முடியும். தரம் குறைவாக இருப்பதாக அறிந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளிக்க முடியும். ஆனால், மற்ற ஆபரணங்களுக்குத் தரம் தொடர்பாகப் புகார் தெரிவிக்க முடியாது.

gold jewelleryஇரண்டாவதாக, தரப்பரிசோதனை செய்த சோதனைக்கூடத்தின் குறியீடு இருக்கும். மூன்றாவதாக, நகையின் தூய்மையைக் குறிக்கும் 916 என்ற குறியீடு இருக்கும். தங்கத்தை நகையாக்கும்போது அதோடு பிற உலோகங்கள் சிலவற்றைச் சேர்க்கும்போதுதான் நெகிழ்வுத்தன்மையோடு நகை செய்ய முடிகிறது. அப்படிப்பட்ட 22 கேரட் தங்க நகையில் 91.6 சதவிகிதம் தங்கம் இருக்கும். இதன் நினைவாகத்தான் 916 என்ற 3 இலக்கக்குறியீடு கொண்டுவந்துள்ளனர். தங்கத்தின் தூய்மைக்கு ஏற்ப 875, 833, 792 என மூன்று இலக்க எண் மாறுபடக்கூடும்.

நான்காவதாக, அந்த ஆபரணத்தை விற்பனை செய்யும் கடையின் முத்திரை இருக்கும். இந்த முத்திரையும் முக்கியமானது. ஏதேனும் குறைபாடு, அல்லது சந்தேகம் வந்தால் இந்த முத்திரையின் மூலம் சம்பந்தப்பட்ட கடையிலேயே விசாரித்து உண்மையை அறிந்துகொள்ளலாம். 

ஐந்தாவதாக, அந்த நகையை உருவாக்கிய ஆண்டினை A, B, C என்ற ஆங்கில எழுத்துகளின் மூலம் குறிப்பிட்டிருப்பார்கள். 2000 ஆண்டில் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் `A' என்ற எழுத்தும்,  2001-ம் வருடம் முத்திரை வழங்கப்பட்ட நகைகளில் `B’ என்ற எழுத்துமாக ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒவ்வொரு எழுத்து குறிப்பிடப்பட்டிருக்கும். தற்போது 2018-ம் ஆண்டில் தயாரிக்கப்படும் நகைகளில் ஆண்டுக்குறிப்பை நீக்கிவிட்டார்கள். எனவே, 4 முத்திரைகள் மட்டுமே இருக்கும். இந்த முத்திரைகளைக் கடையிலிருக்கும் லென்ஸ்மூலம் நாம் செக் செய்யலாம். தங்கம்  வாங்கும்போது எந்த அளவுக்கு விழிப்புஉணர்வோடு இருக்கிறோமே, அந்த அளவுக்கு ஏமாறாமல் இருக்கலாம். நிறுவனத்தின் நம்பிக்கையும் முக்கியம்" என்றார்.

கே.டி.எம். ஏன்றால் என்ன?

தரத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ``கே.டி.எம் நகைகள் வாங்கணும்" என்று பலரும் சொல்வார்கள். கடைகளிலும் இங்கே கே.டி.எம் (KDM) நகைகள் விற்கப்படும் என்ற அறிவிப்பைப் பார்க்கலாம். கே.டி.எம் நகைகளை வாங்கினால் அவற்றை விற்கும்போது விலைக்குறைப்பு இல்லாமல் அன்றைய விலையிலேயே வாங்கிக்கொள்வார்கள் என்றும் கூறப்படுவது உண்டு. அது என்ன கே.டி.எம்.?

கே.டி.எம். என்பது கேட்மியம் என்ற உலோகத்தைக் குறிக்கும். ஆபரணங்கள் செய்யும்போது இரண்டு தங்கத்தை இணைக்கும்போது கேட்மியம், தங்கம் கலவையைப் பயன்படுத்தி இணைப்பார்கள். அப்போது கேட்மியம் ஆவியாகிவிட, தங்கம் மட்டுமே இணையும். இதன்காரணமாக அந்த நகை சுத்தத் தங்கமாக இருப்பதால் கே.டி.எம் என்றால் சுத்தமானது என்ற பெயர் இருந்தது. ஆனால், கேட்மியம் புற்றுநோயை உண்டாக்கும் எனக் கண்டறிந்ததால் பத்தாண்டுகளுக்கு முன்னர் இதன் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனவே கே.டி.எம். நகைகளின் விற்பனையும் குறைந்துவிட்டது. அதேபோல ஒரே நகையில், ஹால்மார்க் முத்திரையும், கே.டி.எம். முத்திரையும் இணைந்து இருந்தால் அது ஏமாற்று வேலை. கே.டி.எம் நகைகளுக்கு ஹால்மார்க் நிறுவனம் தரச்சான்று வழங்காது.

ஆக, இனிமேல் தங்க நகை வாங்கச்சென்றால் ஹால்மார்க் முத்திரை மட்டுமல்லாமல், தரப்பரிசோதனைக் கூடத்தின் முத்திரை, மூன்று இலக்க எண் முத்திரை மற்றும் விற்பனையாளரின் முத்திரை ஆகிய நான்கும் உள்ளனவா என்று பார்த்து வாங்குங்கள். அடுத்ததாகச் செய்கூலி, சேதாரம் எவ்வளவு சதவிகிதம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். பெரிய விலை கொடுத்து வாங்கும் தங்கத்தைத் தரமாக வாங்கினால்தானே அதனை நல்ல முதலீடாகவும் கருத முடியும்! 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close