சினிமா
தொடர்கள்
Published:Updated:

நேர் கோணல்

நேர் கோணல்
பிரீமியம் ஸ்டோரி
News
நேர் கோணல்

வாரா வாரம் வெச்சு செய்வோம்!கொஸ்டீன் குமார், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

நிருபர் : ``சார் வணக்கம். குட்டிக்கதைதான் உங்க ஸ்பெஷல். ஒரு குட்டிக்கதையோட இந்தப் பேட்டியை ஆரம்பிப்போம். ஒரு குட்டிக்கதை சொல்லுங்க சார்?’’

எடப்பாடி : ``வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும்!’’

நேர் கோணல்

நிருபர் : ``குட்டிக்கதை சொல்வீங்கன்னு நினைச்சேன். இவ்ளோ குட்டியா கதை சொல்வீங்கன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. ‘மோடி சொன்னதால்தான் நான் அமைச்சரானேன்’னு ஓ.பன்னீர்செல்வம் சொல்லியிருக்காரே?’’

எடப்பாடி : ``சசிகலா சொல்லித்தான் முதலமைச்சர் ஆனேன்னு நான் என்னைக்காவது சொல்லியிருக்கேனா?’’

நிருபர் : ``நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே?’’

நேர் கோணல்

எடப்பாடி : ``ஒரு கதை சொல்றேன் கேளுங்க. ஒரு ஊர்ல ஒரு பாட்டி பானிபூரி சுட்டுக்கிட்டிருந்தாங்க. ஒரு காக்கா, அவங்ககிட்ட இருந்து ஒரு பூரியைத் திருடிட்டுப்போயிடுச்சு!’’

நிருபர் : ``சார், இதை நான் சின்ன வயசுலேயே படிச்சுட்டேன்.’’

எடப்பாடி : ``அது வேற கதை. அந்தக் கதையில பாட்டி வடைதான் சுட்டிருப்பாங்க. தீயசக்தி கருணாநிதி ஆட்சிக்காலத்துல பாடப்புத்தகத்துல வெச்ச கதை அது. இந்தக் கதை புரட்சித்தலைவி, தங்கத்தாரகை, இதயதெய்வம் அம்மாவோட ஆன்மா எனக்குள்ள புகுந்து சொன்ன கதை. சரி, கதையைக் கேளுங்க. பானிபூரியைத் திருடிட்டுப்போன காக்கா, மரத்துமேல உக்காந்துச்சு. அப்போ அங்கே வந்த நரி, ‘உனக்கு இங்கிலீஷ்ல பிடிக்காத ரெண்டு எழுத்துகள் என்ன?’ன்னு கேட்டுச்சாம். காக்கா, ‘ஆர், கே’ன்னு சொல்லுச்சாம். கீழே விழுந்த பூரியைத் தூக்கிட்டு நரி ஓடிடுச்சாம்.’’

நிருபர் : ``புரியலையே?’’

எடப்பாடி : ``எந்தக் கேள்வி கேட்டாலும் சம்பந்தம் இல்லாம பதில் சொல்லணும்கிறதுக்காகத்தான் இவ்ளோ நீளமா கதை சொன்னேன். கடைசியில என்னையும் தெளிவா விளக்கவெச்சுட்டீங்களே!’’

நிருபர் : ``ஆர்.கே - ன்னு சொல்லவும் ஞாபகம் வருது. ‘ஆர்.கே.நகர் எலெக்‌ஷன்ல தோற்கக் காரணமே கட்சிக்காரங்கதான்’னு மதுசூதனன் கடிதம் எழுதியிருந்தாரே, படிச்சீங்களா?’’

எடப்பாடி : ``காவிரிப் பிரச்னை தொடங்கி நீட் தேர்வு வரைக்கும் நான் எழுதின கடிதத்தைப் பிரதமர் படிச்சாரா? அவரைப் படிக்கச் சொல்லுங்க, நான் படிக்கிறேன்!’’

