20 நாள்களில் 23 சிங்கங்கள் மரணம்... என்ன நடக்கிறது குஜராத்தில்? | Canine Distemper Virus Found In Some Dead Lions In Gir

வெளியிடப்பட்ட நேரம்: 14:52 (06/10/2018)

கடைசி தொடர்பு:17:33 (06/10/2018)

20 நாள்களில் 23 சிங்கங்கள் மரணம்... என்ன நடக்கிறது குஜராத்தில்?

இந்தியாவில் சிங்கங்களின் சரணாலயங்கள் என்றாலே குஜராத் கிர்தான் நினைவுக்கு வரும். தற்போது அங்கிருந்து துயரமான செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

20 நாள்களில் 23 சிங்கங்கள் மரணம்... என்ன நடக்கிறது குஜராத்தில்?

பொதுவாக வைரஸ்கள் இன்னொரு உயிரினத்தில் இருந்து இன்னோறு உயிரினத்திற்கு எளிதாகப் பரவிவிடுகின்றன. உலகில் கொடிய வைரஸ்களாக பார்க்கப்பட்ட எபோலா, H1N1, ஸ்வைன் ப்ளூ போன்றவை அனைத்துமே ஒரு விலங்கிடமிருந்து இன்னொரு விலங்கிற்குப் பரவியதால்தான் மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தின. இந்தியாவில் பரவலாக பேசப்பட்ட  பிளேக் நோய், பன்றிக்காய்ச்சல், சிக்குன் குனியா, பறவைக் காய்ச்சல் போன்ற நோய் பரப்பும் வைரஸ் எல்லாமே விலங்குகளிடமிருந்து பரவியவைதான். இப்போது நாய்களிடமிருந்து பரவும் ஒரு வகை வைரஸ் சிங்கங்களைக் குறி வைத்திருக்கிறது. 

வைரஸ் பரவிய கிர்  சரணாலயம்

தான்சானியாவில் உள்ள செரெங்கெட்டி  தேசிய பூங்காவில் 1994-ம் வருடம் பரவிய கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் என்கிற நோய் பரவியதால் மொத்த சிங்கங்களின் எண்ணிக்கையில் சுமார் 30 சதவிகித சிங்கங்கள் வெறும் 15 நாட்களில்  இறந்து போனது. இந்த எண்ணிக்கை அங்கிருந்த மொத்த எண்ணிக்கையில் 1000. இந்தச் சிங்கங்களின் இறப்பிற்குக் காரணமாக அப்போது சொல்லப்பட்டது கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (Canine distemper virus). இது  பூனைகள் மற்றும் நாய்களிடமிருந்து பரவும் ஒரு வகை வைரஸ். காடுகளை விட்டு வெளியே வரும் சிங்கங்களை இவ்வகை வைரஸ்கள் தாக்குகின்றன. வழக்கமாகச் சிங்கங்களின் இரையைச் சிங்கத்தோடு சேர்த்து நாய்களும் உணவாக எடுத்துக் கொள்கின்றன. இதன் மூலம் வைரஸ்கள் சிங்கங்களை எளிதாகத் தாக்கிவிடுகின்றன. சுமார் 24 ஆண்டுகள் கழித்து அதே வைரஸ் இப்போது இந்திய சிங்கங்களை காவு வாங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகள் சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது. ஆசிய சிங்கங்களின் கடைசி புகலிடமாக இது கருதப்படுகிறது. சுமார் 1412 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள் உள்ளன. மே 2015 அன்று மேற்கொண்ட 14-வது ஆசியச் சிங்கங்களின் கணக்கெடுப்பின்படி, கிர் தேசியப் பூங்காவில் 523 சிங்கங்கள் உள்ளன. அவற்றில் ஆண் சிங்கங்கள் 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் இளஞ்சிங்கங்கள் 213 ஆக உள்ளன. ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. 

இந்நிலையில் கிர் காட்டுப்பகுதியில் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையில் மட்டும் 11 சிங்கங்கள் வரை உயிரிழந்தன. சிங்கங்கள் தங்களுக்குள் போட்டுக்கொள்ளும் சண்டையினாலும், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்த் தொற்று காரணமாகவும் பலியாகியுள்ளதாக வனத்துறை தரப்பிலும் கால்நடை மருத்துவர்கள் தரப்பிலும் அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில நாட்களில் மீண்டும் 3 சிங்கங்கள் உயிரிழந்தன. இது குறித்து ஆராய மாநில அரசு  சிறப்பு குழுக்களை அமைத்தது. இதற்கிடையே, கிர் வனப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த 9  சிங்கங்கள் மீட்கப்பட்டு மருத்துவ  சிகிச்சை அளிக்கப்பட்டன. ஆனால், இந்த 9 சிங்கங்களும் பரிதாபமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. இதனால், உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 23 ஆக இருந்தது.

 

 

மொத்தம் 20  நாட்களில் 23  சிங்கங்கள் இறந்துள்ளது வனத்துறையினர் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதனிடையில் அம்மாநில வனத்துறை அமைச்சர் கன்பத் வசவா செய்தியாளர்களிடம் பேசும் பொழுது "இறந்த 11 சிங்கங்களைச் சோதனை செய்ததில், 4 மாதிரிகளில் கெனைன் டிஸ்டெம்பர் வைரஸ் தாக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது" எனத் தெரிவித்தார். மேலும் சிங்கங்களை சோதனை செய்யவும் அவற்றிற்கு சிகிச்சையளிக்கவும் அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். இந்த நோயில் இருந்து சிங்கங்களை மீட்க அரசு அமைத்த குழுவில் சுமார் 550 பேர் இடம்பெற்றிருந்தனர். உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆய்வக கழகத்தில் இருந்து 5 நிபுணர்கள், டெல்லி உயிரியல் பூங்காவில் இருந்து 5 நிபுணர்கள், மற்றும் குஜராத் மாநிலத்திலிருந்தும் பல நிபுணர்கள் இந்தக் குழுக்களில் இடம் பெற்றுள்ளனர். கிர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 3,000 சதுர கி.மீ பகுதிகிளை இந்தக் குழுக்கள் சோதனை செய்தன. இதில் வெறும் 9 சிங்கங்கள் மட்டுமே நோய்வாய்ப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 4 சிங்கங்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. மீதமுள்ள 5 சிங்கங்கள் மீட்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.

இப்போது தீவிர கண்காணிப்பில் இருக்கிறது கிர்…!


டிரெண்டிங் @ விகடன்