``என்னைக் கருணைக்கொலை செய்யுங்கள்!’’ என்ற திருநங்கை ஷானவி இப்போது எப்படி இருக்கிறார்? | How is Shanavi now, the transgender who sent mercy killing petition to Indian government

வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (06/10/2018)

கடைசி தொடர்பு:17:23 (06/10/2018)

``என்னைக் கருணைக்கொலை செய்யுங்கள்!’’ என்ற திருநங்கை ஷானவி இப்போது எப்படி இருக்கிறார்?

தன் உழைப்பிலும் தன்மானத்துடனும் வாழ, பிடித்த வேலையில் சேர்வதற்குப் போராடும் ஷானவி, தற்போது எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம்.

கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு முன்னர், குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்ட ஒரு மனு, பலரின் மனங்களை உருக்கி அதிர வைத்தது. திருநங்கை ஷானவி, தன்னை கருணைக் கொலை செய்துவிடுமாறு அளித்த மனு அது. `திருநங்கை' என்கிற காரணத்தால் மட்டுமே அவர்கள் புறக்கணிக்கப்படுவது எவ்வகையில் நியாயம் எனப் பலரும் அவருக்கு ஆதரவு குரல் கொடுத்தார்கள். அப்போது, அவர் நமக்குப் பேட்டி அளித்திருந்தார்.

ஷானவி

அதில், ``திருநங்கையாக மாறின பிறகு பல்வேறு பிரச்னைகள், சிரமங்களைக் கடந்துதான் பொறியியல் பட்டப்படிப்பை முடிச்சேன். ஒரு வருஷம் தனியார் நிறுவனந்தில் வேலை பார்த்தேன். பொருளாதார ரீதியா வளரணும் என்கிற ஆசையில், ஏர் இந்தியா வேலைக்குப் பதிவு செஞ்சேன். நேர்காணலில் நல்லா பர்ஃபார்ம் பண்ணியும் மூன்று முறை என்னை நிராகரிச்சாங்க. அப்புறம்தான் என்னுடைய பாலினம்தான் நிராகரிப்புக்குக் காரணம்னு தெரிஞ்சது. நேரடியா அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்களைச் சந்திக்க முயன்றும் முடியலை. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு பதிவு செஞ்சேன். அதை விசாரித்த நீதிபதி, ஏர் இந்தியாவிடம் பதில் விளக்கம் கேட்டுத் தீர்ப்பு வழங்கினார். ஆனால், அந்த வழக்குக்கான சரியான பதிலையும் என்னால் பெறமுடியலை.

இப்படி என் உரிமைக்காகத் தினம் தினம் போராடியே சேமிச்சு வெச்சிருந்த பணம் எல்லாம் தீர்ந்துபோச்சு. எனக்கும் மற்றவர்கள்போல இந்தச் சமூகத்தின் சக மனுஷியாக வாழணும்னு ஆசை. பெரிய வசதி வேண்டாம். என் சராசரி தேவைக்கு நானே உழைச்சு சம்பாதிச்சா போதும்னு நினைச்சேன். அதுக்கு இந்தச் சமூகம் கொடுத்த பரிசு நிராகரிப்பு. அடிப்படைத் தேவையையே பூர்த்தி செய்துக்க வழியில்லாமல் ஏன் வாழணும்? அதனால்தான், என்னைக் கருணைக்கொலை பண்ணச்சொல்லி குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பினேன். இது தப்பா? போராடறதுக்கு உடம்பில் தெம்பு இருந்தாலும், இந்தச் சமூகம் என்னை வாழவிடாமல் துரத்தித் துரத்தி மனசைக் கொல்லுது. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க?'' எனக் கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

தன் உழைப்பிலும் தன்மானத்துடனும் வாழ, பிடித்த வேலையில் சேர்வதற்குப் போராடும் ஷானவி, தற்போது எப்படி இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம்.

திருநங்கை

``என் சார்பாக வாதாடின வக்கீல், 2014-ல் வந்த ஆணைப்படி, திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கணும். இவ்வளவு நாள் அவங்களை ஏன் அலைக்கழிக்கிறீங்கன்னு கேட்டார். ஒவ்வொருமுறையும் வழக்கைத் தள்ளித் தள்ளிப் போடறாங்க. என் பர்சனல் தேவைகளைப் பூர்த்திசெஞ்சுக்க முடியாமல் தொடர்ந்து கஷ்டப்படுறேன். இந்தப் பிரச்னை வெளியே தெரியுறதுக்கு முன்னாடி, மும்பையில் மாடலிங் பண்ணிட்டிருந்தேன். போராட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அந்த வாய்ப்பும் என்னைவிட்டு போயிருச்சு. என் ஃப்ரெண்ட்ஸ் கொஞ்ச பேர் செய்யும் உதவிகளில் வாழ்க்கை நகருது. பெங்களூரில், பாஸ்கர் என ஒரு நண்பர் இருக்கார். அவர்தான் என் அடிப்படைத் தேவைகளுக்கு உதவி செய்றார். என்னை கருணைக்கொலை செய்ய, குடியரசுத் தலைவருக்குக் கொடுத்த மனுவுக்கு இப்போவரை பதிலே இல்லை. கேஸையும் தள்ளிப்போடுறாங்க. போன வாரம், மனித உரிமைகள் ஆணையத்தை அணுகினேன். 'கோர்ட்டுல கேஸ் இருக்கும்போது எங்களால் எந்த உதவியும் பண்ண முடியாது'னு சொல்லிட்டாங்க. நான் என்னதான் பண்றது? போராடித்தான் என் உரிமையைப் பெறணும்னா, தொடர்ந்து போராடவும் தயாரா இருக்கேன்" என்கிறார் ஷானவி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்