நிருபர் : ``என்ன சார், திடீர்னு ‘நாயகன்’ கமல் மோடுக்கு மாறிட்டீங்க? ஆமா, உங்க ஆட்சியைக் கடுமையா விமர்சிக்கிற கமலை எப்படி எதிர்கொள்ளப்போறீங்க?’’

நேர் கோணல்

எடப்பாடி : `` ‘சதி லீலாவதி’ படத்தில கமல் கேரக்டர் பேர் பழனிசாமி. தமிழக முதல்வர் பேரை வெச்சு காமெடி பண்ணியிருக்கார்னு இப்போ கேஸ் போடப்போறோம். குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் வாய்ப்பிருக்கு. அதை கோர்ட் ரத்துசெய்யவும் வாய்ப்பிருக்கு.’’

நிருபர் : ``குழப்புறீங்களே... ‘நடக்கிறது அ.தி.மு.க. ஆட்சி இல்லை, பி.ஜே.பி. ஆட்சி’னு எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறாங்களே?’’

எடப்பாடி : ``ஆட்சின்னு ஒண்ணு நடக்குதுன்னு அவங்க ஏத்துக்கிட்டதுக்கு நன்றிகள்.’’

நிருபர் : ``உங்களுக்கும் பன்னீர்செல்வத்துக்கும் பிரச்னைகள் ஆரம்பமாயிடுச்சுன்னு சொல்றாங்களே?’’

எடப்பாடி : ``பிரச்னைகள் இல்லாம இருந்தாத்தான் ஆரம்பமாகும். எப்பவுமே பிரச்னைகள் இருந்தா ஆரம்பிக்கிறதுல என்ன இருக்கு, முடியறதுல என்ன இருக்கு?’’

நிருபர் : ``தத்துவம் சார். நீங்க முதல்வராகி ஒரு வருஷம் ஆச்சு. இதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க?’’

எடப்பாடி : (குலுங்கிக் குலுங்கி அழுகிறார்)

நேர் கோணல்

நிருபர் : ``கண்ணைத் துடைச்சுக்கங்க சார். எனக்கே அழுவாச்சியா வருது. கடைசியா ஒரு கேள்வி. கம்பராமாயணத்தை எழுதியது யார்?’’

எடப்பாடி (கோபமாக): ``உங்களைக் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குறேன்!’’

நிருபர் : சார், நான் ரிப்போர்ட்டர். உங்க கட்சிக்காரன் கிடையாது.

எடப்பாடி : வார்டன்னா அடிப்போம். எல்லோரையும் நீக்குவோம்!

நேர் கோணல்

நிருபர் : பேர்லயே இருக்கு. சின்னப்பையனைக் கூப்பிட்டு, ‘கம்பராமாயணத்தை எழுதினது யார்?’னு கேட்டா, அவனே சொல்வான். தமிழ்நாட்டோட முதல்வர் நீங்க. ‘கம்பராமாயணத்தை எழுதினது சேக்கிழார்’னு சொன்னா எப்படி சார் ஏத்துக்க முடியும்?

எடப்பாடி : நல்லா கேட்டுக்கங்க. அம்மா முதல்வராகணும்னுதான் ஓட்டு போட்டுத் தேர்ந்தெடுத்தீங்க. ஆனா திடீர்னு பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். ஏத்துக்கிட்டீங்க. அப்புறம் முன்னாள் சின்னம்மா, இந்நாள் ஜெயிலம்மா சசிகலா முதல்வராகப் பார்த்தாங்க. உங்களால தடுக்கமுடியலை. அதுக்குப்பிறகு இப்போ என்னையும் முதல்வரா ஏத்துக்கிட்டீங்க. நீங்க ஓட்டு போடாத  இரண்டு பேரையே முதலமைச்சரா ஏத்துக்கிட்ட உங்களால கம்பராமாயணத்தை எழுதினது சேக்கிழார்னு ஏத்துக்கிறதுல என்ன பிரச்னை?

(நிருபர் மயங்கிவிழுகிறார்)