காற்றாலைகளுக்கும் பருவநிலை மாற்றத்தில் பங்கு இருக்கிறதா? - அதிர்ச்சி ஆய்வு | Wind mills also contribute to climate change

வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (06/10/2018)

கடைசி தொடர்பு:16:55 (06/10/2018)

காற்றாலைகளுக்கும் பருவநிலை மாற்றத்தில் பங்கு இருக்கிறதா? - அதிர்ச்சி ஆய்வு

மரபுசாரா ஆற்றல் மூலங்கள்தாம் புவிவெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் போன்றவற்றுக்குத் தீர்வு என்கின்றனர் சூழலியாளர்கள். ஆனால், அதையும் மறுக்கும் விதமாகவும், வியப்பூட்டும் வகையிலும் இருக்கிறது புதிய ஆய்வு ஒன்று.

காற்றாலைகளுக்கும் பருவநிலை மாற்றத்தில் பங்கு இருக்கிறதா? - அதிர்ச்சி ஆய்வு

லகம் தற்பொழுது எதிர்கொள்ளும் மிக முக்கிய சுற்றுச்சூழல் பிரச்னைகளில் ஒன்று பருவநிலை மாற்றம். கடந்த 100 வருடங்களில் அதன் விளைவால் ஏற்படும் பாதிப்புகள் பல்வேறு இடங்களில் உணரப்பட்டு வருகின்றன. துருவப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகுகின்றன; அதன் காரணமாக கடல் நீர் மட்டம் உயர்கிறது. மற்றொரு பக்கம் மழைப் பொழிவு குறைகிறது, சில இடங்களில் வழக்கத்துக்கு மாறாக அதிகமாக மழை பெய்கிறது. இதுபோல திடீர் இயற்கை சூழலியல் மாற்றங்களுக்கு விஞ்ஞானிகள் பருவநிலை மாற்றத்தைத்தான் காரணமாகக் கூறுகிறார்கள்.

காற்றாலை

பூமியின் சராசரி வெப்பநிலையானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதுதான் பருவநிலை மாற்றங்களுக்கு மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது. ஆனால், பூமியின் வெப்பநிலை திடீரென உயரவில்லை. அதற்குக் காரணமாக இருப்பது மனிதர்களின் செயல்பாடுகள்தாம். அதிலும் புதைபடிம எரிபொருள்கள் பயன்பாடு மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கடந்த நூற்றாண்டிலிருந்து புதைபடிம எரிபொருள்களின் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்தது. ஒவ்வொரு நாளும் பல டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை மின்சாரம் தயாரிக்கவும், தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. பல மில்லியன் கணக்கான வாகனங்கள் உலகம் முழுவதிலும் இயக்கப்படுகின்றன. ஆனால், புதைபடிம எரிபொருள்களின் பயன்பாட்டை ஒரே நாளில் நிறுத்துவது சாத்தியமில்லை. எனவே, இது போன்ற சிக்கல்களுக்கு மாற்றாக இருப்பது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள்தாம். இதன் மூலமாகக் கணிசமான அளவில் புதைபடிம எரிபொருள்கள் பயன்பாட்டைக் குறைக்க முடியும்.

இருக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களில் முதன்மையாகப் பரிந்துரைக்கப்படுவது காற்றுதான். உலகம் முழுவதிலும் பல்வேறு பயன்பாடுகளுக்காகக் காற்றாலைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலமாகக் கணிசமான அளவில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாகச் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பது இதன் சிறப்பு. ஆனால், பருவநிலை மாற்றத்தில் காற்றாலைகளுக்கும் முக்கியப் பங்குண்டு என அதிர்ச்சியளித்திருக்கிறது ஓர் ஆய்வறிக்கை.

காற்றாலைகளால் பருவநிலை மாற்றம் ஏற்படுவது உண்மையா?

காற்றாலை

காற்றாலைகளை ஓரிடத்தில் நிறுவிய பிறகு அது இயங்குவதற்குக் காற்று மட்டுமே போதுமானதாக இருக்கும். அதன் பிறகு நீண்ட காலத்துக்கு வேறு ஆற்றல் எதுவும் தேவையின்றி அது செயல்படும். ஆகவே இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்த வித பாதிப்புகளும் ஏற்படாது. ஆனால் உண்மையில் அப்படி நடப்பதில்லை என்கிறார்கள் டேவிட் கீத் (David Keith) மற்றும் லீ மில்லர் (Lee Miller) என்ற இரு ஆராய்ச்சியாளர்கள். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இவர்கள் இந்தப் புதிய தகவலை ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவர்கள் நடத்திய ஆய்வின்படி காற்றாலைகளில் பொருத்தப்பட்டுள்ள இறக்கைகள் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை மீண்டும் வளிமண்டலத்துக்குத் திருப்பி அனுப்புகின்றன. இந்த நிகழ்வு பருவ நிலை மாற்றத்தில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது என்கிறார்கள் இவர்கள். ஒரு வேளை ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் காற்றாலை மூலமாகப் பெறப்படும் மின்சாரத்தை அளித்தால் காற்றாலையைச் சுற்றியுள்ள நிலப்பரப்பின் வெப்பநிலை 0.54 செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும். அதே நேரத்தில் அமெரிக்கக் கண்டத்தின் வெப்பநிலை 0.24 செல்சியஸ் அளவுக்கு அதிகரிக்கும் எனவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

சோலார் பேணல்

இந்த ஆய்வுக்காக இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளும் சேர்த்தே ஆராயப்பட்டுள்ளன. ``காற்றின் மூலமாக நிலக்கரியால் உண்டாகும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்க முடியும்தான். ஆனால், அதே நேரத்தில் காற்றாலைகளால் ஏற்படும் பாதிப்புகளையும் கணக்கில் கொள்ளாமல் இருக்க முடியாது" என்கிறார் டேவிட் கீத். சோலார் பேனல்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும்போது 10 மடங்கு குறைவான தாக்கமே இருக்கும் என்கிறார்கள். அதே சமயத்தில் இந்த முடிவுக்குச் சிலர் எதிர்ப்பும் தெரிவித்திருக்கிறார்கள். ``ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முடிவுகள் யூகத்தின் மூலமாகவே எடுக்கப்பட்டது. ஆகவே இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று" என்கிறார் நியூயார்க்கில் இருக்கும் அல்பேனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெஃப் பிரெட்மென் (Jeff Freedman). புதைபடிம எரிபொருள்களுக்கு மாற்றாகக் காற்றாலைகள் உலகம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில் இந்தப் புதிய அறிக்கை பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. நிலக்கரி, பெட்ரோலியம் போன்ற மரபுசார் ஆற்றல்மூலங்களைத் தாண்டி உலகம் முழுமையும் மரபுசாரா ஆற்றலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது, இதுபோன்ற ஆய்வு அறிக்கைகள் வருவது சாதாரணமானதே. இதன் உண்மைத்தன்மையை விஞ்ஞானிகள்தான் கண்டறிந்து உறுதிப்படுத்தவேண்டும். 


டிரெண்டிங் @ விகடன்