சினிமா
தொடர்கள்
Published:Updated:

கோலியாத்தை வீழ்த்திய கில்லிகள்!

கோலியாத்தை வீழ்த்திய கில்லிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
கோலியாத்தை வீழ்த்திய கில்லிகள்!

மு.பிரதீப் கிருஷ்ணா, ரமணி மோகனகிருஷ்ணன், படங்கள்: க.பாலாஜி

கிரேட் `கிக்’குகளால் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்று திரும்பியிருக்கிறது தமிழக மகளிர் கால்பந்து அணி!

இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட்தான் என்றாலும், வடகிழக்கு இந்தியாவுக்குக் கால்பந்துதான் கடவுள். அதுவும் மணிப்பூர், இந்திய மகளிர் கால்பந்தின் ரியல் மாட்ரிட். 22 ஆண்டுகளில் 18 முறை சாம்பியன், 3 முறை ரன்னர் அப். இப்படி ‘சாம்பியனுக்கெல்லாம் சாம்பியன்’ ஆன மணிப்பூர் அணியைத் தோற்கடித்துத்தான் சாம்பியன் ஆகியிருக்கிறது தமிழ்நாடு.

 தமிழ்நாடும் மணிப்பூரும் மோதிக்கொண்ட இறுதிப்போட்டி கிட்டத்தட்ட அர்ஜென்டினாவும் ஜெர்மனியும் விளையாடியதுபோல் அவ்வளவு விறுவிறுப்பு... அவ்வளவு பரபரப்பு!

கோலியாத்தை வீழ்த்திய கில்லிகள்!

தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இதுவரையிலான போட்டிகளில் கொட்டிய உழைப்பைவிட இறுதிப்போட்டிக்கு நூறு மடங்கு உழைப்பைக் கொட்டவேண்டும் என்ற வைராக்கியத்துடன் களமிறங்கியிருந்தது மணிப்பூர். இறுதிப்போட்டிக்கு முன்புவரை 35 கோல்கள் அடித்திருந்தது மணிப்பூர். அரையிறுதிவரை வெறும் ஒரு கோலினை மட்டுமே எதிரணிக்கு விட்டுத்தந்திருந்த சாதனையும் அவர்கள் வசமே. மணிப்பூர் அணியில் இருந்த பல வீராங்கனைகள் இந்திய அணிக்காக சர்வதேசப்போட்டிகளில் விளையாடுபவர்கள். இத்தகைய அணியை வீழ்த்த வேண்டும் என்றால், 90 நிமிடங்களும் போரிட வேண்டும். கட்டாக்கின் வெயிலைத் தாக்குப்பிடித்து மணிப்பூரின் கிக்குகளைத் தடுத்து, கோல்களை அடித்துத் தமிழகம் வெற்றிபெறுவது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்றுதான் நினைத்தார்கள் கால்பந்து ரசிகர்கள். ஆனால், நடந்தது வேறு!

இறுதிப்போட்டியின் மூன்றாவது நிமிடத்தில் முதல் கோலினை அடித்து மணிப்பூர் வீராங்கனைகளுக்கு ஷாக் கொடுத்தார் இந்துமதி. முதல் பாதியின் முடிவிலேயே 40-வது நிமிடத்தில் மணிப்பூர் அணிக்கு அடுத்த ஷாக்  இந்திராணிமூலம் நிகழ்ந்தது. முதல் பாதியில் மணிப்பூர் அணியை எந்த கோலும் அடிக்கவிடாமல், இரண்டு கோல்கள் முன்னிலையில், முடக்கியது தமிழக அணி. இரண்டாவது பாதி தொடங்க, 57-வது நிமிடத்தில் ரத்தன்பாலா மணிப்பூருக்காக ஒரு கோல் அடித்தார். ஆனால், எவ்வளவோ முயன்றும் அடுத்த கோலை மணிப்பூரால் அடிக்க முடியவில்லை. யாருமே எதிர்பார்க்காதவர்கள் சாம்பியன் ஆனார்கள்.

இந்த வரலாற்று வெற்றிக்குப் பின்னால் இருப்பவர் தமிழக அணியின் பயிற்சியாளர் முருகவேந்தன். ‘`கோவா அணியுடனான லீக் போட்டி டிராவில் முடிந்தது. கோல் வித்தியாச அடிப்படையில் கோவா காலிறுதிக்கு முன்னேறி, தமிழ்நாடு வெளியேற வாய்ப்பு இருந்தது. கடைசிப் போட்டி உத்தரகாண்ட் அணியுடன். வெற்றி மட்டுமே போதாது; அதிக கோல் அடிக்கவேண்டும். உத்தரகாண்டுக்கு எதிரான ஆட்டத்தின் பாதியில், நடுக்களத்தில் ஆடிய இந்துமதியை ஸ்ட்ரைக்கராக்கி அணியின் ஃபார்மேஷனை மாற்றினோம்.  அந்தப் போட்டியில் 11 கோல் அதிகம் பெற்றுத் தமிழக அணி வெற்றிபெற்றதால், கோல் வித்தியாச அடிப்படையில் வெளியேறியது கோவா! அதே பிளானைத் தொடர்ந்து ஃபாலோ செய்தோம்” - முருகவேந்தனின் முகத்தில் இன்னும் வெற்றியின் பெருமையும் உற்சாகமும் குறையவில்லை.

``கோச் எப்போதும் எங்களிடம் ஆலோசிப்பார். எங்களுக்கு எது பிடித்திருக்கிறது, எது வசதியாக இருக்கிறது என்று தெரிந்துகொண்டு ஒரு டீமாகத்தான் முடிவெடுப்போம்” என்று கோச்சைப் பற்றிப் பூரிக்கும் தமிழக அணியின் கேப்டன் நந்தினி, மிகவும் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்தவர். ஒன்பதாம் வகுப்பிலிருந்து கால்பந்து ஆடி வருபவர், தற்போது இளங்கலை உடற்கல்வி பயின்றுவருகிறார்.

நந்தினி மட்டுமன்றி டீமில் இருக்கும் அனைவருமே பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்தவர்கள்தாம். இந்துமதியைத் தவிர மற்ற எல்லோருமே ஒற்றைப் பெற்றோரால் வளர்க்கப்பட்டவர்கள். அதில் பலர், தந்தையை இழந்தவர்கள்.

கோலியாத்தை வீழ்த்திய கில்லிகள்!

``என் அப்பா இறந்த பிறகு, என்னையும் என் அக்காவையும் என் அம்மா `அரசு சேவை இல்லத்தில்’ சேர்த்துவிட்டார்.  மஞ்சக்குப்பத்தில் உள்ள  அரசுப் பள்ளியில் படித்தபோதுதான், மாரியப்பன் சார், பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியராக வந்தார். ஆம்பளப் பசங்களுக்குக் கால்பந்துப் பயிற்சி அளித்தபோது,  எங்களுக்கும் கற்றுத்தரச்சொல்லிக் கேட்டோம். உடனே சம்மதித்தார். பின்னர் அவருடைய உதவியினால் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தேன். ஒரு வாடகை வீட்டினை எடுத்துக்கொடுத்து, அவரே எங்களுக்குப் பயிற்சி வழங்கினார். அதில் பெரும்பாலானவர்கள், சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலூர் குழந்தைகள். அவருடைய மொத்த சம்பளத்தையும் எங்களுடைய பயிற்சிக்காகவே செலவிட்டார். எங்களிடம் எப்போதும், ‘இதை நீங்கள் எனக்குத் திருப்பிக்கொடுக்க வேண்டாம்; இதேபோல இரண்டு பேருக்காவது படிப்புக்கும் பயிற்சிக்கும் நீங்கள் உதவிசெய்ய வேண்டும்’ என்பார்.” - நெகிழும் டீமின் கோல் கீப்பர் வினிதாவையும் சேர்த்து, கோச் மாரியப்பனின் வளர்ப்புகள் மட்டும் தற்போதைய தமிழக அணியில் மூன்று பேர் இருக்கிறார்கள். வினிதா, இந்துமதி, சரண்யா என இந்த மூவருமே தமிழகக் காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாகப் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்துமதியின் அப்பாவுக்குக் கூலி வேலை; அம்மா வீட்டுவேலை செய்பவர். ஏழாம் வகுப்பிலிருந்து கால்பந்து விளையாடிவரும் இந்துமதி, இந்தியாவின் சர்வதேசக் கால்பந்து வீராங்கனை. ‘`அந்த நாள்களில் பெரிதும் உதவியது மாரியப்பன் சார்தான். அவர்தான் பஸ் சார்ஜைக்கூடக் கொடுத்துப் பயிற்சிக்கு வரவைத்தார். இந்தியாவுக்காக ஏசியன் கேம்ஸ், சாஃப் கேம்ஸ் (SAF) ஆகிய தொடர்களிலும், சீனாவுடனான கேம்ப்புக்கும் 2014-16ஆம் ஆண்டில் சென்று வந்தேன். 12 நாள்கள் பயிற்சியுடன்தான் இப்போது தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்குப் போனேன்’’ எனும் இந்துமதியின் ஸ்ட்ரைக்கிங் ஆட்டம் இந்தியக் கால்பந்து உலகையே மிரட்டியது. தொடரில் தமிழக அணிக்காக அதிக கோல்களை அடித்தவர் இந்துமதியே!

இறுதி ஆட்டத்தில் வெற்றியை உறுதி செய்ததில் இந்திராணியின் பங்கும் முக்கியமானது.  ``ஒன்பதாம் வகுப்பிலிருந்து கால்பந்து விளையாடுகிறேன். பத்தாம் வகுப்பிலேயே இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பாஸ்போர்ட் இல்லாததால் வெளிநாட்டுக்குச் செல்ல முடியவில்லை. தற்போது இந்தியாவின் சாம்பியனாக, அதுவும் மணிப்பூரைத் தோற்கடித்திருப்பதில் செம மகிழ்ச்சி”  என்னும் இந்திராணியின் ஃபேவரிட், தலையால் முட்டி பந்தினை வலைக்கு நகர்த்தும் ‘ஹெட்டர்’தான். செமி ஃபைனல் மற்றும் ஃபைனல் இரண்டிலுமே இந்திராணியின் கோல்கள் ஹெட்டர்களே!

விளையாட்டால் படிப்பு பாதிக்காது என்பதற்கு, இந்த டீம் ஸ்ட்ரைக்கிங் சாட்சி.  ஊடகம், உடற்பயிற்சி, பொருளாதாரம் என்று ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஓர் இளங்கலைப் பட்டத்தையாவது கையில் வைத்திருக்கிறார்கள்.

பயிற்சியாளர், இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்து அசத்தியவரான இந்துமதி, 5 கோல்கள் அடித்த கேப்டன் நந்தினி, இறுதிப் போட்டியில் வெற்றிக்கான கோலை அடித்ததோடு தடுப்பாட்டத்தில் அரணாய் நின்ற இந்திராணி, அதீத உழைப்பைக் கொட்ட வேண்டிய நடுக்களத்தில் ஜொலித்த கீதாஞ்சலி, கோல்போஸ்டில் கில்லியாக நின்ற வினிதா என ஒவ்வொருவரும் தங்களின் சாதனைகளைத் தனித்துப் பேசாமல், ``இது எங்கள் கூட்டு முயற்சிக்கான வெற்றி” என்று மற்றவர்களின் உழைப்புக்கும் மரியாதை செலுத்துவதில் ஓர் அறம் இருக்கிறது. இந்த அணியின் ஸ்டார் பெர்ஃபாமர் என்று யாரையும் அவர்கள் தனித்துக்காட்ட விரும்பவில்லை.

தமிழகப் பெண்கள் எப்படி சாம்பியன் ஆனார்கள் என்பதற்கான காரணம் புரிகிறதா?!

ஆசான்கள்!

தமிழகக்  கால்பந்து  அணியின் பயிற்சியாளர் முருகவேந்தன், ஒன்பதாம் வகுப்பிலிருந்தே  கால்பந்து விளையாடிவருபவர். இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர். ஒரு தனியார் கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குநராகப் பணிபுரிந்தவர், தற்போது தமிழ்நாட்டு விளையாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் ‘ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் ஆஃப் எக்செலன்ஸ்’ஸின் பயிற்றுநராக இருக்கிறார்.

கோலியாத்தை வீழ்த்திய கில்லிகள்!

கோச் மாரியப்பன்  எட்டு வயதிலிருந்து கால்பந்து விளையாடிவருபவர். அரசுப் பள்ளியில் 27 வருடங்கள் உடற்பயிற்சி இயக்குநராகவும், 8 வருடங்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் வேலைபார்த்து ஓய்வுபெற்றவர். ‘`பி.இ.டி வகுப்பில் நான் ஆண்களுக்குக் கால்பந்து சொல்லிக்கொடுக்கும்போது, அரசுக் குழந்தைகள் காப்பகத்திலிருந்து வந்த பெண் குழந்தைகள் சிலர் மைதானத்துக்கு வெளியே முட்டிபோட்டபடி ஆட்டத்தை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி இருக்காது. ஒருநாள் அவர்களே, ‘எங்களுக்கும் கத்துக்கொடுங்களேன் சார்’ என்று கேட்க, அப்போது தொடங்கியதுதான் இந்தப் பயிற்சிகள். விளையாடும்போது அவர்கள் முகத்தில்  மகிழ்ச்சி தோன்றுவதைப் பார்த்தேன். ஒருகட்டத்தில் படிப்படியாக, பையன்களுக்குக் கற்றுக்கொடுப்பது குறைந்து, பெண்களுக்கு மட்டுமே கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன். எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது” என்று மிகவும் எளிமையாகப் பேசும் மாரியப்பன், 11 சர்வதேச வீராங்கனைகளை உருவாக்கியிருக்கிறார். தற்போது பென்ஷன் பணத்தையும் விளையாட்டுப் பயிற்சிக்காகவே செலவிட்டுவருகிறார் மாரியப்பன்.

கோலியாத்தை வீழ்த்திய கில்லிகள்!

* இரண்டே சர்வதேச வீராங்கனைகள்

மணிப்பூர் அணியில் கிட்டத்தட்ட எல்லோருமே சர்வதேச ப்ளேயர்கள். தமிழக அணியில் வினிதாவும் இந்துமதியும் மட்டும் 2016ல் இந்தியாவுக்காக விளையாடிய சர்வதேச வீராங்கனைகள்.

* மாற்றப்பட்ட ஃபார்மேஷன்

 நாக் அவுட் சுற்று வரை 4-2-3-1 என்று இருந்த ஃபார்மேஷனை, நாக் அவுட்டுக்குப் பிறகு 4-4-2 என்று மாற்றியது அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது என்கிறது டீம்!

* எல்லா ஆட்டங்களிலும் கோல் அடித்த இந்துமதி!

 தொடரில் தமிழகம் மொத்தமாக அடித்த கோல்களின் எண்ணிக்கை 25. இதில் எல்லா மேட்சுகளிலும் கோல் அடித்த இந்துமதியின் பங்கு 10.